பெரியாரிஸ்டுகளுக்கு இரண்டு இயல்புகள்
உண்டு. பேச்சின் போது மைய சாதிகளை மயிலிறகால் வருடி விடுவார்கள். உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும்
காரணம் “பார்ப்பனிய சதி” என்பார்கள். இன்னொன்று இந்து மதத்தை பழிப்பதற்காக புராணங்கள்
கதை என்றும், கடவுள்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றும் கூறுவார்கள். நேற்றைய உயிர்மை அரங்கில்
வெ.மதிமாறனின் பேச்சு அப்படித் தான் இருந்தது. அவை அவருடைய கருத்துக்கள், நம்பிக்கைகள்,
தாராளமாய் அவர் அவற்றை எடுத்தியம்பலாம். ஆனால் எனக்கு விசித்திரமாய் பட்டது என்னவென்றால்
தொண்ணூறுகள் துவங்கி அதிகாரம், ஒழுக்கம், மொழியியல், பின் அமைப்பியல் சார்ந்து தமிழில்
பேசப்பட்ட எந்த புது கருத்தியலையும் அவர் சீண்டியே பார்க்கவில்லை என்பது.
கடவுள், புராணங்கள் மட்டுமல்ல அறிவியல் கூட ஒரு கதையாடல்
எனக் கூறும் இடத்துக்கு நாம் இன்று வந்திருக்கிறோம். ஒரு விவாதக் களத்தில் இன்று நீங்கள்
கடவுளர்களின் கதைகள் பொய்ப்புனைவுகள் என தனியாக கூற முடியாது. ஏனென்றால் ஒரு மகத்தான
கவிதை கூட ”கட்டமைக்கப்பட்டது” என கூறுகிற இடத்தில் நாம் இன்று இருக்கிறோம். வெ.மதிமாறன்
போன்ற பெரியாரிஸ்டுகள் கடந்த இருபதாண்டுகள் தமிழில் வெளியாகி உள்ள தீவிர நூல்களை, குறிப்பாய்
கோட்பாட்டு, தத்துவ நூல்களை, படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நேற்று வி.மு
மேடையில் பேசும் போது இந்த கதை இப்படி “கட்டமைக்கப்பட்டுள்ளது” என சாதாரணமாய் சொல்லிச்
செல்லும் அளவுக்கு அவ்வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் மதிமாறன் போன்றவர்கள்
நவீன சிந்தனை அறியாமல் ஒரு இலக்கிய மேடையில் வந்து உளறுகிறார்கள். நம்மூரில் மட்டுமே
சுத்தமாய் வாசிப்பு இல்லாதவர்களுக்கு மேடையில் நின்று பெரிய அறிவாளிகள் போல் கூப்பாடு
போடும் தன்னம்பிக்கை இருக்கும்.
இந்த பிரச்சனை பற்றி சுருக்கமாய்
மீண்டும் கூற விரும்புகிறேன்: இன்றுள்ள படித்த தட்டினரிடம் நீங்கள் போய் கடவுள் ஒரு
பொய்ப்புனைவு என்றால் கூட அதிர்ச்சி அடைய மாட்டார்கள். நாம் ஐம்பதுகளில் வாழவில்லை.
எளிய மக்கள் கூட மதத்தை ஒரு எளிய பற்றுகோலாய் வைத்திருக்கிறார்களே ஒழிய முழுமுற்றாய்
அதை நம்புவதில்லை. மதத்தை மக்கள் இன்று கலாச்சார, அதிகார அடையாளமாய் பார்க்கிறார்கள்.
மக்களின் இன்றைய ஒரே மதம் பணம் தான். இதைப் புரிந்து கொள்ளாமல் பெரியாரிஸ்டுகள் தாமே
ஒரு புராணமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவது இயல்பு: பெரும்பாலான
பெரியாரிஸ்டுகள் ஒழுக்கவாதிகள் (பெரியார் ஒழுக்கவாதி அல்ல என்பது இதில் ஒரு முரண்).
