(இரண்டு வாரங்களுக்கு முன்பான கல்கியில் வெளியான கட்டுரை)
உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்தியாவும்
இறுதியில் நியுசிலாந்தும் பூசாரி ஓங்கிய அருவா முன் நடுங்கியபடி கால்களை பின்னிக் கொண்டு
நகரும் ஆட்டைப் போன்றே சென்று துண்டாகின. அந்த நொடி ஆட்டை அவிழ்த்து விட்டாலும் அது
ஓடாது. தானாகவே சென்று கழுத்தைக் கொடுக்கும். அந்தளவுக்கு மனதளவில் அது தன்னை மரணத்துக்கு
ஒப்புக் கொடுத்திருக்கும். கிரிக்கெட் 90% உளவியல் ஆட்டம் தான். உலகக்கோப்பையின் “நீயா
நானா” கட்டத்தை அடைந்த பின் இந்தியா ஆஸ்திரேலியா எனும் அணியிடம் அல்ல, அந்த அணி மீதான
தன் அச்சத்திடம் தான் மோதியது. அதனாலே தோற்றது.
இத்தொடர் முழுக்க இந்தியா மிக சிறப்பான வீரியமாக
ஒழுங்காக பந்து வீசியது. ஆனால் அரை இறுதியில் ஆஸ்திரேலியா குறித்த பீதி அவர்களின் சமநிலையை
குலைத்தது. டாஸின் போது தோனியே சற்று பதற்றமாக தெரிந்தார். தன் அணியை அவரால் நிதானமாக
வைத்திருக்க இயலவில்லை. Men fear death as children fear to go into dark என்றார் பேகன்.
குழந்தைகள் இருட்டை பார்த்து பயப்படுவது போல் வளர்ந்தவர்கள் மரணத்தை பார்த்து பயப்படுகிறார்கள்.
மரணம் என்ற கற்பனையை தான் அஞ்சுகிறோமே அன்றி மரணத்தை அல்ல. இந்தியா ஆஸ்திரேலியா என்கிற
கற்பனையை அஞ்சி அதிகப்படியாய் முயன்றதில் பந்து வீச்சில் சொதப்பியது. மட்டையாடும் போதும்
ஷிக்கர் தவன் ஏதோ 428ஐ துரத்துவது போல் ஆடினார். உண்மையான இலக்காகிய 328 என்பது ஓவருக்கு
ஐந்து ஓட்டம் விதம் 35 ஓவர் வரை ஆடி விட்டு இறுதி 15 ஓவர்களில் 20-20 பாணியில் அடித்து
அடைய வேண்டியதே என்று தோனி கூறினார். ஆனால் “சின்னத்தம்பி” கவுண்டமணி கண்ணுக்கு ஒரு
லாரி ரெண்டு பைக்குகளாக தெரிந்தது போல முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவின் மட்டையாளர்கள்
கண்ணுக்கு இலக்கே ரெட்டிப்பாக தெரிந்தது போலும்.
ஆஸ்திரேலியாவின் பாக்னர், வாட்ஸன்
மற்றும் மேக்ஸ்வெல் வீசும் பலவீனமான 20 ஓவர்களில் எளிதாக நம் கோலியும் ரெய்னாவும்
160 ஓட்டங்கள் சுலபமாய் எடுத்திருக்கலாம். அதுவே நம்மை 338ஐ நோக்கி கொண்டு சென்றிருக்கும்.
ஆனால் அதற்கு நாம் ஜான்சன் மற்றும் ஸ்டார்க்குக்கு முதல் முப்பது ஓவர்களுக்குள் விக்கெட்
கொடுக்காமல் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் தன் பலவீனமான வீச்சாளர்களை
முழுவதும் வீச வைக்காமல் இறுதி வரை தவிர்த்து வந்தார். ஆனால் அவர்கள் வீச வரும் வரை
விக்கெட்களை பாதுகாக்கும் பொறுமை நம்மவர்களுக்கு இல்லை.
