நீட்சேயின் “அவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரன்” கதையில் ஜாருதுஷ்டிரன் பல வருடங்கள் மலையில் துறவியாய் வாழ்ந்த பின் மனிதர்களை சந்திக்க ஒருநாள் இறங்கி வருவான். அப்போது ஒரு வயதான துறவி அவனை தடுப்பார். “வேண்டாம். மிருகங்கள் மத்தியில் மேலும் பாதுகாப்பாய் இருப்பாய். ஆனால் இந்த மனிதர்கள் மோசமானவர்கள். அவர்களிலும் மேலானவர்களை அவர்களுக்கு பிடிக்காது. உன்னை கொன்று போட்டு விடுவார்கள்” என்பார். அதற்கு ஜாருதுஷ்டிரன் “ஏன் அப்படி சொல்கிறீர்கள். நான் பெற்ற ஞானத்தை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாமா?” என்பான். அதற்கு முதியவர் “மனிதர்களுக்கு உன்னதமானவர்களை தாங்க முடியாது. அவர்களுக்கு தேவை பொழுதுபோக்குக்கு ஏற்ற கோமாளிகள் தாம்” என்று பக்குவமாய் சொல்லிப் பார்ப்பார். பிறகு ஜாருதுஷ்டிரன் கேட்காமல் மனிதர்களிடத்து சென்று உதாசீனப்படுத்தப்பட்டு வருந்துவான். இருநூறு வருடங்களுக்கு பின்னரும் இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டே வருகிறோம்.
ஒரு மனிதன் முன்னேறாமால் சீரழிந்தால் அவனை அன்புகாட்டி விசனிப்பார்கள். அதே மனிதர் உயர்ந்து வந்தால் கரித்துக் கொட்டுவார்கள். மனிதர்களுக்கு தம்மிடையே ஒருவன் வளர்வது தமது தாழ்வை சுட்டிக் உணர்த்தி உறுத்தல் தரும். அதனாலே அவர்கள் பிச்சைக்காரர்களையும் குஷ்டரோகிகளையும் அடிமைகளையும் சுற்றி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். படையப்பா படத்தில் பெண் பார்க்க போகும் செந்தில் உணர்வது போல் என்னதான் செய்தாலும் பக்கத்தில் இரும்பு இருப்பதால் வெண்கலம் தங்கமாகி விடப் போவதில்லை.
