முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பை கடாவிருந்தில் இந்தியாவும் நியுசிலாந்தும்


Image result for new zealand vs australia final

(இரண்டு வாரங்களுக்கு முன்பான கல்கியில் வெளியான கட்டுரை)
உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்தியாவும் இறுதியில் நியுசிலாந்தும் பூசாரி ஓங்கிய அருவா முன் நடுங்கியபடி கால்களை பின்னிக் கொண்டு நகரும் ஆட்டைப் போன்றே சென்று துண்டாகின. அந்த நொடி ஆட்டை அவிழ்த்து விட்டாலும் அது ஓடாது. தானாகவே சென்று கழுத்தைக் கொடுக்கும். அந்தளவுக்கு மனதளவில் அது தன்னை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்திருக்கும். கிரிக்கெட் 90% உளவியல் ஆட்டம் தான். உலகக்கோப்பையின் “நீயா நானா” கட்டத்தை அடைந்த பின் இந்தியா ஆஸ்திரேலியா எனும் அணியிடம் அல்ல, அந்த அணி மீதான தன் அச்சத்திடம் தான் மோதியது. அதனாலே தோற்றது.

 இத்தொடர் முழுக்க இந்தியா மிக சிறப்பான வீரியமாக ஒழுங்காக பந்து வீசியது. ஆனால் அரை இறுதியில் ஆஸ்திரேலியா குறித்த பீதி அவர்களின் சமநிலையை குலைத்தது. டாஸின் போது தோனியே சற்று பதற்றமாக தெரிந்தார். தன் அணியை அவரால் நிதானமாக வைத்திருக்க இயலவில்லை. Men fear death as children fear to go into dark என்றார் பேகன். குழந்தைகள் இருட்டை பார்த்து பயப்படுவது போல் வளர்ந்தவர்கள் மரணத்தை பார்த்து பயப்படுகிறார்கள். மரணம் என்ற கற்பனையை தான் அஞ்சுகிறோமே அன்றி மரணத்தை அல்ல. இந்தியா ஆஸ்திரேலியா என்கிற கற்பனையை அஞ்சி அதிகப்படியாய் முயன்றதில் பந்து வீச்சில் சொதப்பியது. மட்டையாடும் போதும் ஷிக்கர் தவன் ஏதோ 428ஐ துரத்துவது போல் ஆடினார். உண்மையான இலக்காகிய 328 என்பது ஓவருக்கு ஐந்து ஓட்டம் விதம் 35 ஓவர் வரை ஆடி விட்டு இறுதி 15 ஓவர்களில் 20-20 பாணியில் அடித்து அடைய வேண்டியதே என்று தோனி கூறினார். ஆனால் “சின்னத்தம்பி” கவுண்டமணி கண்ணுக்கு ஒரு லாரி ரெண்டு பைக்குகளாக தெரிந்தது போல முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவின் மட்டையாளர்கள் கண்ணுக்கு இலக்கே ரெட்டிப்பாக தெரிந்தது போலும்.
ஆஸ்திரேலியாவின் பாக்னர், வாட்ஸன் மற்றும் மேக்ஸ்வெல் வீசும் பலவீனமான 20 ஓவர்களில் எளிதாக நம் கோலியும் ரெய்னாவும் 160 ஓட்டங்கள் சுலபமாய் எடுத்திருக்கலாம். அதுவே நம்மை 338ஐ நோக்கி கொண்டு சென்றிருக்கும். ஆனால் அதற்கு நாம் ஜான்சன் மற்றும் ஸ்டார்க்குக்கு முதல் முப்பது ஓவர்களுக்குள் விக்கெட் கொடுக்காமல் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் தன் பலவீனமான வீச்சாளர்களை முழுவதும் வீச வைக்காமல் இறுதி வரை தவிர்த்து வந்தார். ஆனால் அவர்கள் வீச வரும் வரை விக்கெட்களை பாதுகாக்கும் பொறுமை நம்மவர்களுக்கு இல்லை.
