20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனையை ஆந்திர அரசு × தமிழர்கள் என தமிழ் தேசிய மனப்பான்மையுடன் மட்டும் பார்க்காமல் இந்தியா முழுக்க காவல்துறை செய்து வரும் மனித உரிமை மீறல் குற்றங்களின் ஒரு பகுதியாகவும் காண வேண்டும். தமிழகத்தில் ரவுடிகளும் பிற குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்படும் போதும் நாம் இவ்வாறே அதை எதிர்க்க வேண்டும். லாக் அப் வன்முறை உள்ளிட்ட அனைத்து வகை காவல் துறை வன்முறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.
கடந்த வருடம் ஒரு வழக்கில் பொய் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்ட ஒரு வேலைக்காரப் பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட
வழக்கு நினைவிருக்கும். அதே போன்று வட, வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினர் பழங்குடிகளுக்கு
எதிராக செய்து வரும் குற்றங்கள். காவல் துறையின் அடிப்படையான சீரழிவை சீர்செய்வதன்
மூலம் மட்டும் தான் இது போன்ற என்கவுண்டர்களை தடுக்க முடியும். அதே போல் கவுதம் மேனன்
போன்றவர்கள் எடுக்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளைக் கொண்டாடும் படங்களுக்கும் நாம்
தடை கோர வேண்டும்.
உள்ளூரில் என்கவுண்டர்களை கொண்டாடும் மனநிலை
ஒழிந்தால்
மட்டுமே நம் ஆட்கள் வெளிமாநிலங்களில் அவ்வாறு கொல்லப்படுவது நிற்கும். அதே போல் காவல்துறை
மீதான உச்சபட்ச அதிகாரத்தை அரசிடம் இருந்து நீதிமன்றங்கள் வசம் ஒப்படைத்து, மனித உரிமை
மற்றும் என்.ஜி.ஓக்கள் மூலமாக பொதுமக்களே நிர்வகிக்கும் சாத்தியங்கள் பற்றியும் நாம்
பேச வேண்டும். அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் கையாளாக காவல்துறை இருக்கும் வரை அதை
ஒழுங்குபடுத்தி நியாயமாக செயல்பட வைப்பது சாத்தியமே இல்லை. காவல்துறை மக்களுக்காக வேலை
செய்ய அது மக்கள் பொறுப்பில் வர வேண்டும்.
நாம் மக்களாட்சியின் கீழ் வாழ்ந்தாலும் நம் ஆட்சியாளர்களின்
பொறுப்பின்மை மற்றும் தவறுகளை தட்டிக் கேட்க நமக்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதற்குப் பதிலாக அரசாங்கத்தின் பாதி அதிகாரத்தை நீதிமன்றம் மூலமாய் மக்களே திரும்ப
பெறுவது தான் வழி. ஒரு வழக்கு மூலம் சுலபமாய், அரசின் குறுக்கீடின்றி ஒரு ஆணையரையே
பதவி நீக்கும் அதிகாரம் நமக்கு கிடைத்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் சுலபத்தில் முடிவுக்கு
வரும். நேற்று ஒரு கார் ஓட்டுநர் என்னிடம் அவர் போக்குவரத்து காவலர்களால் ஊழலின் பெயரில்
அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி புலம்பிக் கொண்டு வந்தார். இவர்களுக்கு எல்லாம் நீதி
கிடைக்க எந்த உடனடி வழியும் இல்லை. நமக்கு மற்றொரு புதுவகை லோக்பால் வேண்டும்.
நிலப் பறிமுதல் சட்டத்தை எடுத்துக்
கொள்ளுங்கள். ஒரு அரசு எப்படி தன் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக, சில கார்ப்பரேட்டுகளுக்கு
ஆதரவாக ஒரு சட்டத்தை திருத்த முடியும் என்பதற்கு அது ஒரு ஆதாரம். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில்
ஒப்புதல் பெற்று ஒரு சட்டதிருத்தத்தை நிலுவையில் கொண்டு வரும் வழக்கத்தை மாற்றி, மூன்றாவதாக
நீதிமன்றத்திடம் கொண்டு சென்று அங்கு மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னரே
எந்த சட்டதிருத்தமோ புது சட்டமோ கொண்டு வர முடியும் என்கிற நிலை வர வேண்டும். இப்போது
நம்மிடம் செயல்படுவது மக்களாட்சி அல்ல. ஒரு மென்மையான சர்வாதிகார ஆட்சி.
ஏற்கனவே இங்கு பேசப்பட்ட லோக்பால்
போன்ற எந்த நிபுணர் குழுக்களும் நடுவில் இன்றி மக்களும் நீதின்றங்களுமாய் இந்நாட்டை
நிர்வகிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு கொடுங்குற்றம் நிகழும் போதே மீடியாவில்
புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அதிகாரத்தின் உச்சிக்கொம்பில் இருப்பவர் காதில்
இதெல்லாம் விழாது.