தென்னாப்பிரிக்கா முன்பும் உலகக்கோப்பை
காலிறுதி, அரையிறுதிகளில் தற்கொலை ஆட்டம் ஆடியதுண்டு. ஆனால் இம்முறை உலகக்கோப்பை ஆடிய
அணி இதுவரையிலான தென்னாப்பிரிக்க அணிகளிலே தலைசிறந்தது. டேல் ஸ்டெயின் தென்னாப்பிரிக்காவில்
தோன்றிய தலைசிறந்த வேகவீச்சாளர். ஏ.பி. டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த மட்டையாளர்களில்
ஒருவர். அதோடு ஆம்லா, டுமினி, மில்லர், டூப்பிளஸி போன்ற உச்சபட்ச தரம் கொண்ட மட்டையாளர்கள்.
தொடர்ந்து கழுத்துயரத்துக்கு பந்தை 150 கி.மீ வேகத்தில் எகிற விடும் மோர்க்கல். இவர்கள்
தான் அணியின் நியூக்ளியஸ். இது போன்ற ஒரு அபாயகர நியூக்ளியஸ் வேறெந்த அணிக்கும் இல்லை.
ஆனாலும் இத்தொடரில் தென்னாப்பிரிக்கா தன் முழுசுதந்திரத்துடன் ஆடியதாக சொல்ல முடியாது.
பொதுவாக சுயஎதிர்பார்ப்பும், சம்பிரதாயமான ஆட்டமுறையும் தென்னாப்பிரிக்காவின் இறுக்கத்துக்கு
ஒரு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இம்முறை அபரிதமான திறமையும், டிவில்லியர்ஸின்
ஜாலியான தன்னம்பிக்கையான தலைமை பாணியும் தென்னாப்பிரிக்காவை சற்று ஆதிக்கத்துடனே ஆட
வைத்தது. ஆனால் அரையிறுதியில் அவர்களுக்கு அது போதவில்லை. முக்கியமான நேரத்தில் அணி
அட்டை போல் சுருண்டு விட்டது.
இந்த ஆட்டத்தில் நியுசிலாந்தும்
ரொம்ப பதற்றமாக இருந்தது. பந்து வீச்சில் கட்டுப்பாடில்லை. அதனாலே ஒரு கட்டத்தில் டூப்பிளஸியும்
டிவில்லியர்ஸும் மூன்றாவது நான்காவது கியர்களில் பறந்த போது நியுசிலாந்த் நடுங்கியது.
மழை வராதிருந்து 50 ஓவர்கள் தென்னாப்பிரிக்கா ஆடியிருந்தால் 400 ஓட்டங்கள் நிச்சயம்.
அவ்வளவு பெரிய இலக்கை நியுசிலாந்தால் சுலபத்தில் விரட்டி இருக்க முடியாது. ஆனால் மழை
வந்ததும் நியுசிலாந்துக்கு சாதகமாய் இரண்டு விசயங்கள் நடந்தன. ஒன்று குறைவான ஓவர்கள்
ஆடினால் போதும். 43 ஓவர்களில் 298 அடிக்கக் கூடிய ஸ்கோர் தான். அடுத்து மழை ஈரத்தினால்
பந்தை அடிப்பது சுலபமாயிற்று. கட்டுப்பாடாய் வீசுவது சிரமமாயிற்று. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு
ஐந்தில் ஒரு மடங்கு திறமையும் அனுபவமும் கொண்ட ஒரு அணி அதனை வீழ்த்துவது என்றால் இந்தளவுக்கு
அதிர்ஷ்டமாவது வேண்டாமா? மழையினால் ஆட்டம் சமநிலைக்கு வந்தது.
அப்போதும் கூட நியுசிலாந்து மட்டையாளர்கள்
மிகுந்த பதற்றமாக தோன்றினார்கள். மெக்கல்லம் வேகமாய் ஆடி அரைசதம் அடித்தாலும் உயரப்பறக்கிற
நீர்க்குமிழி போலத் தான் தோன்றினார். அவர் சற்றே பொறுமையாக ஒற்றை ரெட்டை ஓட்டங்கள்
எடுத்தே கூடுதலாய் முப்பது எடுத்திருந்தால் நியுசிலாந்தின் நிலை இன்னும் எளிதாக இருந்திருக்கும்.
அவருக்கு பிறகு வில்லியம்ஸன், கப்தில் ஆகியோரும் தேவையின்றி தான் வெளியேறினார்கள்.
எலியட் வந்த நடுஓவர்களில் தான் நியுசிலாந்த் அமைதியானது. ஆண்டர்ஸனும் தன் வழக்கமான
பாணியை மாற்றி பொறுமையாக ஆடினார். எப்போது நியுசிலாந்த பொறுமை கோண்டார்களோ அப்போது
தென்னாப்பிரிக்கா பதற்றமானது. 25 ஒவருக்கு பிறகு டிவில்லியர்ஸ் ஸ்டெயினை கொண்டு வந்தார்.