 கோலி இரண்டே ஓவர்கள் பொறுத்திருந்தால் கிளார்க்கே ஜான்சனை வீச்சில் இருந்து அகற்றி இருப்பார். பிறகு மட்டையாடுவது சுலபமாகியிருக்கும். எப்போதும் மிகுந்த முதிர்ச்சியுடன் ஆடும் கோலி அன்று இருட்டுக்குள் பயந்த குழந்தை போல் ஆகி விட்டார். தவனும் கோலியும் வெளியேறின பின் ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்தே போனது. பவர் பிளேயில் ரஹானேயின் வெளியேற்றமும் பதற்றத்தின் விளைவு தான். பவர் பிளே ஆரம்பித்தாலே ரஹானே தன்னை நிரூபிக்க வேண்டும் எனும் ஆவேசம் கொண்டு தேவையின்றி வெளியேறி விடுகிறார். அவர் எப்போதும் போல் நிதானமாய் ஆடினாலே அவருக்கு நான்கு ஓட்டங்கள் எளிதில் கிட்டும்.
இந்தியாவின் மற்றொரு முக்கிய பலவீனம் இத்தொடர் முழுக்க ஜடேஜா தான். ஓரளவு நன்றாக வீசினாலும் அவரால் அடித்தாடவோ நிலைக்கவோ முடியவில்லை. அதனால் தோனி மட்டுமே இறுதி பத்து ஓவர்களில் சிக்ஸர் அடிக்க முடியும் எனும் நிலை. அவருக்கு பதில் யுவ்ராஜ், கம்பீர், உத்தப்பா, சேவாக் என யார் தோனியுடன் அந்நிலையில் இருந்திருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் இருந்திருக்கும். ஜடேஜாவின் பத்து ஓவர்களை ரெய்னா, ரோஹித் ஆகியோர் மூலம் சமாளித்திருக்கலாம். ஆஸ்திரேலியா வாட்ஸன், மேக்ஸ்வல் மூலம் அதையே தொடர் முழுக்க செய்தது. ஆனால் ஜடேஜா தேர்வின் மூலம் தோனி ஒரு பெரிய தவறை இழைத்து விட்டார்.
யாருமே எதிர்பாராத கட்டத்தில் உலகக்கோப்பை அரை இறுதி வரை வந்ததே அற்புதம் என நாம் ஆசுவாசப்படலாம் என்றாலும் அந்த ஆட்டத்தை ஜெயிக்க நமக்கு இருந்த ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டோம் என்பதே உண்மை. சொல்லப் போனால் அரை இறுதி என்பது இறுதி போலத் தான். ஏனென்றால் இறுதிப் போட்டியில் நியுசிலாந்த் நமக்கு ஒரு பொருட்டாகவே இருந்திருக்க மாட்டார்கள்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்ல நியுசிலாந்துக்கு விஜயகாந்த் முதல்வராகும் அளவு தான் வாய்ப்பு இருந்தது. ஆனாலும் அவர்கள் மிகவும் பதற்றமாக, குழப்பமாக ஆடி இறுதிப்போட்டியை ரஜினியின் கோச்சடையான் போல் ஆக்கி விட்டார்கள். மட்டையாட்டம், பந்து வீச்சு என இரண்டு தளத்திலுமே அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியா முன் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விட்டார்கள்.

50 ஓவர் உலகக்கோப்பையை வெல்வதற்கு அனுபவமும் அந்தஸ்து தரும் தன்னம்பிக்கையும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகக்கோப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நடக்கப் போகும் அடுத்த 20 ஓவர் உலகக்கோப்பைக்கு இது பொருந்தாது. ஜடேஜாவுக்கு பதில் அக்‌ஷர் பட்டேலை களமிறக்கும் பட்சத்தில் அக்கோப்பையை நாம் தூக்கிக் கொண்டு வந்து விடலாம். 

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
// விஜயகாந்த் முதல்வராகும் அளவு தான் // ஹா... ஹா...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...