ரவிச்சந்திரன் அஷ்வின் மிக குறைந்த
ஆட்டங்களில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். அது மட்டுமல்ல
50, 100, 150 விக்கெட்டுகள் என ஒவ்வொரு மைல்கல்லையும் மிக குறைந்த டெஸ்ட் ஆட்டங்களில்
சாதித்தவர் அஷ்வின். அவர் சீறிப் பாய்கிற வேகத்தை பார்த்தால் தன் முன்னோடியான ஹர்பஜனை
அடுத்த ஐந்து வருடங்களில் தாண்டி சென்று விடுவார் எனத் தோன்றுகிறது. ஹர்பஜனின் விக்கெட்
எண்ணிக்கை 417. அப்படியானால் அஷ்வின் ஓய்வு பெறும் போது அவர் இந்தியாவின் சிறந்த சுழலர்களில்
அனில் கும்பிளேவுக்கு அடுத்தபடியாக மட்டுமே இருப்பார். தாமதமாக சுழல் பந்தை தேர்ந்தெடுத்து
ஆடத் துவங்கிய போது அஷ்வினே தான் இப்படியான சிகரங்களை தொட முடியும் என நம்பி இருக்க
மாட்டார்.
அஷ்வின் பத்தொன்பது வயதில் தான்
off spin பழகத் துவங்கினார் என்கிறார் அவரது பயிற்சியாளர் சுப்பிரமணியம். அதுவரை அவர்
ஒரு துவக்க பேட்ஸ்மேனாக இருந்தார். இருபதாவது வயதில் தமிழக அணியில் ஆடத் துவங்கிய அஷ்வின்
இந்தியாவுக்காக ஆடியது 25 வயதில். ஹர்பஜனோ பதினைந்து வயதிலேயே சுழலராக ஜொலிக்க துவங்கி
விட்டார். 18 வயதில் அவர் இந்தியாவுக்காக ஆடினார். அஷ்வின் எவ்வளவு தாமதமாய் தன் கலையை
பழகி அதில் சாதனைகள் படைக்க துவங்கினார் பாருங்கள்.
ஹர்பஜனுக்கும் அஷ்வினுக்குமான
ஒப்பீடுகள் வேறு சுவாரஸ்யமான விசயங்களையும் சொல்கின்றன. ஹர்பஜன் பந்து வீச துவங்கிய
போதே அவர் கிட்டத்தட்ட முழுமையான பவுலராக இருந்தார். அவரது சுழல் பந்துகளில்
drift, loop, பவுன்ஸ் ஆகிய அம்சங்கள் 18 வயதிலேயே இருந்தன. அது மட்டுமல்ல தூஸ்ராவையும்
அப்போதே வீசினார். ஆனால் அஷ்வின் தமிழகத்துக்கு வீச துவங்கிய போது அவரது off
spinner அதிகமாய் திரும்பாது. அவர் இந்தியாவுக்காக ஆடிய போது கூட (இலங்கையின் அஜந்தா
மெண்டிஸின் தாக்கத்தால் உருவாக்கிய) சுண்டு விரலால் நிமிண்டி வீசப்படும் சொடுக்குப்
பந்துக்காக தான் அறியப்பட்டார். அதனுடன் arm ball எனப்படும் நேராக செல்லும் பந்தும்
அவருக்கு உதவியது. கேப்டன் தோனியே இவ்வாறு அஷ்வினை மதிப்பிட்டார்: ”அஷ்வினை பார்க்கும்
போது உடனே வாவ் என சொல்லத் தோன்றாது. அவர் பந்தை காற்றில் சுழற்றி மிதக்க விட மாட்டார்.
நேராய் தட்டையாய் வீசுபவர் போல் தோன்றும். ஆனால் உண்மையில் அவர் நுணுக்கமான சாமர்த்தியமான
street smart (நடைமுறை விவேகம் மிக்க) பவுலர்”.
உள்ளூர் ஆட்டங்களில் சுழல் ஆடுதளங்களில்
அவர் மலர் கொய்வது போல் விக்கெட்டுகளை கொத்துகொத்தாய் வீழ்த்தினாலும் ஆஸ்திரேலியா,
தென்னாப்பிரிக்கா ஆகிய தேசங்களில் பந்து வீசிய போது தன் போதாமைகளை அஷ்வின் உணர்ந்து
கொண்டார். அப்போது மே.இ சுழலர் சுனில் நரைனின் பாணியில் கூட அஷ்வின் வீச துவங்கி இருந்தார்.