அவர்கள் பெண்ணுடல் ஒழுக்கம் சார்ந்த மிகுந்த பதற்றம் கொண்டவர்கள். அடிப்படையில் ஆணாதிக்கவாதிகள்.
அதனாலே மதத்தையோ கடவுளர்களையோ பழிக்க வேண்டுமென்றால் உடனே அவர்கள் பெண்களுடன் சல்லாபிக்கிறவர்கள்,
நாலு பெண்டாட்டி வைத்துள்ளவர்கள் என்பார்கள். நேற்று பேசிய வெ.மதிமாறன் ராமன் உண்மையில்
ஏகபத்தினி விரதன் அல்ல், அவர் எப்போதும் அந்தப்புரத்தில் நிறைய பெண்களுடன் சல்லாபித்திருந்தவர்.
அவருடைய முழுநேர தொழிலே பெண் போகம் தான் என்றார்.
இங்கு இரண்டு கேள்விகள்: ராமாயணம் ஒரு பொய்ப்புனைவு
என்றால் ராமன் ஒரு ஏகபத்தினி விரதன் என்பது மட்டுமல்ல போகி என்பதும் ஒரு புனைவு தானே?
இவர் என்னமோ அது வரலாற்று உண்மை போல் ராமனின் பாலியல் கொண்டாட்டங்களை விவரித்துக் கொண்டே
போனார். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு “அட இதெல்லாம் முன்பே தெரிந்திருந்தால்
நான் ராமனின் விசிறி ஆகி இருப்பேனே” என நினைத்தேன்.) இவ்வளவு துல்லியமாய் விவரிக்க
இவருக்கு எங்கிருந்து ஆதாரங்கள் கிடைத்தன? புராணத்துக்கு ஏதய்யா ஆதாரம்? ஒரு கதையை
ஏன் இவர் திடீரென உண்மை போல் விவரிக்கிறார்?
வெ.மதிமாறனின் ஒரே நோக்கம் பெண்ணுடல்
சார்ந்த ஒழுக்கவாதத்தை கொண்டு தன் எதிர்தரப்பை சாடுவது தான். பல பெண்களுடன் உறவு கொள்வது
குற்றம் என்றால் ஒரே பெண்ணுடன் வாழ்வதே சரி என நீங்கள் கூறுகிறீர்கள் எனப் பொருள்.
அப்படி என்றால் ராமனின் ஏகபத்தினி விரதத்தை ராமபக்தர்களை விட பெரியாரிஸ்டுகளே அதிகம்
வழிபடுகிறார்கள் என பொருள்.
வெ.மதிமாறன் போன்றவர்கள் பெரியாரை
சரியாய் உள்வாங்கவில்லை என்பதற்கு இதுவே சான்று. ஏனென்றால் பாலியல் ஒழுக்கவாதத்தை கடுமையாய்
எதிர்த்தவர் பெரியார். ஆனால் இவரைப் போன்ற பல பெரியாரிஸ்டுகள் கடும் ஒழுக்க போலீஸ்களாக
இருக்கிறார்கள்.
நான் ஐஸ்ஹவுஸில் வாழ்ந்திருந்த
காலத்தில் அங்கு அடிக்கடி பெரியாரிஸ்டுகள் வந்து மைக் போட்டு “பார்ப்பனர்களை” ஏசிக்
கொண்டே இருப்பார்கள். அப்போது எனக்கு எழும் கேள்வி: தேவர் ஜெயந்தி நடக்கும் போது இதே
போல் அங்கு மைக் கட்டி தேவர்களை இவர்கள் ஏசுவார்களா? கடந்த பத்து வருடங்களில் சாதிய
படுகொலை நடத்தியவர்களின் இடங்களுக்கு போய் “ஏன் வன்னியர்களே” அல்லது “ஏ தேவர்களே” என
கூவி திட்டுவார்களா? இல்லை. நம் மாநிலத்தில் கடந்த ஐம்பதாண்டுகளாக நடந்து வரும் கேலிக்கூத்து
இந்த “பார்ப்பன” துவேச அரசியல்.
