இங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கும் முன் இந்தியாவின் பலவீனம் பந்து
வீச்சு தான் என பலரும் சொன்னார்கள். மட்டையாளர்கள் கலக்குவார்கள் என
எதிர்பார்க்கப் பட்டது. அதற்கு ஒரு காரணம் இங்கிலாந்தின் மட்டையாட்டம் பலவீனம்
என்பதால் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க தொடர்களில் அவர்கள் தட்டையான ஆடுதளங்களை
தயார் பண்ணினது. இந்தியாவுடனான முதல் டெஸ்டிலும் அப்படியான ஆடுதளம் தான்.
அப்போது இந்திய மட்டையாளர்கள் முன்னூறு ஓட்டங்களை நீண்ட நாட்களுக்கு பின்
வெளிநாட்டில் அடித்தார்கள். ஆனால்
அடுத்த
லார்ட்ஸ் டெஸ்டில் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைத்து இங்கிலாந்து வேறு முயற்சி
செய்தது.
கிட்டத்தட்ட வென்ற நிலையில் மோசமாக அடித்தாடி இங்கிலாந்து தோற்றது. அதற்கு
அடுத்த டெஸ்டில் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆனால் பவுன்ஸ் உள்ள ஆடுதளம் தயார் பண்ணினார்கள்.
அதில் இந்தியா மோசமாக பந்து வீசியது. இந்தியா தோற்றது. காரணம் வேகமும் பவுன்ஸும் கொண்ட
பந்து வீச்சாளர்கள் நமக்கு இல்லை. மேலும் இப்படியான ஆடுதளங்களில் வேகமாக வீசும் பந்துகள்
தாம் அதிக ஸ்விங் ஆகின்றன. இதை சவுத் ஆம்ப்டனில் நான்காவது டெஸ்டில் அரோன் நிரூபித்தார்.
சவுத் ஆம்ப்டனிலும் மட்டையாட்டத்துக்கு சாதகமான ஆனால் பவுன்ஸ் மிக்க ஆடுதளம் தான்.
ஆனால் மழை காரணமாய் அதிகம் ஸ்விங் ஆனது. ஒட்டுமொத்தமாய் நான்கு டெஸ்டுகளிலும் நம் வேகவீச்சாளர்கள்
போன இங்கிலாந்து பயணத்தொடரை விட இம்முறை நன்றாக பந்து வீசினர். எதிர்பார்ப்புக்கு மாறாக
மட்டையாளர்கள் மிக மோசமாய் ஆடினர்.
நம் மட்டையாளர்கள் தென்னாப்பிரிக்காவில்
சில வேளை நன்றாக மட்டையாடினர். நியுசீலாந்திலும் சில ஆட்டங்களில் நன்றாக மட்டையாடினர்.
ஆனால் அவர்கள் வேகமாய் விக்கெட்டுகளை கொடுத்து ஐம்பது ஓவர்களுக்கு உள்ளாகவே இரண்டு
தொடர்களிலும் ஆட்டம் இழந்தனர். தடுப்பாட்டம் இன்மையால் தான் நாம் இத்தொடர்களை இழந்தோம்.
ஒரு மட்டையாட்ட அணிக்கு இரண்டு வகை ஆட்டங்களும் – தடுப்பாட்டம் + தாக்குதல் ஆட்டம்
– கைவர வேண்டும். அணி தோல்வியை நோக்கி நகரும் போது பிரேக் போட நம்மிடம் தடுப்பாட்டம்
இல்லை. தோனியால் முடிந்ததெல்லாம் அணியை ஏதாவது மரம் அல்லது மதில் மீது மோதி வண்டியை
நிறுத்துவது தான். நம் அணியில் தவான், கம்பீர், ஜடேஜா, தோனி, ரோஹித் ஆகியோருக்கு தடுப்பாட்டமே
இல்லை. கம்பீர் கடுமையாய் உழைத்து சில டெஸ்டுகளில் நீண்ட நேரம் ஆடியிருக்கிறார், ஆனால்
அவரது தொழில்நுட்பம் இன்று சிதிலமாகி விட்டது. மிச்ச பேரில் கோலி, புஜாரா, ஆகியோரின்
தடுப்பாட்டம் ஒருநாள், t20 ஆட்டங்களில் தாக்கத்தால்
பலவீனமாகி உள்ளது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் செய்வதெல்லாம் கோலிக்கு பந்தை
வைடாக குட் லெங்தில் வீசுவது தான். கோலிக்கு ஆரம்ப முப்பது பந்துகளில் ஒற்றை
ரெட்டை ஓட்டங்கள் முக்கியம். அதன் பின் தான் அவரது கால்கள் சரியாக இயங்க
துவங்கும். அதற்கு அவர் கால் பக்கமும் நேராகவும் உள்ள பகுதிகளில் ஒற்றை ஓட்டங்களை
நம்பி இருக்கிறார். ஆனால் இந்த ஷாட்களை இங்கிலாந்து வீச்சாளர்கள் பிளாக் செய்திட
தோனி பதற்றமாகிறார். அவரது காலாட்டம் தாறுமாறாகிறது. அவரது தடுப்பாட்ட
தொழில்நுட்பத்தில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இவை விரிவாக அலசப்பட்டுள்ளன. அவற்றை
அவர் சரிசெய்ய வேண்டும். குறிப்பாய் நேராக ஆடவும் பந்துகள் ஆப் குச்சிக்கு வெளியே
பொறுமையாய் விடவும் ஆரம்பிக்க வேண்டும். பட்டினி போட்டு கொல்வது தான் இங்கிலாந்து
பந்து வீச்சின் இலக்கு. கொஞ்சம் கட்டுப்பாட்டோடு 300 பந்துகளையாவது ஆட தயாரானால்
தான் கோலி அவர்களுக்கு எதிராக சதம் ஆடிக்க முடியும்.