தென்னாப்பிரிக்காவின் அச்சத்தின் முதல் அறிகுறி அது. நியுசிலாந்த சாமர்த்தியமாக விக்கெட்
கொடுக்காமல் ஆடியது. அதே போல் சுழலர் தாஹிருக்கும் விக்கெட் அளிக்காமல் தடுத்தாடினார்கள்.
இன்றைய நிலையில் விக்கெட் கைவசம் உள்ள ஒரு அணியால் இறுதி சில ஓவர்களில் 10 ஓட்டங்கள்
சராசரியில் ஆடுவது எளிதே. அடிப்படையில் இது குழிதோண்டி யானையை பிடிக்கிற விளையாட்டு
தான். யானை சற்று கவனமாய் இருந்தால் அதை கயிறு கொண்டு கட்டி பிடிக்க முடியாது. இறுதியாக
டிவில்லியர்ஸ் தன்னையே கொண்டு வந்தார். இது முன்னர் ஸ்டீவ் வா அடிக்கடி பயன்படுத்தும்
தந்திரம். என்னதான் கவனமாய் ஆடினாலும் ஒரு ரொம்ப சுமாரான வீச்சாளர் வந்தால் ரிஸ்க்
எடுத்து அடிக்க தோன்றும். அது மட்டையாளனின் அகங்காரத்தை சீண்டும் முயற்சி. அப்போதும்
இருவரும் நிதானம் காத்தனர். என்னைப் பொறுத்த வரையில் இந்த ஆட்டம் பவர் பிளேயின் முன்பு
விக்கெட் விழாத நிலையிலேயே நியுசிலாந்துக்கு சாதகமாக மாறி விட்டது.
ஆனால் நாற்பதாவது ஓவரில் ஆண்டர்ஸன்
தேவையின்றி வெளியேறினார். அவருக்கு பிறகு வந்த ரோஞ்சியும் பதற்றத்தில் தடுமாறினார்.
இக்கட்டத்திலும் தென்னாப்பிரிக்கா வென்றிருக்க முடியும். ஆனால் அவர்களோ ரெண்டு கேட்சுகள்
மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விட்டிருந்தனர். இப்போது இரண்டில் எந்த அணி கூடுதலாய்
பதற்றமாய், அதிக கேவலமாய் சொதப்பும் என்பதே கேள்வி. விட்டோரி வந்ததும் நியுசிலாந்த்
அமைதியானது. இறுதி ஓவரில் கூட தென்னாப்பிரிக்கா வென்றிருக்கலாம். ஆனால் பதற்றத்தில்
ஸ்டெயினின் கால்தசை பிடித்துக் கொண்டது. அவர் இரண்டு மோசமான பந்துகளை வீசினார். ஒன்று
நான்குக்கும் இன்னொன்று ஆறுக்கும் போனது.
கடந்த நான்கு உலகக்கோப்பைகளில்
செய்த அளவுக்கு தென்னாப்பிரிக்க இம்முறை சொதப்பவில்லை. ஆனாலும் இதுவும் choking தான்.
எலியட்டின் கேட்சை மட்டும் பிடித்திருந்தால் கூட அவர்கள் ஜெயித்திருக்க முடியும். தென்னாப்பிரிக்காவுக்கு
உலகக்கோப்பை வெல்வதற்கான ஆகச்சிறந்த வாய்ப்பும் இது தான். ஏனென்றால் அடுத்த உலகக்கோப்பையின்
போது அவர்களிடம் ஸ்டெயின், மோர்க்கல், ஆம்லா, டிவில்லியர்ஸ், டூப்ளஸி, டூமினி ஆகியோர்
இருக்க மாட்டார்கள். இருந்தாலும் 34, 35 வயதான வெளிறிப் போன வீரர்களாக இருப்பார்கள்.
இப்போதே 35 வயதாகும் தாஹிர் நிச்சயம் இருக்க மாட்டார். எதிர்கால தென்னாப்பிரிக்கா மில்லர்,
டி கோக் ஆகிய அடாவடி மட்டையாளர்களையும் ரூசோ, பெஹ்ரதீன் போன்ற நிதான மட்டையாளர்களையும்
நம்பி இருக்கும். எதிர்கால தென்னாப்பிரிக்க பந்து வீச்சும் சற்று ஏமாற்றமளிப்பதாகவே
உள்ளது. இத்துடன் தென்னாப்பிரிக்கா எனும் பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தின் இறுதி நாட்கள்
துவங்குகின்றன.
ஒரு அணியின் திறமைக்கும் கோப்பையை
அது வெல்வதற்கும் அதிக சம்மந்தமில்லை. தென்னாப்பிரிக்காவின் வீழ்ச்சியும் இந்தியாவின்
எழுச்சியும் சிறந்த உதாரணங்கள்.