![]() |
| குத்துச்சண்டை பழகும் ஹெமிங்வே |
ஹெமிங்வே
மிக அழகான கவித்துவமான தலைப்புகள் இடக் கூடியவர். எனக்கு பிரியமானவை The Sun also
Rises, Men without Women, For whom the Bell Tolls, Winner Take Nothing ஆகியவை. The Sun also Rises எனக்கு மிக மிக பிடித்தமான நாவல். வாழ்க்கையை ஒரு
தனித்துவமான விதிகள் கொண்ட புதிரான விளையாட்டாக சித்தரித்திருப்பார். இந்த
விளையாட்டை கற்று திறமையாக ஆடுகிறவன் வாழ்க்கையை கொண்டாடுகிறான், ரசிக்கிறான்,
ஒருவேளை வெல்கிறான். காளைச்சண்டை, காதல், செக்ஸ், எழுத்து எல்லாமே இந்த “தீராத விளையாட்டு”
தான்.
இத்தலைப்பை அவர் விவிலியத்தில் இருந்து எடுக்கிறார். என்னதான் நடந்தாலும்,
மாபெரும் துயரங்கள், அழிவுகள் நிகழ்ந்தாலும் அடுத்த நாள் அழகாக சூரியன்
உதிக்கிறான் என்பது அவ்வரி. விவிலிய ஆங்கிலம் என்பதால் தான் “கூட” எனும் பொருளில் also வருகிறது. நவீன ஆங்கிலத்தில் இவ்வாக்கியம் The Sun Rises Too என இருக்க வேண்டும். நாவலை படிக்கிறவர்களுக்கு இது எவ்வளவு
பொருத்தமான தலைப்பு என புரியும். அதாவது விவிலிய காலத்தில் என்னதான் அன்றாட
துயரங்கள் இருந்தாலும் அவற்றை கடந்த ஒரு நிரந்தர இயக்கம் உள்ளது, அது தான் கடவுள்
என புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஹெமிங்வேயின் காலத்தில் கடவுள் இறந்து
விடுகிறார். தேவாலயத்தில் ஒரு சடங்காக மட்டும் எஞ்சி விடுகிறார். ஆனாலும் மனித
பேரழிவுகளை கடந்த ஒரு மகாசம்பவமாக வாழ்வு அதற்கு வெளியே அப்போதும் இருந்து
கொண்டிருக்கிறது. என்ன அதற்கு அர்த்தம் கற்பிக்க முடியாது. ஏன் போரில் மக்கள்
மடிகிறார்கள் என்பதற்கு அர்த்தம் காண முடியாது. ஆனால் போர் ஒரு பக்கம் நொதிக்கும்
போதும் இன்னொரு பக்கம் வாழ்க்கை நிதானமாக அதன் போக்கில் செல்லும் அபத்தத்தை உணர
முடியும். “சூரியனும் உதிக்கத்தானே செய்கிறது” என்பதில் இந்த அபத்தத்தை
உணர்ந்தவனின் நக்கல் உள்ளது.
For whom the Bell Tolls இன்னொரு அழகான தலைப்பு. இதை ரெண்டு விதமாக மொழிபெயர்க்கலாம்.
1) யாருக்காக மணி ஒலிக்கப்படுகிறது? 2) மணி ஒலிக்கப்படுபவர்களுக்கு. ஆங்கில தலைப்பில்
கேள்விக்குறி (?) இல்லை என்பதை
கவனிக்க வேண்டும். அப்போது whom
கேள்விச் சொல்லாக அன்றி pronoun ஆகிறது. இரண்டாவது
மொழிபெயர்ப்பே சரி எனக் கூறுவதற்கு இதை ஒரு எளிய ஆதாரம் எனலாம். மேலும் இரண்டாவது
தலைப்பில் யார் என்ற கேள்வியை விட, மணி ஒலியினால் உணர்த்தப்படுபவர்களைப் பற்றியது
இந்நாவல் எனும் தொனி உள்ளது.
பதினேழாம்
நூற்றாண்டை சேர்ந்த ஆங்கில கவிஞன் ஜான் டன்னின் ஒரு கட்டுரையில் இருந்து தலைப்பை
ஹெமிங்வே எடுக்கிறார். இங்கிலாந்தில் யாராவது இறந்தால் தேவாலயத்தில் ஒற்றைமணி
அடிப்பார்கள். யார் இறந்தார்கள் என்ற அர்த்தத்தில் ஒருவர் for whom the bell tolls? என கேட்கிறார். டன் அதற்கு யார் தனியாக சாவதில்லை, யார் இறந்தாலும்
நம்மில் கொஞ்சமும் தான் சாகிறது என்ற பொருளில் பதில் சொல்கிறார். இது ஒரு ஆன்மீக
கட்டுரை. டன்னின் பதிலும் ஆன்மீக விரிவை கோரி வாழ்வின் பதிலை அதில் தேடுவது.
மனிதன் இறந்தாலும் இறப்பதில்லை, பிரம்மாண்டத்தில் கலந்து விடுகிறான். அப்படியே ஒரு
மனித இழப்பு நடந்தாலும் அது தனித்து இல்லை, அதன் வழி அத்தனை பேரும் தான் எதையோ
இழக்கிறோம் என கூறுகிறார் டன். ஆனால் ஹெமிங்வே இந்த தலைப்பை எடுத்தாண்டிருந்தாலும்
அவருக்கு டன்னை போல் கடவுள் நம்பிக்கை இல்லை. டன் மனித இழப்பின் பொறுப்பை கடவுள்
எனும் பிரம்மாண்ட்த்திடம் விட்டு விடுகிறார். ஆனால் ஹெமிங்வேயால் அது இயலாது. அவர்
எப்படி புரிந்து கொள்கிறார்? ஒரு மனிதன் மரிக்கும் போது, சீரழியும் போது அதன்
பொறுப்பு, காரணம் அவனை சுற்றி உள்ள அத்தனை மனிதர்களும் தான் என்கிறார். கடவுள்
இல்லா உலகில் மனிதன் தனக்கே தான் பொறுப்பாக வேண்டும். அந்த மனிதனை தான் “மணி
ஒலிக்கப்படுபவருக்கு” என அழைக்கிறார். கிட்டத்தட்ட ஜான் டன்னின் பொருளில், ஆனால்
கொஞ்சம் மாற்றி.
ஹெமிங்வே
தன் நாவலில் ஸ்பெயினில் நடக்கும் போரில் மாண்டு போகும் மக்களை பற்றி பேசுகிறார். போரில்
அவர்களின் இழப்புக்கு, குற்றங்களுக்கு, இழிவுக்கு யார் காரணம் எனும் கேள்வி
வரும் போது ஹெமிங்வே அவர்களே தான் என்கிறார். இப்படி அவர் யோசிப்பதற்கு ஹெமிங்வே
ஒரு இருத்தலியல்வாதி என்பதும் காரணம். ஆக இந்நாவலின் தலைப்பின் ஒரு பொருள் இந்த
அழிவுக்கெல்லாம் காரணமானவர்களுக்கு என்பது. சாவு மணிக்கு எல்லாருமே காரணம் என்பது.
இன்று ஹெமிங்வேயின் நினைவு தினம். அவருக்கு ஒரு எளிய வாசகனின்
சமர்ப்பணம்
