காலை எழுந்ததும்
இது ஒரு ஞாயிற்றுக்கிழமை
என நம்பத் தொடங்குகிறேன்
சோம்பல் முறித்து
கண்ணோர பீளையை துடைத்து
தடுமாறியபடி நடந்து
கழிப்பறை போகிறேன்
மூத்திரம் போகையில்
துண்டுத் துண்டுக் கனவுகள்
முட்டைகளை உடைத்து பாத்திரத்தில்
ஊற்றியது போல்
ஒவ்வொன்றாய்…
எங்கோ வானொலியில் யாரோ உற்சாகமாய்
தடதடத்து பேச
பறவைகள் கத்துகின்றன
சாலையில் ஒரே ஒரு ஆட்டோ மெதுவாய்
நகர்ந்து போகிறது
சில்லென எதுவோ விழுந்து உடைகிறது
ஜன்னல் துண்டுக் காட்சியில்
பக்கத்து வீட்டு வரவேற்பறையில்
கூட்டமாய் தரையில் இருந்து
சாப்பிட்டபடி
எனக்குத் தெரியாத டிவி ஒன்றைப்
பார்க்க்கிறார்க்ள்
நிச்சயமாய் இது ஞாயிற்றுக் கிழமை
தான்
உடம்பின் இந்த முறுக்கிக் கொள்ளும்
சோம்பல்
நரம்புகளில் அதிரும் மென்வலி
இமைகளின் கனம்
ஜவ்வு போல் நீளும் நேரம்
டிவியை இயக்க
சிறப்பு நிகழ்ச்சிகள் ஒடுகின்றன
மனைவி வந்து
நேரம் ஆகி விட்டதென்கிறாள்
கடிகாரத்தைக் காட்டுகிறாள்
அவள் குளித்து
கொண்டை கட்டி
முகத்தில் களிம்பு பூசியிருக்கிறாள்
குளிர்ப்பெட்டியில் இருந்து வெளிவந்த
முட்டை போல
பளிச்சென்று இருக்கிறாள்
அலுவலக ஆடை அணிந்து கொண்டு
அடிக்கடி தன் நுண்பேசியை பார்க்கிறாள்.
அவள் ஞாயிற்றுக் கிழமையில் இல்லை.
அது புதன் கிழமை என்கிறாள்.
சோபாவில் கிடக்கும் ஒரு வாரத்திற்கான
நாளிதழ்க்ளை
கொத்தாய் கொண்டு வருகிறாள்
அவற்றில் போன ஞாயிறில் ஆரம்பித்து
புதன் வரை இருக்கிறது
நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு,
கொடும் கொலைக்ள்
என ஆரம்பித்து
மென்மையான ஊழல்கள், அதிராத குற்றச்சாட்டுகள்
என புதன் வரும் போது
ஒரு ஆறுதலான நிலைமை தெரிகிறது
ஆனால் வியாழன், வெள்ளி, சனி எங்கே?
ஞாயிறு பத்திரிகை என்றும் தாமதம்
தானே
அதுவே ஒரு ஆதாரம் அல்லவா?
அவள் புதன் பத்திரிகையின் தேதியை
நுண்பேசியை
நாட்காட்டியை
டிவியின் தகவல்பெட்டியின் விபரங்களைக்
காட்டுகிறாள்
ஒரு மணிநேரத்தில் எங்கள் வீட்டைக்
கடந்து போகும்
தகர டிரம்மில் பிரம்மாண்ட எலிகள்
ஓடுவதான பத்து ரயில்களின் சத்தமும் உடலைத் துளைத்து ஓடும் விசில்களும்
கேட்கும் போது உரையாடலை நிறுத்தி
கூர்ந்து கவனிக்கிறோம்
ஓய்வு நாளில் இத்தனை ரயில்கள்
ஓடாது தெரியுமில்லையா?
இன்றைய வேலையை காலைக்குள் முடித்து
விடும்படி
என் மேலாளர் அனுப்பின குறுஞ்செய்தியைக்
காட்டுகிறாள்.
நான் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளைக்
காட்ட
அது தினமும் வருவது தானே என்கிறாள்.
எனக்கு ஒரே ஆதாரம் தான்
எல்லா வேலை நாளும்
ஞாயிறு என்று பொறுமையாய் தூங்கி
விட்டு
துள்ளி எழுந்து
அவசரமாய் கிளம்புவேன்
இன்று மட்டுமே
அவசரமாய் எழுந்து
பொறுமையாய் யோசிக்கிறேன்.