முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயணக் குற்றச்சாட்டுகள்




பயணங்கள்
இல்லாத பாதைகளை
இருப்பதாய் காட்டுகின்றன

கொண்டு சேர்க்கும்
புதிய இடம்
ப்ழைய இடம் என்பதை
மறைக்கின்றன

பயணங்கள்
நம் சதுரங்க பலகையில்
இன்னும் ஏராளமாய்
காய்களை கொண்டு நிறைக்கின்றன
யாருக்காக யார் ஆடுவது
என்ற குழப்பம்

பயணங்களின் போது சந்திக்கும்
மனிதர்கள்
கடந்த காலத்தில் இருந்து
கால் அயர நடந்து வந்துள்ளனர்
அவர்களுடன் கைகுலுக்கும் போது
காலத்தின் தராசு தடுமாறுகிறது

பயணம் முடிந்து திரும்பும் போது
உலகம்
அதிக அன்பாலும்
அதிக குரூரத்தாலும்
நிரம்பி உள்ளது

நாம் கண்டறிகிறோம்
ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம்
அர்த்தம் இல்லாமைக்கும் ஒரு காரணம்

திரும்பி வந்த பிறகு
உலகிடம்
போதிக்க ஏராளம் உள்ளது

ஒன்றுமே கண்டடையாத போதிலும்
பயணங்களின் முடிவில்
ஒரு சொல் உள்ளது
அதை
மகாசமுத்திரத்தில் ஒழுக விடலாம்

ஆனால்
வஞ்சனை நடந்துள்ளது
அதன் பின்னால் ஒரு சூழ்ச்சி உள்ளது

திரும்பி வந்த பிறகு
வீட்டில் விட்டுச் சென்ற
பொருட்கள்
துடைத்து சுத்தமாய் வைக்கப்பட்டுள்ளன

காற்றோட்டத்தின் சுகந்தம் நிலவுகிறது

கலைக்கப்பட்ட பொருட்கள்
குலைவின் அமைதி மாறாமல்

வீடு
திசை மாறிப் படுத்த
ஒரு மிருகம் போல் உள்ளது

வராந்தா நாற்காலியின் மேலே
பறவைகள் இன்னும் கீச்சிடுகின்றன
மரங்கள் அமைதி காக்கின்றன

கருத்துகள்

டக்கால்டி இவ்வாறு கூறியுள்ளார்…
Arumai...

Varigal sinthikka vaikkindrana...
Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
அவர்களுடன் கைகுலுக்கும் போது
காலத்தின் தராசு தடுமாறுகிறது

பயணம் முடிந்து திரும்பும் போது
உலகம்
அதிக அன்பாலும்
அதிக குரூரத்தாலும்
நிரம்பி உள்ளது



......அருமையாக சொல்லி இருக்கீங்க.
gnani இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது. இதற்கு மேல் எதுவும் சொல்லத் தேவைப்படவில்லை. ஞாநி
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி டக்கால்டி மற்றும் சித்ரா
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி திரு ஞாநி அவர்களே
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஒன்று நீங்கள் மனுஷ்யபுத்திரனின் கோஸ்ட் ரைட்டர். இல்லையெனில் உங்களுக்கு மனுஷ் கோஸ்ட் ரைட்டர். மனுஷ்
எழுதுவதே சகிக்க முடியாமல் ஸ்டீரியோ டைப்பில் இருக்கிறது, நீர் உம்ம கவிதையை எழுதாமல் ஏனய்யா அவருடைய கவிதையைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறீரு? இந்த விமர்சனத்தை நக்கல் என்று எடுத்துக்கொள்ளாமல் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் உமக்கும் உம்முடைய கவிதைக்கும் நல்லது. இல்லையெனில் காலம் முழுவதும் மனுஷின் காலடியில் இருந்துகொண்டு காலாவதி ஆகிப்போன அவருடைய கவிதை நடையை நீங்களும் கையில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்.

செல்வகுமார்
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
செல்வகுமார், மனுஷின் ஒரு வாசகனாக இந்த கருத்து, ஒப்பீடு, எனக்கு மகிழ்ச்சி தான் அளிக்கிறது. உங்கள் ஊகத்துக்கு நன்றி. miles to go ... mate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...