நாம் இன்று பார்ப்பனர்களை பழிக்காமல்,
பார்ப்பனியத்தை விமர்சிக்கிற நுணுக்கமான இடத்துக்கு வந்துள்ளோம். ஆனால் வெ.மதிமாறனைப்
போன்றவர்கள் இன்னும் புராணக் காலத்தில் மரவுரி அணிந்தே திரிகிறார்கள். சமகால நடைமுறையை
ஒன்று அவர்கள் கவனிப்பதில்லை; அல்லது கவனிக்காதது போல் நடிக்கிறார்கள். நேற்று மதிமாறன்
இவ்வாறு கூறுகிறார்: “சில சாதிகள் தம்மை ஆண்ட சாதிகள் எனக் கூறுவது தம் சாதி மக்கள்
கௌரவத்தில் உயரவில்லையே எனும் வருதத்தினால் தான். இவர்கள் எல்லோரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்”.
யார் இளவரசனையும் சங்கரையும் பட்டவர்த்தமாய் கொன்று வீசியவர்களா? கலவரம் என்ற பெயரில்
சாதிப்படுகொலைகள் நடத்துபவர்களா? இவர்கள் தம் “கௌரவம்” உயரவில்லையே என்ற கவலையில் இதையெல்லாம்
செய்கிறார்களா?
நேற்றைய உயிர்மை கூட்டம் அவ்வளவு
அருமையாய் சுவாரஸ்யமாய் வேறு ஒரு நிலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் மதிமாறன்
ஆய்வகத்தில் கருத்தரித்த ஒரு டினோசர் போல் அங்கு ஆர்ப்பரித்தபடி மேடையில் ஏறினார்.
பல பார்வையாளர்கள் நெளியத் தொடங்கினர். எழுந்து வெளியே போயினர். அது தனக்கான கூட்டம்
அல்ல என்பது கூட அவருக்கு புரியவில்லை. அல்லது அப்படியான கூட்டத்தின் முன்பு தான் அதிக
சத்தமாய் பேச வேண்டும் எனும் தி.க மரபை அவர் பின்பற்றி இருக்கலாம்.
இறுதியாய் ஒன்று: இலக்கியவாதிகளுக்கு
உண்மையோ பொய்யோ முக்கியம் அல்ல. அவர்களுக்கு புராணங்களில் வெளிப்படும் கற்பனைகளும்,
உளவியல் நுணுக்கங்களும் குறியீடுகளும் முக்கியம். கடவுளை நம்பாத இஸ்லாமியரான மனுஷ்யபுத்திரனின்
சமீபத்தைய கவிதைத் தொகுப்பில் மகாபாரத்தில் இருந்து குறிப்புகள் வருகின்றன. கடவுள்
நம்பிக்கை இல்லாத, இடதுசாரி பின்புலம் கொண்ட என்.டி ராஜ்குமார் தொடர்ந்து சிவன் குறித்த
தொன்மங்களை கவிதை ஆக்குகிறார். கடவுளை வழிபடாத ஒரு இலக்கிய வாசகன் என்றும் மத இலக்கியத்தை
வெறுக்க மாட்டான். இதையெல்லாம் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? இவையெல்லாமும்
”பார்ப்பனிய சதி” என்றா?
பெரியாரிஸுகளின் பேச்சுகள் இலக்கிய வாசகர்களுக்கு
ஒவ்வாமையாய் இருப்பது இதனால் தான். அவர்கள் குடிகாரர்களைப் போல் நம் நுண்ணுணர்வின்
மீது வாந்தி எடுக்கிறார்கள். பிறகு “பார் பார் எங்கள் வாந்தியை பார்” என வகுப்பெடுக்கவும்
செய்கிறார்கள்.