Skip to main content

பெரியாரிஸ்டுகளின் சிக்கல்கள்


பெரியாரிஸ்டுகளுக்கு இரண்டு இயல்புகள் உண்டு. பேச்சின் போது மைய சாதிகளை மயிலிறகால் வருடி விடுவார்கள். உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் “பார்ப்பனிய சதி” என்பார்கள். இன்னொன்று இந்து மதத்தை பழிப்பதற்காக புராணங்கள் கதை என்றும், கடவுள்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றும் கூறுவார்கள். நேற்றைய உயிர்மை அரங்கில் வெ.மதிமாறனின் பேச்சு அப்படித் தான் இருந்தது. அவை அவருடைய கருத்துக்கள், நம்பிக்கைகள், தாராளமாய் அவர் அவற்றை எடுத்தியம்பலாம். ஆனால் எனக்கு விசித்திரமாய் பட்டது என்னவென்றால் தொண்ணூறுகள் துவங்கி அதிகாரம், ஒழுக்கம், மொழியியல், பின் அமைப்பியல் சார்ந்து தமிழில் பேசப்பட்ட எந்த புது கருத்தியலையும் அவர் சீண்டியே பார்க்கவில்லை என்பது.

 கடவுள், புராணங்கள் மட்டுமல்ல அறிவியல் கூட ஒரு கதையாடல் எனக் கூறும் இடத்துக்கு நாம் இன்று வந்திருக்கிறோம். ஒரு விவாதக் களத்தில் இன்று நீங்கள் கடவுளர்களின் கதைகள் பொய்ப்புனைவுகள் என தனியாக கூற முடியாது. ஏனென்றால் ஒரு மகத்தான கவிதை கூட ”கட்டமைக்கப்பட்டது” என கூறுகிற இடத்தில் நாம் இன்று இருக்கிறோம். வெ.மதிமாறன் போன்ற பெரியாரிஸ்டுகள் கடந்த இருபதாண்டுகள் தமிழில் வெளியாகி உள்ள தீவிர நூல்களை, குறிப்பாய் கோட்பாட்டு, தத்துவ நூல்களை, படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நேற்று வி.மு மேடையில் பேசும் போது இந்த கதை இப்படி “கட்டமைக்கப்பட்டுள்ளது” என சாதாரணமாய் சொல்லிச் செல்லும் அளவுக்கு அவ்வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் மதிமாறன் போன்றவர்கள் நவீன சிந்தனை அறியாமல் ஒரு இலக்கிய மேடையில் வந்து உளறுகிறார்கள். நம்மூரில் மட்டுமே சுத்தமாய் வாசிப்பு இல்லாதவர்களுக்கு மேடையில் நின்று பெரிய அறிவாளிகள் போல் கூப்பாடு போடும் தன்னம்பிக்கை இருக்கும்.
இந்த பிரச்சனை பற்றி சுருக்கமாய் மீண்டும் கூற விரும்புகிறேன்: இன்றுள்ள படித்த தட்டினரிடம் நீங்கள் போய் கடவுள் ஒரு பொய்ப்புனைவு என்றால் கூட அதிர்ச்சி அடைய மாட்டார்கள். நாம் ஐம்பதுகளில் வாழவில்லை. எளிய மக்கள் கூட மதத்தை ஒரு எளிய பற்றுகோலாய் வைத்திருக்கிறார்களே ஒழிய முழுமுற்றாய் அதை நம்புவதில்லை. மதத்தை மக்கள் இன்று கலாச்சார, அதிகார அடையாளமாய் பார்க்கிறார்கள். மக்களின் இன்றைய ஒரே மதம் பணம் தான். இதைப் புரிந்து கொள்ளாமல் பெரியாரிஸ்டுகள் தாமே ஒரு புராணமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவது இயல்பு: பெரும்பாலான பெரியாரிஸ்டுகள் ஒழுக்கவாதிகள் (பெரியார் ஒழுக்கவாதி அல்ல என்பது இதில் ஒரு முரண்). அவர்கள் பெண்ணுடல் ஒழுக்கம் சார்ந்த மிகுந்த பதற்றம் கொண்டவர்கள். அடிப்படையில் ஆணாதிக்கவாதிகள். அதனாலே மதத்தையோ கடவுளர்களையோ பழிக்க வேண்டுமென்றால் உடனே அவர்கள் பெண்களுடன் சல்லாபிக்கிறவர்கள், நாலு பெண்டாட்டி வைத்துள்ளவர்கள் என்பார்கள். நேற்று பேசிய வெ.மதிமாறன் ராமன் உண்மையில் ஏகபத்தினி விரதன் அல்ல், அவர் எப்போதும் அந்தப்புரத்தில் நிறைய பெண்களுடன் சல்லாபித்திருந்தவர். அவருடைய முழுநேர தொழிலே பெண் போகம் தான் என்றார்.
 இங்கு இரண்டு கேள்விகள்: ராமாயணம் ஒரு பொய்ப்புனைவு என்றால் ராமன் ஒரு ஏகபத்தினி விரதன் என்பது மட்டுமல்ல போகி என்பதும் ஒரு புனைவு தானே? இவர் என்னமோ அது வரலாற்று உண்மை போல் ராமனின் பாலியல் கொண்டாட்டங்களை விவரித்துக் கொண்டே போனார். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு “அட இதெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் நான் ராமனின் விசிறி ஆகி இருப்பேனே” என நினைத்தேன்.) இவ்வளவு துல்லியமாய் விவரிக்க இவருக்கு எங்கிருந்து ஆதாரங்கள் கிடைத்தன? புராணத்துக்கு ஏதய்யா ஆதாரம்? ஒரு கதையை ஏன் இவர் திடீரென உண்மை போல் விவரிக்கிறார்?
