Skip to main content

ஜெயமோகன் கருத்தை பொருட்படுத்தலாமா?


இன்று டி.வி நிகழ்ச்சிகளிலும், பத்திரிகை பத்திகளிலும், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களிலும் சமூக அரசியல் விசயங்களை விவாதிக்க ஆட்களுக்கு ஒரு பஞ்சம் உள்ளது. மீடியா அந்தளவுக்கு பெருகி உள்ளது. டி.வி நிருபர்கள் இன்று யாரை பேச கூப்பிடுவது என தினம் தினம் மண்டையை பிய்க்கிறார்கள். தினசரிகளில் கருத்துக்கள் எழுத சிறுபத்திரிகையில் முன்பு கதை எழுதியவன் இன்று இழுக்கப்படுகிறான். இதன் ஒரு எதிர்விளைவு அறிவியக்க அல்லது கோட்பாட்டு பயிற்சி இல்லாதவர்கள் எக்குத்தப்பாய் கருத்து சொல்லி குழப்பங்களை ஏற்படுத்துவது. ஜெயமோகன், சாரு, ஜொ.டி குரூஸ் என பல உதாரணங்கள். இவர்கள் பேசினால் அது முன்பின் முரணாக, சமூக நலனுக்கு எதிராக தான் பல சமயம் இருக்கிறது. இது யார் தவறு?


இவர்களிடம் கருத்து கேட்பவரின் தவறு தான். 2005இல் அசோகமித்திரனை ஒரு ஆங்கில பத்திரிகை பேட்டி கண்டு சாதி பற்றி கேட்டது. அவர் தன் போக்கில் சொன்ன பல பிற்போக்கான கருத்துக்கள் இங்கு பலருக்கும் அதிர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் நான் அசோகமித்திரனை குற்றம் சொல்ல மாட்டேன். அசோகமித்திரனிடம் கருத்து கேட்டவர் பண்ணின தவறு இது.

அமெரிக்காவில், இங்கிலாந்தில் எவ்வளவோ சிறந்த புனைவெழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் யாரும் சமூக அரசியல் பற்றி கேட்பதில்லை. மிக்ஸிக்கு கூட ஒவ்வொன்றுக்கும் ஒரு ஜார் உள்ளது. சட்னி அரைப்பதில் நீங்கள் மாவரைக்க முடியாது. முற்றிலும் சமூக அரசியல் விசயங்களில் தெளிவின்றி ஒருவர் நல்ல எழுத்தாளராய் இருக்கலாம். அசோகமித்திரன் போல் மனித மனம் பற்றியும் வாழ்வின் தத்துவார்த்த அபத்தங்கள் பற்றியும் எழுதலாம். ஒரு எழுத்தாளன் சராசரி ஆளாகவும் சிறந்த எழுத்தாளனாகவும் ஒரே சமயம் இருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. அவர்களை தவறான இடத்தில் உரசக் கூடாது.

ஜெயமோகன் போல் அரசியல் சமூகம் பற்றி தொடர்ந்து கருத்து சொல்லுபவர்களை என்ன செய்ய? இவர்கள் பிரதானமாய் அறிவுஜீவிகள் அல்ல என்பதை குறிக்க வேண்டும். ஒரு அறிவுஜீவிக்கு அறிவு மட்டும் போதாது. முதலில் அவர் புறவயமாய் யோசிக்க வேண்டும். ஜெயமோகன் போன்றவர்கள் பிரதானமாய் புனைவெழுத்தாளர்கள். அவர்களிடம் தனிப்பட்ட கருத்துக்கள் தான் இருக்கும். அவை நம்மால் ஏற்காதபடி கூட இருக்கும். அவற்றுக்கு சமூக பயன் உள்ளதாய் அவர் நினைக்கலாம். ஆனால் அப்படி அல்ல. புறவயமான, தர்க்கரீதியான கருத்துக்களே ஒரு நெருக்கடியான கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தும். மனிதர்களுக்கு இயல்பாக பல முன் எண்ணங்கள் உண்டு. இவை எழுத்தாளனிடம் கூடுதலாக இருக்கும். சொல்லப் போனால் முன் எண்ணங்கள் எழுத்துக்கு ஒரு தனி ஊக்கசக்தியாக கூட இருக்கும்.