கோலி இரண்டே ஓவர்கள் பொறுத்திருந்தால் கிளார்க்கே
ஜான்சனை வீச்சில் இருந்து அகற்றி இருப்பார். பிறகு மட்டையாடுவது சுலபமாகியிருக்கும்.
எப்போதும் மிகுந்த முதிர்ச்சியுடன் ஆடும் கோலி அன்று இருட்டுக்குள் பயந்த குழந்தை போல்
ஆகி விட்டார். தவனும் கோலியும் வெளியேறின பின் ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்தே போனது.
பவர் பிளேயில் ரஹானேயின் வெளியேற்றமும் பதற்றத்தின் விளைவு தான். பவர் பிளே ஆரம்பித்தாலே
ரஹானே தன்னை நிரூபிக்க வேண்டும் எனும் ஆவேசம் கொண்டு தேவையின்றி வெளியேறி விடுகிறார்.
அவர் எப்போதும் போல் நிதானமாய் ஆடினாலே அவருக்கு நான்கு ஓட்டங்கள் எளிதில் கிட்டும்.
இந்தியாவின் மற்றொரு முக்கிய பலவீனம்
இத்தொடர் முழுக்க ஜடேஜா தான். ஓரளவு நன்றாக வீசினாலும் அவரால் அடித்தாடவோ நிலைக்கவோ
முடியவில்லை. அதனால் தோனி மட்டுமே இறுதி பத்து ஓவர்களில் சிக்ஸர் அடிக்க முடியும் எனும்
நிலை. அவருக்கு பதில் யுவ்ராஜ், கம்பீர், உத்தப்பா, சேவாக் என யார் தோனியுடன் அந்நிலையில்
இருந்திருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் இருந்திருக்கும். ஜடேஜாவின்
பத்து ஓவர்களை ரெய்னா, ரோஹித் ஆகியோர் மூலம் சமாளித்திருக்கலாம். ஆஸ்திரேலியா வாட்ஸன்,
மேக்ஸ்வல் மூலம் அதையே தொடர் முழுக்க செய்தது. ஆனால் ஜடேஜா தேர்வின் மூலம் தோனி ஒரு
பெரிய தவறை இழைத்து விட்டார்.
யாருமே எதிர்பாராத கட்டத்தில்
உலகக்கோப்பை அரை இறுதி வரை வந்ததே அற்புதம் என நாம் ஆசுவாசப்படலாம் என்றாலும் அந்த
ஆட்டத்தை ஜெயிக்க நமக்கு இருந்த ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டோம் என்பதே உண்மை. சொல்லப்
போனால் அரை இறுதி என்பது இறுதி போலத் தான். ஏனென்றால் இறுதிப் போட்டியில் நியுசிலாந்த்
நமக்கு ஒரு பொருட்டாகவே இருந்திருக்க மாட்டார்கள்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை
வெல்ல நியுசிலாந்துக்கு விஜயகாந்த் முதல்வராகும் அளவு தான் வாய்ப்பு இருந்தது. ஆனாலும்
அவர்கள் மிகவும் பதற்றமாக, குழப்பமாக ஆடி இறுதிப்போட்டியை ரஜினியின் கோச்சடையான் போல்
ஆக்கி விட்டார்கள். மட்டையாட்டம், பந்து வீச்சு என இரண்டு தளத்திலுமே அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு
சவால் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியா முன் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விட்டார்கள்.
50 ஓவர் உலகக்கோப்பையை வெல்வதற்கு
அனுபவமும் அந்தஸ்து தரும் தன்னம்பிக்கையும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகக்கோப்பை
மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நடக்கப் போகும் அடுத்த
20 ஓவர் உலகக்கோப்பைக்கு இது பொருந்தாது. ஜடேஜாவுக்கு பதில் அக்ஷர் பட்டேலை களமிறக்கும்
பட்சத்தில் அக்கோப்பையை நாம் தூக்கிக் கொண்டு வந்து விடலாம்.