இன்றைய இந்தியா – வங்கதேசம் உலகக்கோப்பை
காலிறுதியின் நாற்பதாவது ஓவரில் வேகவீச்சாளர் ரூபல் ஜுசெனின் புல் டாஸ் பந்தை ரோஹித்
ஷர்மா அடித்து கேட்ச் கொடுத்தார். ஆனால் பந்து இடுப்புக்கு மேல் உயரமாக வந்ததாக கூறி
நடுவர் ஆலம் தேர் அதற்கு நோ பால் என தீர்ப்பளித்தார். ரோஹித் தப்பினார். ஆனால் இது
மிகவும் சர்ச்சைக்குரியதாக இப்போது மாறி இருக்கிறது. வங்கதேசத்தில் நடுவர்களின் கொடும்பாவி
எரித்திருக்கிறார்கள். வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரபூரவமாய் ஐ.சி.சிக்கு புகார்
அளித்துள்ளது.
என்னாலும் இந்த நடுவர் முடிவுடன் முழுதும் ஒத்துப்
போகவில்லை. பந்து நிச்சயம் இடுப்புயரம் தான், ஆனால் இடுப்புக்கு மேல் போவதாக தெரியவில்லை.
பொதுவாக இது போன்ற முடிவுகளில் பிரதான நடுவர் பைன் லெக்கில் நிற்கும் இரண்டாம் நடுவரிடம்
பொறுமையாக கலந்தாலோசிப்பார்கள். ஆனால் இம்முறை ஆலம் தெர் சட்டென தன் முடிவை அறிவித்து
விட்டார். எனக்கு இதில் ஏதோ சூதாட்ட சதி இருக்குமா என ஒரு சந்தேகம்.
பவர் பிளேவின் போது இந்தியா எவ்வளவு
விக்கெட்டுகள் இழக்கும் என சூதாட்டம் இருக்கலாம். பொதுவாக ஒன்றோ இரண்டோ விக்கெட்டுகள்
விழும். அதை எதிர்பார்த்து நிறைய பேர் விக்கெட் விழும் என பந்தயம் கட்டியிருக்கலாம்.
அப்போது விக்கெட் விழாவிட்டால் சூதாட்டக்காரர்களுக்கு பெருத்த லாபம். ஒருவேளை அவர்கள்
தான் நடுவரை விலைக்கு வாங்கி விட்டார்களா?
இன்றைய விளையாட்டின் ஒரே சுவாரஸ்யமான
அம்சம் இது மட்டும் தான். மற்றபடி ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் முதலில் மட்டையாடிய இந்தியா
அடித்தாட சிரமப்பட்டது. அதற்குரிய பாதி பெருமை ஆடுதளத்துக்கு தான். பின்னர் பவர் பிளேவின்
போது வெயிலும் மழையும் சேர்ந்து ஆடுதளத்தை சற்றே வேகமாக்கியது. பின்னர் வங்கதேசம் மட்டையாடிய
போது ஆடுதளம் சுலபமாகியது. இந்தியாவின் பந்து வீச்சும் பாஸ்ட்புட் கடை மாஸ்டர் முட்டையை
உடைக்கிற அளவில் தான் ஆபத்தாக இருந்தது. அதற்கு போய் முட்டுக்கொடுக்க முடியாமல் வங்கதேச
மட்டையாளர்கள் திணறினார்கள்.
அல்லது திணறியது போல் நடித்தார்களா? அவர்கள் பவர்
பிளேயில் கூட ஆக்ரோசமாய் ஆட முயலவில்லை. கணிசமான நேரம் அவர்கள் ஆடுவது ஒரு டிராவை நோக்கிப்
போகிற டெஸ்ட் ஆட்டம் போலத் தான் இருந்தது. கடைசி பத்து ஓவர்கள் 150க்கு மேல் அடிக்க
திட்டமிடுகிறார்களோ என குழம்பினேன். முதலிரவில் மனைவியை பாட்டுப்பாடி தூங்க வைக்கிற
கணவன் போல மட்டையாடினார்கள். சூதாட்டக்காரர்களிடம் இருந்து வங்கதேச மட்டையாளர்கள் எவ்வளவு
பணம் பெற்றார்கள் என வங்கதேச வாரியம் விசாரிக்க வேண்டும். ஆட்டம் முடிந்த பின் மீடியாவிடம்
தோனி சொன்னார் “இந்த முன்னூறு இலக்கை நன்றாக மட்டையாடினால் அவர்கள் அடைந்திருக்க முடியும்.”
அதற்கான முயற்சி செய்து ஒரு 270ஆவது அடைந்திருக்க வேண்டும். ஆனால் வங்கதேசம் 200ஐ தாண்டக்
கூடாது எனும் திட்டத்துடன் ஆடியதாக தோன்றுகிறது. இன்று நடந்தது கிரிக்கெட்டா சூதாட்டமா?