Skip to main content

கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதி: மீண்டும் திக்குமுக்காடியது தென்னாப்பிரிக்கா


தென்னாப்பிரிக்கா முன்பும் உலகக்கோப்பை காலிறுதி, அரையிறுதிகளில் தற்கொலை ஆட்டம் ஆடியதுண்டு. ஆனால் இம்முறை உலகக்கோப்பை ஆடிய அணி இதுவரையிலான தென்னாப்பிரிக்க அணிகளிலே தலைசிறந்தது. டேல் ஸ்டெயின் தென்னாப்பிரிக்காவில் தோன்றிய தலைசிறந்த வேகவீச்சாளர். ஏ.பி. டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த மட்டையாளர்களில் ஒருவர். அதோடு ஆம்லா, டுமினி, மில்லர், டூப்பிளஸி போன்ற உச்சபட்ச தரம் கொண்ட மட்டையாளர்கள். தொடர்ந்து கழுத்துயரத்துக்கு பந்தை 150 கி.மீ வேகத்தில் எகிற விடும் மோர்க்கல். இவர்கள் தான் அணியின் நியூக்ளியஸ். இது போன்ற ஒரு அபாயகர நியூக்ளியஸ் வேறெந்த அணிக்கும் இல்லை. ஆனாலும் இத்தொடரில் தென்னாப்பிரிக்கா தன் முழுசுதந்திரத்துடன் ஆடியதாக சொல்ல முடியாது. பொதுவாக சுயஎதிர்பார்ப்பும், சம்பிரதாயமான ஆட்டமுறையும் தென்னாப்பிரிக்காவின் இறுக்கத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இம்முறை அபரிதமான திறமையும், டிவில்லியர்ஸின் ஜாலியான தன்னம்பிக்கையான தலைமை பாணியும் தென்னாப்பிரிக்காவை சற்று ஆதிக்கத்துடனே ஆட வைத்தது. ஆனால் அரையிறுதியில் அவர்களுக்கு அது போதவில்லை. முக்கியமான நேரத்தில் அணி அட்டை போல் சுருண்டு விட்டது.

