பயணங்கள்
இல்லாத பாதைகளை
இருப்பதாய் காட்டுகின்றன
கொண்டு சேர்க்கும்
புதிய இடம்
ப்ழைய இடம் என்பதை
பயணங்கள்
நம் சதுரங்க பலகையில்
இன்னும் ஏராளமாய்
காய்களை கொண்டு நிறைக்கின்றன
யாருக்காக யார் ஆடுவது
என்ற குழப்பம்
பயணங்களின் போது சந்திக்கும்
மனிதர்கள்
கடந்த காலத்தில் இருந்து
கால் அயர நடந்து வந்துள்ளனர்
அவர்களுடன் கைகுலுக்கும் போது
காலத்தின் தராசு தடுமாறுகிறது
பயணம் முடிந்து திரும்பும் போது
உலகம்
அதிக அன்பாலும்
அதிக குரூரத்தாலும்
நிரம்பி உள்ளது
நாம் கண்டறிகிறோம்
ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம்
அர்த்தம் இல்லாமைக்கும் ஒரு காரணம்
திரும்பி வந்த பிறகு
உலகிடம்
போதிக்க ஏராளம் உள்ளது
ஒன்றுமே கண்டடையாத போதிலும்
பயணங்களின் முடிவில்
ஒரு சொல் உள்ளது
அதை
மகாசமுத்திரத்தில் ஒழுக விடலாம்
ஆனால்
வஞ்சனை நடந்துள்ளது
அதன் பின்னால் ஒரு சூழ்ச்சி உள்ளது
திரும்பி வந்த பிறகு
வீட்டில் விட்டுச் சென்ற
பொருட்கள்
துடைத்து சுத்தமாய் வைக்கப்பட்டுள்ளன
காற்றோட்டத்தின் சுகந்தம் நிலவுகிறது
கலைக்கப்பட்ட பொருட்கள்
குலைவின் அமைதி மாறாமல்
வீடு
திசை மாறிப் படுத்த
ஒரு மிருகம் போல் உள்ளது
வராந்தா நாற்காலியின் மேலே
பறவைகள் இன்னும் கீச்சிடுகின்றன
மரங்கள் அமைதி காக்கின்றன