ஆனால் ஒரு அறிவுஜீவி தன் கோட்பாட்டு பயிற்சி மற்றும் அரசியல் அக்கறை காரணமாய் முன் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு இயங்குவான். நம் சமூகத்தின் தற்போதைய பிரச்சனை அறிவுஜீவிகளின் பற்றாக்குறையும், அந்த இடத்தை நாம் தற்காலிகமாக புனைவு எழுத்தாளர்களுக்கு அளித்திருக்கிறோம். அது ஒரு சமூகத்தின் தவறு. பின்னடைவு. விளைவாக ஜெயமோகன் தளத்தை தினசரி படித்து அவர் கருத்துக்களை பற்றி கொந்தளித்து எழுதுபவர்கள் அதிகமாகி வருகிறார்கள். இது ஒரு மனவியாதி போல் ஆகி விட்டது. ஜெயமோகனை பார்த்தால் தாக்குவேன் என ஒருவர் முகநூலில் நேரடியாகவே எழுதுகிறார். உணர்ச்சிவசப்பட்டு தான் சொல்லுகிறார். அதற்காக அவர் அடிக்க போவதில்லை தான். ஆனால் ஏன் ஜெயமோகனை இவ்வளவு சீரியசாக எடுக்கிறீர்கள் என கேட்கிறேன்.

தமிழில் அதிகமாய் அறிவுஜீவிகள் இல்லை என்றாலும் ஒரு சிலர் இருக்கிறார்கள். தொண்ணூறுகளை சேர்ந்த கோட்பாட்டாளர்கள். இந்திய அளவில் கூட சமூக அரசியல் விசயங்களை தெளிவாக புறவயமாக அலசும் பல அறிவுஜீவிகள் உள்ளனர். உலக அளவில் எண்ணற்ற கட்டுரைகள் உள்ளன. ஜெயமோகனை பிடிக்கும் என்றால் அவரது புனைவுகளை படிக்கலாம். கட்டுரைகளும் படிப்பேன் என்றால் வெறுமனே யுவகிருஷ்ணா சொல்வது போல் ஜாலியாக மொழி அழகுக்காக மட்டும் ஜெயமோகனை படிக்கலாம். குறைந்த பட்சம் இந்து பத்திரிகையின் நடுப்பக்க கட்டுரைகள் படித்தாலே போதும். ஜெயமோகனை படித்து உங்கள் சமூக அரசியல் அறிவு வளரப் போவதில்லை. குழம்பிப் போவீர்கள்.
ஜெயமோகன் சாதியத்தை ஆதரிக்கும் தொனியில் எழுதினாலோ இடதுசாரிகள் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்கள் என்று கூறினாலோ கொதித்தெழாமல் நாம் புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் அத்தகைய சமூக அரசியல் கருத்துக்களை உருவாக்குவது அவர் பணி அல்ல. நீங்கள் ஒரு சிந்தனையாளனுக்கு, அறிவுஜீவிக்கு தான் பதில் சொல்ல வேண்டும். புனைவெழுத்தாளனுடன் சமூகம் பற்றி விவாதிக்க கூடாது. ஏனென்றால் பெரும்பாலும் அவன் குழப்பவாதியாய் தன்னிலைவாதியாய் இருப்பான். 

நம் இதையெல்லாம் விவாதித்து உரையாட இங்கு தனி சமூக அரசியல் விமர்சகர்கள் தோன்ற வேண்டும். ஒரு காலத்தில் இருந்தார்கள். இன்று இல்லை. அவர்களுக்கு என்று மனப்பயிற்சியும் கடப்பாடும் வேண்டும். ஒரு ராஜ் கௌதமனோ ரவிக்குமாரோ ஒரு கருத்தை சொன்னால் நாம் மறுத்து விவாதிக்கலாம். ஆனால் ஜெயமோகன், சாரு சொன்னால் தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் இன்று நீங்கள் அவர்களை மறுத்து சொன்ன வாதங்களை எல்லாம் நாளை அவர்கள் தம் சொந்த கருத்தாக தலைகீழாக முன்வைப்பார்கள். சமூக நீதிக் கருத்தும் சமூக அழிப்பு கருத்தும் ஒரு புனைவெழுத்தாளனிடம் சரிசமமாய் இருக்கும். அது இயல்பு.

ஒரு நாணயத்தை சுண்டி விடுவது போலத் தான் எழுத்தாளனிடம் கருத்து கேட்பது. தலையா வாலா என்று ஜாலிக்கு பார்க்கலாம். அதை வைத்து முடிவெடுப்பது ஆபத்து.
இறுதியாய்: ஒருவர் புனைவெழுத்தாளன் மட்டுமா அல்லது அறிவுஜீவியா என எப்படி கண்டுபிடிப்பது?

இது வாசகனின் தலைவலி. ஒரே குறிப்பு அறிவுஜீவியிடம் ஒரு உறுதிப்பாடு, தர்க்கம், தெளிவு இருக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் இருந்து தான் பேசுவான். எழுத்தாளன் ரெண்டு பக்கம் இருந்தும் பேசுவான்.

Comments

//ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் இருந்து தான் பேசுவான்//
அதோடு "ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் அவனால் மட்டுமே இருக்க முடியும்".என்றும் சொல்லலாமல்லவா.
Chitra said…
It's very clear. U r right.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...