தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான
ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் 438 ஓட்டங்களை தென்னாப்பிரிக்கா எடுத்து பெரும் வெற்றியை
பெற்றது. இந்தியா தொடரை இழந்தது. தோனி இதற்கு இரு காரணங்களை முன்வைக்கிறார். 1) இந்தியாவில்
விக்கெட் வீழ்த்துகிற சிறந்த சுழலர்களோ வேகவீச்சாளர்களோ இல்லை. வேகமாய் வீசுபவர்கள்
(உமேஷ் யாதவ் போல) வெறுமனே ரன்களை மட்டுமே கொடுக்கிறார்கள். அவர்களுக்கு விக்கெட் எடுக்க
தெரியவில்லை. 2) அக்ஸர் பட்டேல், ஜடேஜா மற்றும் பின்னியை தவிர நம்மிடம் ஆல்ரவுண்டர்கள்
இல்லை.
முதல் காரணம் உண்மையா என நாம் இதே வீச்சாளர்கள் வரப்
போகும் டெஸ்ட் தொடரில் கோலியின் கீழ் எப்படி வீசப் போகிறார்கள் எனப் பார்த்து விட்டு
முடிவு செய்வோம். இரண்டாவது காரணத்தை பொறுத்த மட்டில் குர்குரீத் சிங்தீ, தீபக் ஹூடா,
ஹர்த்தீக் பாண்டே ஆகியோருக்கு ஒரு வாய்ப்பு கூட அளிக்காமல் ஆல் ரவுண்டர்களே வேறு இல்லை
என எப்படி தோனி முடிவுக்கு வர முடியும்?
நாம் தோனியின் கீழ் மேலும் சில
ஒருநாள் தொடர்களையும் இது போல் அடுத்து இழக்கத் தான் போகிறோம். அப்போதும் தோனி நம்மிடம்
வேறு வீரர்களே இல்லை என இதே காரணங்களைத் தான் கூறப் போகிறார். பிரச்சனை என்னவென்றால்
தோனி புது வீரர்களை அறிமுகப்படுத்தவோ தன் திட்டமிடல் மற்றும் தலைமை பாணியை மறுபரீசலனை
பண்ணவோ போவதில்லை.
ஒரு தட்டையான ஆடுதளத்திலும் நாம்
விக்கெட் வீழ்த்த முயல வேண்டும். ஆனால் நம் வீச்சாளர்கள் முதல் ஓவரில் இருந்தே ஓட்டங்களை
தடுக்கவே முயல்கிறார்கள். மோஹித்தும் புவனேஷ்வர குமாரும் ஓடி வருவது பார்க்கும் போது
எங்கே மட்டையாளர்களின் காலில் விழுந்து கெஞ்சி விடுவார்களோ என நான் அஞ்சுவதுண்டு. இந்தளவுக்கு
எதிர்மறையாய் ஆடும் பந்து வீச்சாளர்கள் உலகில் எங்குமே இல்லை. தோனியும் இதற்கு முக்கிய
காரணம். ஒருவேளை இந்தியா முதலில் ஆடி 438 அடித்திருந்தாலும் தென்னாப்பிரிக்கா இரண்டாவதாய்
ஆடி 380வது வந்திருப்பார்கள். நமது வீச்சாளர்கள் மற்றும் தலைவரின் காலில் விழுந்து
கெஞ்சும் பாணி அந்தளவுக்கு எதிரணி மட்டையாளர்களுக்கு உற்சாகம் கொடுக்கக் கூடியது. இதே
தட்டையான தளத்தில் தென்னாப்பிரிக்க வேகவீச்சாளர்கள் ஆபெட்டும், ரபெடாவும் மிகுந்த உத்வேகத்துடன்
மூர்க்கத்துடன் வீசியது கண்டு வியப்பாக இருந்தது. நம்மிடம் இது போன்ற வீச்சாளர்கள்
இல்லாமல் இல்லை. உமேஷ் யாதவ், வாரன் அரொன், பும்ரா போன்றோருக்கு தொடந்து வாய்ப்பளித்து
இது போல் வளர்த்தெடுக்க இயலும். ஆனால் தோனி இருக்கும் வரை மோஹித் ஷர்மாக்களுக்கு தான்
கொண்டாட்டம். போன உலகக் கோப்பையின் வார்ம் அப் ஆட்டம் ஒன்றில் மோஹித் பந்து வீசும்
போது முதல் ஓவரிலே ஸ்லோ பந்து வீசினார். அதைப் பார்த்த வசீம் அக்ரம் கடுமையாய் விமர்சித்தார்.
வேகவீச்சாளன் பந்து புதிதாய் உள்ள போது வேகமாய் வீச வேண்டும். மெதுவாய் வீசுவது சுழலர்களின்
வேலை என்றார். மோஹித் எல்லாம் பாகிஸ்தானில் இருந்து ஓட ஓட துரத்துவார்கள்.
ஒரு தொடரை வெல்வதோ தோற்பதோ பொருட்டல்ல;
அடுத்த 2019 உலகக்கோப்பைக்கு தயாராவது தான் முக்கியம் என தோனி கூறி உள்ளார். அடுத்த
4 வருடங்களும் இதே அணி மாற்றமின்றி இதே போல் ஆடப் போகிறது என நினைக்க பயமாய் இருக்கிறது.