தமிழக
அரசியலில் முன்னெப்போதும் இல்லாத விசித்திர சூழல் உருவாகி உள்ளது. ஜெயயலிதாவின் உடல்நலக்
கேடு, கருணாநிதியின் முதுமை, அதிமுகவுக்குள் மாற்று சக்திகளின் எழுச்சி, தி.மு.கவில்
ஸ்டாலின் தன் அப்பாவையே எரிச்சல்பட வைக்கும் அளவு வளர்ந்துள்ளது அடிப்படையில் இங்குள்ள்
அரசியல் தலைமையை பலவீனமாக்கி உள்ளது. எம்.ஜி.ஆர் உடல் நலமற்று, கட்சியில் தன் பிடிப்பை
இழந்த கட்டத்திலும் இங்கு மாற்றுத் தலைவராக திமுகவில் கருணாநிதி இருந்தார். இன்று ஜெயலலிதாவுக்கும்
கருணாநிதிக்கும் மாற்றாக விஜயகாந்தும் ஸ்டாலினும் மட்டுமே உள்ளார்கள்.
விஜயகாந்துக்கு
அரசியல் நிர்வாக அனுபவமோ ஒரு தலைவராக ஆளுமையோ இல்லை. ஸ்டாலின் இதுவரை தலைமையை ருசிக்காதவர்.
மக்கள் மத்தியில் ஒரு தலைவராக அவரது செல்வாக்கு என்னவென நமக்கு தெரியாது.
இந்த
சூழலில் தான் மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது அணியாக இத்தேர்தலில் களமிறங்குகிறது. வாக்குகளில்
மூன்றில் ஒரு பங்கை அது பிரிக்கலாம் என கணிக்கப்படுகிறது. முதன்முறையாய் திமுக மூன்றாம்
அணியை ஒரு தலைவலியாக கருதுகிறது. விஜயகாந்த் போன்ற ஒரு மூன்றாம் நிலை தலைவரை திமுகவும்
அதிமுகவும் போட்டியாளராக யோசித்துப் பார்க்கும் என்பதே சில வருடங்களுக்கு முன் யாராவது
சொன்னால் நகைச்சுவையாய் கருதப்பட்டிருக்கும். போன தேர்தலில் தெமுதிக 29 இடங்களை வென்றது
திமுகவின் படுதோல்வியின் பின்னணியில் முக்கியமானது. ஏனென்றால் இதற்கு முன் ஒரு திராவிட
கட்சி தோல்வி அடைந்தால் மற்றொரு திராவிட கட்சி முழுவெற்றி பெறும். திராவிட கட்சிகள்
மாறி மாறி முன்னிலை பெறும். ஆனால் திராவிட கட்சிகளில் ஒன்றை முதன்முறையாய் தெமுதிக
பின்னணியில் தள்ளியது. தி.மு.கவை மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள், பா.ம.க, மற்றும் இடதுசாரிகளின்
இடத்தை காலி செய்தது. தி.மு.கவும் இத்தேர்தலில் மீண்டு வர உள்ள வாய்ப்பும் இவர்களுக்கு
இப்போதைக்கு இல்லை. இந்நிலையில் தான் தெமுதிகவை தன் கூட்டணியில் சேர்க்க தி.மு.க மிகவும்
பிரயத்தனம் செய்ய வேண்டியாகியது.
ஆனால்
அதே நேரம் இச்சூழல் முழுக்க போன தேர்தலின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உருவானது
என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தேர்தலில் தெமுதிக தன்னை தக்க வைக்கும் என்பதற்கும்
எந்த உறுதியும் இல்லை. ஒருவேளை இத்தேர்தலுடன் திமுகவும் அதிமுகவும் தம்மை வலுப்படுத்திக்
கொள்ளவும் வாய்ப்புண்டு.
ஆனால்
உண்மையான பிரச்சனை வேறு. அதிமுக கடந்த ஐந்தாண்டுகளில் செய்த பிரம்மாண்ட ஊழல்கள், வெள்ளத்தின்
போது அதன் நிர்வாகம் திணறிய விதம், ஜெயலலிதா மக்களையோ மீடியாவையோ சந்திப்பதை முடிந்தவரை
தவிர்ப்பது இங்கு கிட்டத்தட்ட ஆட்சியில் எந்த கட்சியுமே இல்லையோ எனும் ஐயத்தை மக்களுக்கு
ஏற்படுத்தி உள்ளது.
திமுகவை
பொறுத்தவரையில் கட்சியை புதுப்பித்து மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை பெற அவர்கள்
ஸ்டாலினை தலைவராக முன்னிறுத்துவது தான் ஒரே வழி. ஆனால் கருணாநிதிக்கு அதிகார ருசி இன்னும்
தீரவில்லை. அவர் தன் மகனையே தனக்கு போட்டியாக நினைக்கிறார். கருணாநிதி தலைவராய் நீடிப்பதன்
முக்கிய சிக்கல் அவரது பிற வாரிசுகளின் அதிகார துஷ்பிரயோகம் தான். ஒருவேளை அவர் அடுத்த
முதல்வர் ஆகிறார் என்றால் கனிமொழிக்கு ஒரு முக்கிய பதவி கொடுப்பார். அழகிரியையும் மன்னித்து
ஏற்றுக் கொள்வார். மாறன் சகோதரர்களும் வேட்டைக்கு கிளம்பி விடுவார்கள். இந்த மூவரையும்
அதிகார களத்தில் இருந்து வெளியேற்றி தி.மு.கவை ஒரு கட்டுக்கோப்பான கட்சியாக மாற்றுவதற்கு
சிறந்த வழி ஸ்டாலினை தலைவராக்கி முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே. வீட்டில்
ஒரு பூனையிருந்தால் எலிகளின் ராஜ்ஜியம் தானே அடங்கி விடுமே. ஆனால் கருணாநிதி பூனையை
கட்டிப் போட்டு விட்டு எலிகள் உருவாக்கும் களேபரத்தில் தன் அதிகாரத்தை தக்க வைக்க முனைகிறார்.
அதிமுகவுக்குள்
ஜெயலலிதாவுக்கு போட்டித்தரப்பாக முன்னர் சசிகலா இருந்தார். பின்னர் இப்போது பன்னீர்
செல்வத்தின் குழுவினர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை பொறுத்தமட்டில் முக்கிய தலைவலி இவர்களே.
உடல்நிலை, ஊழல் வழக்குகள் வேறு அவரை பலவீனப்படுத்தி உள்ளது. இத்தேர்தலில் பெரும் வெற்றி
பெற்றால் மட்டுமே அவர் இந்த எதிர் அதிகார மையங்களை முழுக்க நசுக்கி விட்டு மீண்டும்
முழுமுதல் தலைவராக முடியும். சராசரி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கூட அது கட்சிக்குள்
தலைமைக்கு எதிரான கலகங்களை இன்னும் தீவிரப்படுத்தும்.
அடுத்த
ஐந்து வருடங்களில் தமிழகத்தின் தலைமை மையங்கள் எப்படி உருக்கொள்ளப் போகின்றன என்பது
சுவாரஸ்யமான கேள்வி. காத்திருந்து பார்ப்போம்!
நன்றி: வெற்றிவேந்தன், ஏப்ரல் 2016