புஜாராவின் டெஸ்ட் மட்டையாட்டம்
கடந்த ஒரு வருடமாகவே பிரச்சனையில் உள்ளது. நிறைய உள்வரும் பந்துகளை அவர் அடிக்கவோ
தடுக்கவோ தவறுகிறார். ஏனென்றால் அவரது காலாட்ட நிலை (stance) பல சமயம் அகன்று போய் உள்ளது. அவர் மிடில் குச்சி பந்தை கூட ஆப் பக்கம்
அடிக்கும் நோக்கில் உள்ளார். இதனால் பந்து சட்டென உள்ளே வரும் போது திணறுகிறார்.
இந்த தொடரில் அவரது தடுப்பாட்டம் மேலும் கோளாறாகி உள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம்
அவரது ஒருநாள் அணியில் இடம்பெறும் ஆசை. ஏனென்றால் இந்தியாவில் நீங்கள் ஒருநாள்
அணியில் ஆடினால் தான் நட்சத்திரம். இதன் காரணமாய் அவரது கவனம் முழுக்க அதிக ஸ்டுரோக்குகளை
அடிப்பதில் உள்ளது. அவரது இயலான தடுப்பாட்டத்தையும் கவனம் பொறுமையையும் இழந்து
விட்டார்.
டெஸ்ட் ஓரளவு மட்டையாளர்களாக
ஓரளவு நம்பிக்கை அளிப்பவர்கள் ரஹேனேவும் அஷ்வினும் தான். ரஹேனேவுக்கு சில
பலவீன்ங்கள் உள்ளன. குறிப்பாய் பந்தை விரட்டும் போது அவரது முன் கால் ஆட்டம்
போதுமானதாக இல்லை. விஜய் வெகுவாக முன்னேறி இருக்கிறார். உயரமாக பந்து எழுகிற
ஆடுதளங்களிலும் பந்துகளை விடும் திறனை அவர் வளர்க்க வேண்டும். ஒரு நல்ல டெஸ்ட்
அணியை உருவாக்க இன்னும் மூன்று மட்டையாளர்களும் ஒரு நல்ல கீப்பரும் வேண்டுமே!
இப்போது அணியில் உள்ள நான்கு பேர்களும் டெஸ்ட் வகைமைக்கு ஏற்றவர்கள் அல்ல. ஆனால்
இந்தியாவுக்கு மாற்று வீர்ரகளும் அதிகம் இல்லை. உண்மையில் இன்று இந்தியாவில் நல்ல
தடுப்பாட்ட வீரர்கள் குறைந்து விட்டார்கள். அதனால் தான் தோனி இவர்களை நம்பி
இருக்கிறார்கள். தடுப்பாட வராவிட்டால் அடித்தாவது ஆடுங்கள் என்கிறார். இதனால்
இந்தியா சில ஆட்டங்களை இழக்கும் என அவர் அறிந்தே இருக்கிறார். ஆனால் அடிப்படையில்
மோசமான டெஸ்ட் மட்டையாளரான தோனி அணித்தலைவராக இருக்கையில் அவரால் வேறெப்படி அணியை
மாற்ற முடியும்.
இப்போதைக்கு இந்திய
அணி எதேச்சையாக டெஸ்டுகளில் ஆடும் ஒரு ஒருநாள், T20 அணி.
வெறும் நட்சத்திரங்களின் அணிவரிசை. இன்னும் சற்று காலத்துக்கு அப்படித் தான்
இருக்கும். இந்திய டெஸ்ட் அணியின் முன்னேற்றத்திற்கு ரெண்டு விசயங்கள் நடக்க
வேண்டும்.
1, அணித்தலைவர் மாற வேண்டும்.
அதற்கு நாம் அடுத்த உலகக்கோப்பையில் இந்தியா தோற்பது வரை காத்திருக்க வேண்டும்.
2. டெஸ்ட்
போட்டிகளுக்கு ஒரு தனியான அணியை உருவாக்க வேண்டும். ஒருநாள் வீரர்களை எடுக்க
கூடாது. டெஸ்ட் வீரர்கள் T20 ஆடக் கூடாது. அதற்கான
வருமானத்தை BCCI ஈடு செய்ய வேண்டும். இங்கிலாந்து வாரியம்
அப்படித்தான் செய்கிறது.
