மாணவர்களுக்கு ஆசிரியர் மீதுள்ள
பிரியம் தனித்துவமானது. மத்திய வர்க்க இளைஞர்கள் தம் பெற்றோருக்கு இணையாகவே ஆசிரியரைப்
பார்க்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன்பு பயிற்று வித்த மாணவர்களை இன்றும்
அடிக்கடி பல இடங்களில் சந்திக்கிறேன். நான் குருநானக்கில் வேலை செய்யும் போது அஷ்வின்
மற்றும் ஆண்டனி என இரு மாணவர்கள் இலக்கிய நாட்டம் கொண்டவர்களாய் இருந்தார்கள். ஆனால்
இருவரும் இலக்கிய துறை மாணவர்கள் அல்ல. நான் ஒரு நாள் வகுப்பில் நீட்சே பற்றி குறிப்பிட்டேன்.
வகுப்பு முடிந்ததும் அஷ்வின் என்னைத் தேடி வந்து நீட்சே நிறைய கேட்டான். இலக்கியம்,
தத்துவம் பற்றி பேசினான். அவன் தால்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” படித்து வருவது பற்றி
சொன்னான். தல்ஸ்யாயின் வாசகன் என்றதுமே அவனை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பிறகு
தினமும் நாங்கள் கல்லூரி வளாகங்களில் மணிக்கணக்காய் பேசியபடி இருப்போம்.
ஒருமுறை நான்
அவனிடம் சொன்னேன் “இந்த கல்லூரியில் எண்ணூறுக்கும் மேல் மாணவர்களும் ஆசிரியர்களும்
இப்போது இருக்கிறார்கள். ஆனால் நாம் இருவர் மட்டுமே “போரும் வாழ்வும்” பற்றி இந்த தருணத்தில்
பேசிக் கொண்டிருக்கிறோம். நம்மைத் தவிர யாருக்கும் இந்த உலகமோ இதன் உண்மையோ மொழியோ
தெரியாது. நாம் தனியான யாரும் வரமுடியாத ஒரு உலகில் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம்.
இதை நினைக்க விசித்திரமாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது”. கல்லூரி முடிந்த பின்னும்
இப்போதும் நாங்கள் அடிக்கடி சந்தித்து கொள்கிறோம். போன வருடம் Great Gatsby படம் வெளியான
போது இருவருமாய் பார்க்க சென்றோம். அந்நாவல் பற்றியும் படம் பற்றியும் நிறைய பேசிக்
கொண்டிருந்தோம்.
ஆண்டனி தமிழ் நவீன நூல்கள் அதிகம் படிப்பான். ரொம்ப
குறைவாய் பேசுவான். என்னைப் போல அவன் அழுத்தமானவன். மனதில் பட்டதை தயங்காமல் சொல்லுவான்.
அதனாலும் அவனது வாசிப்பினாலும் என் நண்பனானான். கல்லூரி முடிந்ததும் என் வண்டியில்
அவனை ஏற்றிக் கொண்ட நூலகம் செல்வேன். சிலநாள் என் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பான்.
கல்லூரி முடித்த பின் அவன் ஊடகவியலில்
முதுகலை பட்டம் பெற்ற பின் இப்போது ஒரு டிவியில் வேலை செய்கிறான். நான் சமீபமாய் வேலைக்காய்
முயன்று வந்தேன். அதை அவனிடம் குறிப்பிட்ட போது அவனாகவே முயன்று எனக்கு அவன் நிறுவனத்தில்
ஒரு நேர்முகத்திற்கான வாய்ப்பு வாங்கித் தந்தான். எனக்கு உதவுவதில் அவனுக்கு அப்படி
ஒரு மகிழ்ச்சி. இன்று வீடு திரும்பும் வழியில் ஒரு பி.பி.ஓவில் நுழைந்து என் ரெசியூமை
கொடுத்து வேலை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன். அங்கு பார்த்தால் என் மாணவி ஒருவரை
பார்த்தேன். மிகுந்த அன்புடன் என்னிடம் வந்து விசாரித்தாள். நான் அவளை அடையாளம் கண்டு
கொண்டேன் என அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. பிறகு அவளாகவே என்னை மனிதவளத்துறைக்கு
அழைத்துப் போய் அறிமுகம் செய்த தேவையான உதவிகளைச் செய்தாள். “இங்கே பயிற்சியாளர் வேலை
கிடைத்தால் சேர்ந்து கொள்ளுங்கள். எனக்கு பயிற்சியாளராக நீங்கள் வந்து விடுங்கள்” என்றாள்.
மாணவர்கள் படித்து முடித்த பிறகு நம்மை பிறகு பார்க்கும் போதும் குழந்தைகளைப் போன்றே
உணர்வதை, நம்மிடம் குழந்தைமையுடனே பேசுவதை கவனித்தேன். எவ்வளவு காலம் கடந்தாலும், எந்த
இடத்துக்கு வந்தலும் சில உறவுகள் மாறுவதில்லை.