வெ.மதிமாறனின் ஒரே நோக்கம் பெண்ணுடல் சார்ந்த ஒழுக்கவாதத்தை கொண்டு தன் எதிர்தரப்பை சாடுவது தான். பல பெண்களுடன் உறவு கொள்வது குற்றம் என்றால் ஒரே பெண்ணுடன் வாழ்வதே சரி என நீங்கள் கூறுகிறீர்கள் எனப் பொருள். அப்படி என்றால் ராமனின் ஏகபத்தினி விரதத்தை ராமபக்தர்களை விட பெரியாரிஸ்டுகளே அதிகம் வழிபடுகிறார்கள் என பொருள்.
வெ.மதிமாறன் போன்றவர்கள் பெரியாரை சரியாய் உள்வாங்கவில்லை என்பதற்கு இதுவே சான்று. ஏனென்றால் பாலியல் ஒழுக்கவாதத்தை கடுமையாய் எதிர்த்தவர் பெரியார். ஆனால் இவரைப் போன்ற பல பெரியாரிஸ்டுகள் கடும் ஒழுக்க போலீஸ்களாக இருக்கிறார்கள்.
நான் ஐஸ்ஹவுஸில் வாழ்ந்திருந்த காலத்தில் அங்கு அடிக்கடி பெரியாரிஸ்டுகள் வந்து மைக் போட்டு “பார்ப்பனர்களை” ஏசிக் கொண்டே இருப்பார்கள். அப்போது எனக்கு எழும் கேள்வி: தேவர் ஜெயந்தி நடக்கும் போது இதே போல் அங்கு மைக் கட்டி தேவர்களை இவர்கள் ஏசுவார்களா? கடந்த பத்து வருடங்களில் சாதிய படுகொலை நடத்தியவர்களின் இடங்களுக்கு போய் “ஏன் வன்னியர்களே” அல்லது “ஏ தேவர்களே” என கூவி திட்டுவார்களா? இல்லை. நம் மாநிலத்தில் கடந்த ஐம்பதாண்டுகளாக நடந்து வரும் கேலிக்கூத்து இந்த “பார்ப்பன” துவேச அரசியல்.
நாம் இன்று பார்ப்பனர்களை பழிக்காமல், பார்ப்பனியத்தை விமர்சிக்கிற நுணுக்கமான இடத்துக்கு வந்துள்ளோம். ஆனால் வெ.மதிமாறனைப் போன்றவர்கள் இன்னும் புராணக் காலத்தில் மரவுரி அணிந்தே திரிகிறார்கள். சமகால நடைமுறையை ஒன்று அவர்கள் கவனிப்பதில்லை; அல்லது கவனிக்காதது போல் நடிக்கிறார்கள். நேற்று மதிமாறன் இவ்வாறு கூறுகிறார்: “சில சாதிகள் தம்மை ஆண்ட சாதிகள் எனக் கூறுவது தம் சாதி மக்கள் கௌரவத்தில் உயரவில்லையே எனும் வருதத்தினால் தான். இவர்கள் எல்லோரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்”. யார் இளவரசனையும் சங்கரையும் பட்டவர்த்தமாய் கொன்று வீசியவர்களா? கலவரம் என்ற பெயரில் சாதிப்படுகொலைகள் நடத்துபவர்களா? இவர்கள் தம் “கௌரவம்” உயரவில்லையே என்ற கவலையில் இதையெல்லாம் செய்கிறார்களா?
நேற்றைய உயிர்மை கூட்டம் அவ்வளவு அருமையாய் சுவாரஸ்யமாய் வேறு ஒரு நிலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் மதிமாறன் ஆய்வகத்தில் கருத்தரித்த ஒரு டினோசர் போல் அங்கு ஆர்ப்பரித்தபடி மேடையில் ஏறினார். பல பார்வையாளர்கள் நெளியத் தொடங்கினர். எழுந்து வெளியே போயினர். அது தனக்கான கூட்டம் அல்ல என்பது கூட அவருக்கு புரியவில்லை. அல்லது அப்படியான கூட்டத்தின் முன்பு தான் அதிக சத்தமாய் பேச வேண்டும் எனும் தி.க மரபை அவர் பின்பற்றி இருக்கலாம்.
இறுதியாய் ஒன்று: இலக்கியவாதிகளுக்கு உண்மையோ பொய்யோ முக்கியம் அல்ல. அவர்களுக்கு புராணங்களில் வெளிப்படும் கற்பனைகளும், உளவியல் நுணுக்கங்களும் குறியீடுகளும் முக்கியம். கடவுளை நம்பாத இஸ்லாமியரான மனுஷ்யபுத்திரனின் சமீபத்தைய கவிதைத் தொகுப்பில் மகாபாரத்தில் இருந்து குறிப்புகள் வருகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாத, இடதுசாரி பின்புலம் கொண்ட என்.டி ராஜ்குமார் தொடர்ந்து சிவன் குறித்த தொன்மங்களை கவிதை ஆக்குகிறார். கடவுளை வழிபடாத ஒரு இலக்கிய வாசகன் என்றும் மத இலக்கியத்தை வெறுக்க மாட்டான். இதையெல்லாம் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? இவையெல்லாமும் ”பார்ப்பனிய சதி” என்றா?

