இன்று டி.வி நிகழ்ச்சிகளிலும், பத்திரிகை பத்திகளிலும், இணையதளம்
மற்றும் சமூக வலைதளங்களிலும் சமூக அரசியல் விசயங்களை விவாதிக்க ஆட்களுக்கு ஒரு
பஞ்சம் உள்ளது. மீடியா அந்தளவுக்கு பெருகி உள்ளது. டி.வி நிருபர்கள் இன்று யாரை
பேச கூப்பிடுவது என தினம் தினம் மண்டையை பிய்க்கிறார்கள். தினசரிகளில்
கருத்துக்கள் எழுத சிறுபத்திரிகையில் முன்பு கதை எழுதியவன் இன்று இழுக்கப்படுகிறான்.
இதன் ஒரு எதிர்விளைவு அறிவியக்க அல்லது கோட்பாட்டு பயிற்சி இல்லாதவர்கள் எக்குத்தப்பாய்
கருத்து சொல்லி குழப்பங்களை ஏற்படுத்துவது. ஜெயமோகன், சாரு, ஜொ.டி குரூஸ் என பல
உதாரணங்கள். இவர்கள் பேசினால் அது முன்பின் முரணாக, சமூக நலனுக்கு எதிராக தான் பல
சமயம் இருக்கிறது. இது யார் தவறு?
இவர்களிடம் கருத்து கேட்பவரின் தவறு தான். 2005இல் அசோகமித்திரனை ஒரு
ஆங்கில பத்திரிகை பேட்டி கண்டு சாதி பற்றி கேட்டது. அவர் தன் போக்கில் சொன்ன பல
பிற்போக்கான கருத்துக்கள் இங்கு பலருக்கும் அதிர்ச்சியையும் வெறுப்பையும்
ஏற்படுத்தியது. ஆனால் நான் அசோகமித்திரனை குற்றம் சொல்ல மாட்டேன்.
அசோகமித்திரனிடம் கருத்து கேட்டவர் பண்ணின தவறு இது.
அமெரிக்காவில், இங்கிலாந்தில்
எவ்வளவோ சிறந்த புனைவெழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் யாரும் சமூக
அரசியல் பற்றி கேட்பதில்லை. மிக்ஸிக்கு கூட ஒவ்வொன்றுக்கும் ஒரு ஜார் உள்ளது.
சட்னி அரைப்பதில் நீங்கள் மாவரைக்க முடியாது. முற்றிலும் சமூக அரசியல் விசயங்களில்
தெளிவின்றி ஒருவர் நல்ல எழுத்தாளராய் இருக்கலாம். அசோகமித்திரன் போல் மனித மனம்
பற்றியும் வாழ்வின் தத்துவார்த்த அபத்தங்கள் பற்றியும் எழுதலாம். ஒரு எழுத்தாளன்
சராசரி ஆளாகவும் சிறந்த எழுத்தாளனாகவும் ஒரே சமயம் இருக்கலாம். அதில் எந்த தவறும்
இல்லை. அவர்களை தவறான இடத்தில் உரசக் கூடாது.
ஜெயமோகன் போல் அரசியல் சமூகம் பற்றி தொடர்ந்து கருத்து சொல்லுபவர்களை
என்ன செய்ய? இவர்கள் பிரதானமாய் அறிவுஜீவிகள் அல்ல என்பதை குறிக்க வேண்டும். ஒரு
அறிவுஜீவிக்கு அறிவு மட்டும் போதாது. முதலில் அவர் புறவயமாய் யோசிக்க வேண்டும்.
ஜெயமோகன் போன்றவர்கள் பிரதானமாய் புனைவெழுத்தாளர்கள். அவர்களிடம் தனிப்பட்ட
கருத்துக்கள் தான் இருக்கும். அவை நம்மால் ஏற்காதபடி கூட இருக்கும். அவற்றுக்கு
சமூக பயன் உள்ளதாய் அவர் நினைக்கலாம். ஆனால் அப்படி அல்ல. புறவயமான, தர்க்கரீதியான
கருத்துக்களே ஒரு நெருக்கடியான கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தும். மனிதர்களுக்கு
இயல்பாக பல முன் எண்ணங்கள் உண்டு. இவை எழுத்தாளனிடம் கூடுதலாக இருக்கும். சொல்லப்
போனால் முன் எண்ணங்கள் எழுத்துக்கு ஒரு தனி ஊக்கசக்தியாக கூட இருக்கும்.
