டி.எம் கிருஷ்ணா ஒரு இசைக்கலைஞர்.
அவர் தன்னளவில் சாதியை களையும் முயற்சியில் ஈடுபடுகிறார். தான் அறிந்த இசையை அதற்கு
பயன்படுத்துகிறார். அவர் அதை செய்யக் கூடாது என நாம் எப்படி சொல்ல முடியும்? இது தடித்தனம
அல்லவா? அவர் சேரிக்கு சென்று இசை பாடினால் சமூகத்துக்கு என்ன பாதகம் வந்து விடப் போகிறது?
இப்படி நேற்று ஒரு நண்பர் (நான் எழுதியதற்கு எதிர்வினையாக) என்னிடம் சற்று கோபமாய்
கேட்டார். நான் அவரிடம் இப்படி சொன்னேன்:
டி.எம் கிருஷ்ணா கர்நாடக இசை ஒரு
சிறப்பான இசை வடிவம். அதை மக்கள் அறிந்து ரசிக்க வேண்டும் என்று மட்டும் தன் சமத்துவ
கச்சேரிகளை நடத்தவில்லை. பிராமணர்களுக்கு மட்டுமேயான ஒரு சொத்தை தான் பிற தாழ்த்தப்பட்ட
சமூகங்களுக்கு கொண்டு சேர்க்க போவதாய் கோருகிறார். இதில் தான் சிக்கல் வருகிறது. பொதுவாக
கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு கலாச்சார அதிகாரம் உள்ளது. அது ஒரு சாதியின் கலாச்சார மேன்மையின்
குறியீடாக விளங்குகிறது. அதை மற்றொரு (தாழ்த்தப்பட்ட) சாதிக்கு எடுத்துச் செல்வதன்
வழி டி.எம் கிருஷ்ணா அறிந்தோ அறியாமலோ இந்த கலாச்சார அதிகாரத்தை, சாதிய பண்பாட்டு மேன்மையின்
குறியீட்டை இரட்டிப்பு வலிமை கொண்டதாக்குகிறார். இதை டி.எம் கிருஷ்ணாவை எதிர்க்கிற
அவர் சமூகத்தை சேர்ந்த இசை அறிஞர்களும் கலைஞர்களும் கூட உணர்ந்து கொண்டதாய் தெரியவில்லை.
பா.ரஞ்சித் ரஜினியை வைத்து “கபாலி” எடுத்ததன் நோக்கமே
தன் சமூகத்திற்கான ஒரு பண்பாட்டு, அரசியல் குறியீட்டை உருவாக்கத் தான் என ஒரு பேட்டியில்
நேரடியாக கூறுகிறார். இதையே தான் டி.எம் கிருஷ்ணா தெரியாமலே செய்கிறார். பா.ரஞ்சித்தின்
செயல் ஒரு எதிர்-அரசியலாக தேவையான ஒன்று. அது அதிகார மையங்களை சற்றே அசைக்க உதவும்.
ஆனால் டி.எம் கிருஷ்ணா செய்வது (தன் சமூகத்தின்) அதிகார மையங்களை எதிர்ப்பதாய் கோரிக்
கொண்டே வலுப்படுத்தும் காரியமாகும்.
அதாவது “எங்கள் இசை உயர்வானது; அதனால் நாங்களும் உயர்வானவர்கள்” எனும் கோரிக்கை
இதன் பின்னால் உள்ளது. ஒரு ராக் இசை கச்சேரி நடத்துபவரிடம் இத்தகைய ஒரு சமூக கோரல்
இருக்காது. அவர் இது ஒரு பொழுதுபோக்கு வடிவம், இதை வைத்து நான் ஒரு தொழில் செய்கிறேன்
என்று தான் கோருவார். ஆனால் டி.எம் கிருஷ்ணா இசையை தன் பண்பாட்டுக்கான ஒரு குறியீடாகவும்
தான் மறைமுகமாய் கோருகிறார். அதன் மூலம் தன் சமூக மேன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறார். இது தான் சிக்கலானது.
இதை மேலோட்டமாய் கவனித்தால் நமக்கு
ஒரு முற்போக்கான செயலாக படலாம். அதாவது நாளை தலித்துகளுக்கு இலவசமாய் சம்ஸ்கிருத சுலோகங்கள்
சொல்லித் தந்து அவர்களையும் பூஜை செய்ய அனுமதிக்கப் போகிறோம் என சிலர் கிளம்பினால்
அதுவும் புரட்சியாக தோன்றலாம். ஆனால் அது உண்மையில் முற்போக்கு செயல் அல்ல. அது இந்து
மதத்தின் அதிகார மையத்தை வலுப்படுத்தும் அரசியல் மட்டுமே. இதையே சமிஸ்கிருதமயமாக்கல்
என்கிறார்கள்.
இதையே காந்தி தலித்துகளை ஹரிஜனம்
என அழைத்து அவர்களை அனைத்து சமூகங்களும் பரிவுடன் கனிவுடன் நடத்த வேண்டும் என கேட்டுக்
கொண்ட போது செய்தார்.
என் நண்பர் ஒருவர் ஒரு பிராமண
சமூகத்து பெண்ணை மணம் செய்தார். அப்பெண்ணின் பெற்றோர் ஒருமுறை பேச்சின் இடையே “உங்களுக்கு
நாங்கள் பூணூல் அணிவித்து ஒரு சடங்கு செய்ய விரும்புகிறோம்” என்றார்கள். நண்பர் உடனே
அதை மறுத்து விட்டார். ஏனென்றால் அந்த விருப்பம் பெயரளவில் முற்போக்காய் தோன்றினாலும்
அது உள்ளார்ந்த ஆபத்தை கொண்டது. அதை ஏற்றதும் நீங்கள் மறுக்க முடியாதபடி பூணூல் ஒரு
உயர் கலாச்சார குறியீடு என ஏற்றுக் கொள்வீர்கள்.
டி.எம் கிருஷ்ணா வெறுமனே இசைக்கச்சேரியை
எங்கு வேண்டுமானாலும் நடத்தட்டும். பிரச்சனையில்லை. ஆனால் அதை ஒரு சமூக புரட்சியாக,
சேவையாக கோரும்போது அவர் இப்படியான ஒரு “பூணூலைத்” தான் அணிவிக்க முயல்கிறார்.