முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக அரசியலில் தலைமை வெற்றிடம்


தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத விசித்திர சூழல் உருவாகி உள்ளது. ஜெயயலிதாவின் உடல்நலக் கேடு, கருணாநிதியின் முதுமை, அதிமுகவுக்குள் மாற்று சக்திகளின் எழுச்சி, தி.மு.கவில் ஸ்டாலின் தன் அப்பாவையே எரிச்சல்பட வைக்கும் அளவு வளர்ந்துள்ளது அடிப்படையில் இங்குள்ள் அரசியல் தலைமையை பலவீனமாக்கி உள்ளது. எம்.ஜி.ஆர் உடல் நலமற்று, கட்சியில் தன் பிடிப்பை இழந்த கட்டத்திலும் இங்கு மாற்றுத் தலைவராக திமுகவில் கருணாநிதி இருந்தார். இன்று ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றாக விஜயகாந்தும் ஸ்டாலினும் மட்டுமே உள்ளார்கள்.

விஜயகாந்துக்கு அரசியல் நிர்வாக அனுபவமோ ஒரு தலைவராக ஆளுமையோ இல்லை. ஸ்டாலின் இதுவரை தலைமையை ருசிக்காதவர். மக்கள் மத்தியில் ஒரு தலைவராக அவரது செல்வாக்கு என்னவென நமக்கு தெரியாது.
இந்த சூழலில் தான் மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது அணியாக இத்தேர்தலில் களமிறங்குகிறது. வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கை அது பிரிக்கலாம் என கணிக்கப்படுகிறது. முதன்முறையாய் திமுக மூன்றாம் அணியை ஒரு தலைவலியாக கருதுகிறது. விஜயகாந்த் போன்ற ஒரு மூன்றாம் நிலை தலைவரை திமுகவும் அதிமுகவும் போட்டியாளராக யோசித்துப் பார்க்கும் என்பதே சில வருடங்களுக்கு முன் யாராவது சொன்னால் நகைச்சுவையாய் கருதப்பட்டிருக்கும். போன தேர்தலில் தெமுதிக 29 இடங்களை வென்றது திமுகவின் படுதோல்வியின் பின்னணியில் முக்கியமானது. ஏனென்றால் இதற்கு முன் ஒரு திராவிட கட்சி தோல்வி அடைந்தால் மற்றொரு திராவிட கட்சி முழுவெற்றி பெறும். திராவிட கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெறும். ஆனால் திராவிட கட்சிகளில் ஒன்றை முதன்முறையாய் தெமுதிக பின்னணியில் தள்ளியது. தி.மு.கவை மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள், பா.ம.க, மற்றும் இடதுசாரிகளின் இடத்தை காலி செய்தது. தி.மு.கவும் இத்தேர்தலில் மீண்டு வர உள்ள வாய்ப்பும் இவர்களுக்கு இப்போதைக்கு இல்லை. இந்நிலையில் தான் தெமுதிகவை தன் கூட்டணியில் சேர்க்க தி.மு.க மிகவும் பிரயத்தனம் செய்ய வேண்டியாகியது.
ஆனால் அதே நேரம் இச்சூழல் முழுக்க போன தேர்தலின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உருவானது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தேர்தலில் தெமுதிக தன்னை தக்க வைக்கும் என்பதற்கும் எந்த உறுதியும் இல்லை. ஒருவேளை இத்தேர்தலுடன் திமுகவும் அதிமுகவும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புண்டு.
ஆனால் உண்மையான பிரச்சனை வேறு. அதிமுக கடந்த ஐந்தாண்டுகளில் செய்த பிரம்மாண்ட ஊழல்கள், வெள்ளத்தின் போது அதன் நிர்வாகம் திணறிய விதம், ஜெயலலிதா மக்களையோ மீடியாவையோ சந்திப்பதை முடிந்தவரை தவிர்ப்பது இங்கு கிட்டத்தட்ட ஆட்சியில் எந்த கட்சியுமே இல்லையோ எனும் ஐயத்தை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
திமுகவை பொறுத்தவரையில் கட்சியை புதுப்பித்து மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை பெற அவர்கள் ஸ்டாலினை தலைவராக முன்னிறுத்துவது தான் ஒரே வழி. ஆனால் கருணாநிதிக்கு அதிகார ருசி இன்னும் தீரவில்லை. அவர் தன் மகனையே தனக்கு போட்டியாக நினைக்கிறார். கருணாநிதி தலைவராய் நீடிப்பதன் முக்கிய சிக்கல் அவரது பிற வாரிசுகளின் அதிகார துஷ்பிரயோகம் தான். ஒருவேளை அவர் அடுத்த முதல்வர் ஆகிறார் என்றால் கனிமொழிக்கு ஒரு முக்கிய பதவி கொடுப்பார். அழகிரியையும் மன்னித்து ஏற்றுக் கொள்வார். மாறன் சகோதரர்களும் வேட்டைக்கு கிளம்பி விடுவார்கள். இந்த மூவரையும் அதிகார களத்தில் இருந்து வெளியேற்றி தி.மு.கவை ஒரு கட்டுக்கோப்பான கட்சியாக மாற்றுவதற்கு சிறந்த வழி ஸ்டாலினை தலைவராக்கி முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே. வீட்டில் ஒரு பூனையிருந்தால் எலிகளின் ராஜ்ஜியம் தானே அடங்கி விடுமே. ஆனால் கருணாநிதி பூனையை கட்டிப் போட்டு விட்டு எலிகள் உருவாக்கும் களேபரத்தில் தன் அதிகாரத்தை தக்க வைக்க முனைகிறார்.
அதிமுகவுக்குள் ஜெயலலிதாவுக்கு போட்டித்தரப்பாக முன்னர் சசிகலா இருந்தார். பின்னர் இப்போது பன்னீர் செல்வத்தின் குழுவினர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை பொறுத்தமட்டில் முக்கிய தலைவலி இவர்களே. உடல்நிலை, ஊழல் வழக்குகள் வேறு அவரை பலவீனப்படுத்தி உள்ளது. இத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் இந்த எதிர் அதிகார மையங்களை முழுக்க நசுக்கி விட்டு மீண்டும் முழுமுதல் தலைவராக முடியும். சராசரி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கூட அது கட்சிக்குள் தலைமைக்கு எதிரான கலகங்களை இன்னும் தீவிரப்படுத்தும்.

அடுத்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் தலைமை மையங்கள் எப்படி உருக்கொள்ளப் போகின்றன என்பது சுவாரஸ்யமான கேள்வி. காத்திருந்து பார்ப்போம்!
நன்றி: வெற்றிவேந்தன், ஏப்ரல் 2016

கருத்துகள்

Selvadurai இவ்வாறு கூறியுள்ளார்…
நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும்தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள். இந்த நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலும் படித்த மற்றும் விபரம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் விஜயகாந்தை முதல்வராக ஏற்க மாட்டார்கள். இனவாதம் பேசும் சீமானின் கருத்து தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுபடாது. களத்தில் இருக்கும் முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஒரு முறையேனும் மாறி வாய்ப்பளித்துக் காட்டினால்தான் ஆளுபவர்களுக்கு தவறு செய்யாதபடி நெஞ்சில் ஒரு பயம் இருக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...