இந்த ஆட்டத்தில் நியுசிலாந்தும் ரொம்ப பதற்றமாக இருந்தது. பந்து வீச்சில் கட்டுப்பாடில்லை. அதனாலே ஒரு கட்டத்தில் டூப்பிளஸியும் டிவில்லியர்ஸும் மூன்றாவது நான்காவது கியர்களில் பறந்த போது நியுசிலாந்த் நடுங்கியது. மழை வராதிருந்து 50 ஓவர்கள் தென்னாப்பிரிக்கா ஆடியிருந்தால் 400 ஓட்டங்கள் நிச்சயம். அவ்வளவு பெரிய இலக்கை நியுசிலாந்தால் சுலபத்தில் விரட்டி இருக்க முடியாது. ஆனால் மழை வந்ததும் நியுசிலாந்துக்கு சாதகமாய் இரண்டு விசயங்கள் நடந்தன. ஒன்று குறைவான ஓவர்கள் ஆடினால் போதும். 43 ஓவர்களில் 298 அடிக்கக் கூடிய ஸ்கோர் தான். அடுத்து மழை ஈரத்தினால் பந்தை அடிப்பது சுலபமாயிற்று. கட்டுப்பாடாய் வீசுவது சிரமமாயிற்று. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு ஐந்தில் ஒரு மடங்கு திறமையும் அனுபவமும் கொண்ட ஒரு அணி அதனை வீழ்த்துவது என்றால் இந்தளவுக்கு அதிர்ஷ்டமாவது வேண்டாமா? மழையினால் ஆட்டம் சமநிலைக்கு வந்தது.
அப்போதும் கூட நியுசிலாந்து மட்டையாளர்கள் மிகுந்த பதற்றமாக தோன்றினார்கள். மெக்கல்லம் வேகமாய் ஆடி அரைசதம் அடித்தாலும் உயரப்பறக்கிற நீர்க்குமிழி போலத் தான் தோன்றினார். அவர் சற்றே பொறுமையாக ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் எடுத்தே கூடுதலாய் முப்பது எடுத்திருந்தால் நியுசிலாந்தின் நிலை இன்னும் எளிதாக இருந்திருக்கும். அவருக்கு பிறகு வில்லியம்ஸன், கப்தில் ஆகியோரும் தேவையின்றி தான் வெளியேறினார்கள். எலியட் வந்த நடுஓவர்களில் தான் நியுசிலாந்த் அமைதியானது. ஆண்டர்ஸனும் தன் வழக்கமான பாணியை மாற்றி பொறுமையாக ஆடினார். எப்போது நியுசிலாந்த பொறுமை கோண்டார்களோ அப்போது தென்னாப்பிரிக்கா பதற்றமானது. 25 ஒவருக்கு பிறகு டிவில்லியர்ஸ் ஸ்டெயினை கொண்டு வந்தார். தென்னாப்பிரிக்காவின் அச்சத்தின் முதல் அறிகுறி அது. நியுசிலாந்த சாமர்த்தியமாக விக்கெட் கொடுக்காமல் ஆடியது. அதே போல் சுழலர் தாஹிருக்கும் விக்கெட் அளிக்காமல் தடுத்தாடினார்கள். இன்றைய நிலையில் விக்கெட் கைவசம் உள்ள ஒரு அணியால் இறுதி சில ஓவர்களில் 10 ஓட்டங்கள் சராசரியில் ஆடுவது எளிதே. அடிப்படையில் இது குழிதோண்டி யானையை பிடிக்கிற விளையாட்டு தான். யானை சற்று கவனமாய் இருந்தால் அதை கயிறு கொண்டு கட்டி பிடிக்க முடியாது. இறுதியாக டிவில்லியர்ஸ் தன்னையே கொண்டு வந்தார். இது முன்னர் ஸ்டீவ் வா அடிக்கடி பயன்படுத்தும் தந்திரம். என்னதான் கவனமாய் ஆடினாலும் ஒரு ரொம்ப சுமாரான வீச்சாளர் வந்தால் ரிஸ்க் எடுத்து அடிக்க தோன்றும். அது மட்டையாளனின் அகங்காரத்தை சீண்டும் முயற்சி. அப்போதும் இருவரும் நிதானம் காத்தனர். என்னைப் பொறுத்த வரையில் இந்த ஆட்டம் பவர் பிளேயின் முன்பு விக்கெட் விழாத நிலையிலேயே நியுசிலாந்துக்கு சாதகமாக மாறி விட்டது.
ஆனால் நாற்பதாவது ஓவரில் ஆண்டர்ஸன் தேவையின்றி வெளியேறினார். அவருக்கு பிறகு வந்த ரோஞ்சியும் பதற்றத்தில் தடுமாறினார். இக்கட்டத்திலும் தென்னாப்பிரிக்கா வென்றிருக்க முடியும். ஆனால் அவர்களோ ரெண்டு கேட்சுகள் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விட்டிருந்தனர். இப்போது இரண்டில் எந்த அணி கூடுதலாய் பதற்றமாய், அதிக கேவலமாய் சொதப்பும் என்பதே கேள்வி. விட்டோரி வந்ததும் நியுசிலாந்த் அமைதியானது. இறுதி ஓவரில் கூட தென்னாப்பிரிக்கா வென்றிருக்கலாம். ஆனால் பதற்றத்தில் ஸ்டெயினின் கால்தசை பிடித்துக் கொண்டது. அவர் இரண்டு மோசமான பந்துகளை வீசினார். ஒன்று நான்குக்கும் இன்னொன்று ஆறுக்கும் போனது.
கடந்த நான்கு உலகக்கோப்பைகளில் செய்த அளவுக்கு தென்னாப்பிரிக்க இம்முறை சொதப்பவில்லை. ஆனாலும் இதுவும் choking தான். எலியட்டின் கேட்சை மட்டும் பிடித்திருந்தால் கூட அவர்கள் ஜெயித்திருக்க முடியும். தென்னாப்பிரிக்காவுக்கு உலகக்கோப்பை வெல்வதற்கான ஆகச்சிறந்த வாய்ப்பும் இது தான். ஏனென்றால் அடுத்த உலகக்கோப்பையின் போது அவர்களிடம் ஸ்டெயின், மோர்க்கல், ஆம்லா, டிவில்லியர்ஸ், டூப்ளஸி, டூமினி ஆகியோர் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் 34, 35 வயதான வெளிறிப் போன வீரர்களாக இருப்பார்கள். இப்போதே 35 வயதாகும் தாஹிர் நிச்சயம் இருக்க மாட்டார். எதிர்கால தென்னாப்பிரிக்கா மில்லர், டி கோக் ஆகிய அடாவடி மட்டையாளர்களையும் ரூசோ, பெஹ்ரதீன் போன்ற நிதான மட்டையாளர்களையும் நம்பி இருக்கும். எதிர்கால தென்னாப்பிரிக்க பந்து வீச்சும் சற்று ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. இத்துடன் தென்னாப்பிரிக்கா எனும் பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தின் இறுதி நாட்கள் துவங்குகின்றன.

ஒரு அணியின் திறமைக்கும் கோப்பையை அது வெல்வதற்கும் அதிக சம்மந்தமில்லை. தென்னாப்பிரிக்காவின் வீழ்ச்சியும் இந்தியாவின் எழுச்சியும் சிறந்த உதாரணங்கள்.

Comments

ஒரு அணியின் திறமைக்கும் கோப்பையை அது வெல்வதற்கும் அதிக சம்மந்தமில்லை. தென்னாப்பிரிக்காவின் வீழ்ச்சியும் இந்தியாவின் எழுச்சியும் சிறந்த உதாரணங்கள். Great words

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...