ஆனால் ஒரு அறிவுஜீவி தன் கோட்பாட்டு பயிற்சி மற்றும் அரசியல் அக்கறை
காரணமாய் முன் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு இயங்குவான். நம் சமூகத்தின் தற்போதைய
பிரச்சனை அறிவுஜீவிகளின் பற்றாக்குறையும், அந்த இடத்தை நாம் தற்காலிகமாக புனைவு
எழுத்தாளர்களுக்கு அளித்திருக்கிறோம். அது ஒரு சமூகத்தின் தவறு. பின்னடைவு. விளைவாக
ஜெயமோகன் தளத்தை தினசரி படித்து அவர் கருத்துக்களை பற்றி கொந்தளித்து எழுதுபவர்கள்
அதிகமாகி வருகிறார்கள். இது ஒரு மனவியாதி போல் ஆகி விட்டது. ஜெயமோகனை பார்த்தால்
தாக்குவேன் என ஒருவர் முகநூலில் நேரடியாகவே எழுதுகிறார். உணர்ச்சிவசப்பட்டு தான்
சொல்லுகிறார். அதற்காக அவர் அடிக்க போவதில்லை தான். ஆனால் ஏன் ஜெயமோகனை இவ்வளவு
சீரியசாக எடுக்கிறீர்கள் என கேட்கிறேன்.
தமிழில் அதிகமாய் அறிவுஜீவிகள் இல்லை
என்றாலும் ஒரு சிலர் இருக்கிறார்கள். தொண்ணூறுகளை சேர்ந்த கோட்பாட்டாளர்கள். இந்திய
அளவில் கூட சமூக அரசியல் விசயங்களை தெளிவாக புறவயமாக அலசும் பல அறிவுஜீவிகள்
உள்ளனர். உலக அளவில் எண்ணற்ற கட்டுரைகள் உள்ளன. ஜெயமோகனை பிடிக்கும் என்றால் அவரது
புனைவுகளை படிக்கலாம். கட்டுரைகளும் படிப்பேன் என்றால் வெறுமனே யுவகிருஷ்ணா சொல்வது
போல் ஜாலியாக மொழி அழகுக்காக மட்டும் ஜெயமோகனை படிக்கலாம். குறைந்த பட்சம்
இந்து பத்திரிகையின் நடுப்பக்க கட்டுரைகள் படித்தாலே போதும். ஜெயமோகனை படித்து
உங்கள் சமூக அரசியல் அறிவு வளரப் போவதில்லை. குழம்பிப் போவீர்கள்.
ஜெயமோகன் சாதியத்தை ஆதரிக்கும் தொனியில் எழுதினாலோ இடதுசாரிகள் தீவிரவாதிகளை
ஆதரிக்கிறார்கள் என்று கூறினாலோ கொதித்தெழாமல் நாம் புறக்கணிக்க வேண்டும்.
ஏனென்றால் அத்தகைய சமூக அரசியல் கருத்துக்களை உருவாக்குவது அவர் பணி அல்ல. நீங்கள் ஒரு சிந்தனையாளனுக்கு, அறிவுஜீவிக்கு தான் பதில் சொல்ல வேண்டும். புனைவெழுத்தாளனுடன் சமூகம் பற்றி விவாதிக்க கூடாது. ஏனென்றால் பெரும்பாலும் அவன் குழப்பவாதியாய் தன்னிலைவாதியாய் இருப்பான்.
நம் இதையெல்லாம் விவாதித்து உரையாட இங்கு தனி சமூக அரசியல் விமர்சகர்கள் தோன்ற வேண்டும். ஒரு காலத்தில் இருந்தார்கள். இன்று இல்லை. அவர்களுக்கு என்று மனப்பயிற்சியும்
கடப்பாடும் வேண்டும். ஒரு ராஜ் கௌதமனோ ரவிக்குமாரோ ஒரு கருத்தை சொன்னால் நாம் மறுத்து
விவாதிக்கலாம். ஆனால் ஜெயமோகன், சாரு சொன்னால் தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால்
இன்று நீங்கள் அவர்களை மறுத்து சொன்ன வாதங்களை எல்லாம் நாளை அவர்கள் தம் சொந்த கருத்தாக
தலைகீழாக முன்வைப்பார்கள். சமூக நீதிக் கருத்தும் சமூக அழிப்பு கருத்தும் ஒரு
புனைவெழுத்தாளனிடம் சரிசமமாய் இருக்கும். அது இயல்பு.
ஒரு நாணயத்தை சுண்டி விடுவது போலத் தான் எழுத்தாளனிடம் கருத்து
கேட்பது. தலையா வாலா என்று ஜாலிக்கு பார்க்கலாம். அதை வைத்து முடிவெடுப்பது
ஆபத்து.
இறுதியாய்: ஒருவர் புனைவெழுத்தாளன் மட்டுமா அல்லது அறிவுஜீவியா என
எப்படி கண்டுபிடிப்பது?
இது வாசகனின் தலைவலி. ஒரே குறிப்பு அறிவுஜீவியிடம் ஒரு உறுதிப்பாடு,
தர்க்கம், தெளிவு இருக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் இருந்து தான் பேசுவான்.
எழுத்தாளன் ரெண்டு பக்கம் இருந்தும் பேசுவான்.