பலவித வெரைட்டி பந்துகளை முயன்று அவரது பவுலிங் ஆக்ஷன் கோளாறாகி போயிருந்தது. அஷ்வின்
இப்போது கடுமையாய் பயிற்சி செய்து தன் ஆதார பந்தான பேட்ஸ்மேனை நோக்கி உள்திரும்பும்
off spinnerஐ நன்றாய் வீச துவங்கினார். பந்தை வீசும் போது தோள் மட்டும் அல்லாமல் மொத்த
உடலையும் பயன்படுத்த கற்றார். இது அவரது பந்துகளுக்கு drifஐ கொண்டு வந்தது.
Drift என்றால் பந்து பேட்ஸ்மேனுக்கு
வெளியே சுழன்று போவதாய் மாயம் காட்டும். ஆனால் இறுதி நொடியில் சட்டென அது வெளியே செல்லாமல்
உள்ளே வரும். இந்த பந்தைக் கொண்டு பல இடதுகை பேட்ஸ்மேன்களை அஷ்வின் LBW செய்தார். இதே
பந்தை உள்ளே வருவதாய் காட்டி வெளியே திருப்பவும் அவரால் முடியும். கடந்த இலங்கை பயணத்
தொடரில் அவர் தொடர்ந்து இலங்கை பேட்டிங் மேதையான சங்கக்காராவை இவ்வாறு தான் வெளியேற்றினார்.
பந்து வீச்சை இவ்வாறு மெருகேற்றியபின்
அஷ்வினுக்கு இப்போது ஆடுதளத்தின் உதவி பெருமளவில் தேவைப்படுவதில்லை. தன் சூட்சுமங்கள்,
flight, drift மூலம் மட்டுமே அவரால் இன்று விக்கெட்டுகள் வீழ்த்த முடியும்.
அஷ்வின் ஒரு நடைமுறைவாத பவுலர்.
எதிரணி பேட்ஸ்மேன் எப்படி ஆடுகிறார், ஆடுதளத்தின் நிலை என்ன, அந்த நேரத்தில் எதை செய்தால்
விக்கெட் விழும் ஆகிய விசயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குவார். தொடர்ந்து பந்தை
சுழற்றி ஒரே இடத்தில் விழ வைத்தால் விக்கெட்டுகள் தானே விழும் என முனைபவர் அல்ல அவர்.
உதாரணமாய், சமீபமாய் நடந்து முடிந்த நியுசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சன்
அஷ்வினின் பந்துகளை பின்னங்காலுக்கு சென்று சுலபத்தில் அடித்துக் கொண்டிருந்தார். அஷ்வின்
இதை தடுக்க முனையவில்லை. தொடர்ந்து off stumpக்கு வெளியே வீசி அவரை உள்ளே வரும் பந்தை
வெட்ட தூண்டினார். வில்லியம்சனும் தொடர்ந்து வெட்டி ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்ஸில்
அப்படியான பந்து ஒன்று உள்ளே வெகுவாய் திரும்பி வந்து வில்லியம்சனை பவுல்ட் ஆக்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் வில்லியம்சன் அஷ்வினின் இதே பந்தில் LBW ஆகி வெளியேறினார். இரு
பந்துகளும் drift மூலம் வெளியே செல்வதாய் பாவனை காட்டி பேட்ஸ்மேனை முறியடித்தது. இதுதான்
எதிராளியின் கையை வாங்கி அவரையே அறையும் ஸ்டைல்.
இதே ஆட்டத்தில் பந்து குறைவாகவே
திரும்பியது. பந்தை திருப்பி பேட்ஸ்மேனை வெளியேற்றுவது சிரமம். Rough எனப்படும் ஆடுதளத்தின்
தளர்வான மண் கொண்ட பகுதி off stumpக்கு வைடாக வெளியிலோ பேட்ஸ்மேனுக்கு வெளியிலும் இருந்தது.
அங்கு விழுந்தால் மட்டுமே பந்து அதிகமாய் திரும்பியது. இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின்
நியுசிலாந்தின் இஷ் சோதிக்கு ஒரு பந்தை off stumpக்கு வைடாக வீசி பெருமளவு திரும்ப
வைத்தார். அதுவரை அழகாய் தடுத்தாடி வந்த சோதி சற்று பயந்து போனார். உள்ளே திரும்பும்
பந்துக்கு அவுட் ஆகக் கூடாது என அதைத் தடுக்க ஸ்டம்புக்கு குறுக்கே வந்தார். அஷ்வின்
இப்போது நேராக செல்லும் ஆர்ம் பந்தை வீசி பேட்ஸ்மேனை பவுல்ட் ஆக்கி வெளியேற்றினார்.
ஆடுதள சூழலை நன்கு உணர்ந்து கொண்டு அதை தனக்கு சாதகமாய் பயன்படுத்துவதில் அஷ்வின் ஒரு
நிபுணர் எனலாம்.
நன்றி: கல்கி