 பெரியாரிஸுகளின் பேச்சுகள் இலக்கிய வாசகர்களுக்கு ஒவ்வாமையாய் இருப்பது இதனால் தான். அவர்கள் குடிகாரர்களைப் போல் நம் நுண்ணுணர்வின் மீது வாந்தி எடுக்கிறார்கள். பிறகு “பார் பார் எங்கள் வாந்தியை பார்” என வகுப்பெடுக்கவும் செய்கிறார்கள்.

Comments

Chitra said…
(கடவுளை வழிபடாத ஒரு இலக்கிய வாசகன் என்றும் மத இலக்கியத்தை வெறுக்க மாட்டான்.) உண்மை.

Unknown said…
பெரியாரிஸுக்களுக்கு சாட்டை அடி .
கூட்டத்துக்கு குடிச்சுட்டு வர்றது, அடிதடி, மேடையிலேயே புத்தகத்தை கிழிச்சு எறியுறது இந்த மாதிரி பல நல்ல காரியங்கள்ல ஒன்னுமே பண்ணாம போனதுதான் அவர் தப்பு, பண்ணியிருந்தா அவர் கலகக்கார இலக்கியவாதி ஆகி இருப்பார்.

இளவரசனுக்கும் சங்கருக்காகவும் குரல் கொடுத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெரியாரிஸ்ட்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும். இன்றும் சாதிமறுப்பு திருமணம் புரிபவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களும் இவர்கள்தான். தினத்தந்தியை தினமும் படிச்சா கூட தெரியும் தேவர், வன்னியர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளுக்கு எதிரா யார் களமாடுகிறார்களென்று. கதையாடல், கட்டமைப்பு இன்னும் என்ன என்னவோ வாய்ப்பந்தல் போடும் கூட்டம் செய்தது என்ன? தடி தடியா இலக்கியவாதிகள் நீங்களெல்லாம் எழுதுறதுனால நம்ம தமிழ் சமூகத்துக்கு கிடைச்ச நன்மை என்ன?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...