Skip to main content

ரவிச்சந்திரன் அஷ்வின் – தனி வழி!

Image result for ravichandran ashwin

ரவிச்சந்திரன் அஷ்வின் மிக குறைந்த ஆட்டங்களில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். அது மட்டுமல்ல 50, 100, 150 விக்கெட்டுகள் என ஒவ்வொரு மைல்கல்லையும் மிக குறைந்த டெஸ்ட் ஆட்டங்களில் சாதித்தவர் அஷ்வின். அவர் சீறிப் பாய்கிற வேகத்தை பார்த்தால் தன் முன்னோடியான ஹர்பஜனை அடுத்த ஐந்து வருடங்களில் தாண்டி சென்று விடுவார் எனத் தோன்றுகிறது. ஹர்பஜனின் விக்கெட் எண்ணிக்கை 417. அப்படியானால் அஷ்வின் ஓய்வு பெறும் போது அவர் இந்தியாவின் சிறந்த சுழலர்களில் அனில் கும்பிளேவுக்கு அடுத்தபடியாக மட்டுமே இருப்பார். தாமதமாக சுழல் பந்தை தேர்ந்தெடுத்து ஆடத் துவங்கிய போது அஷ்வினே தான் இப்படியான சிகரங்களை தொட முடியும் என நம்பி இருக்க மாட்டார்.

அஷ்வின் பத்தொன்பது வயதில் தான் off spin பழகத் துவங்கினார் என்கிறார் அவரது பயிற்சியாளர் சுப்பிரமணியம். அதுவரை அவர் ஒரு துவக்க பேட்ஸ்மேனாக இருந்தார். இருபதாவது வயதில் தமிழக அணியில் ஆடத் துவங்கிய அஷ்வின் இந்தியாவுக்காக ஆடியது 25 வயதில். ஹர்பஜனோ பதினைந்து வயதிலேயே சுழலராக ஜொலிக்க துவங்கி விட்டார். 18 வயதில் அவர் இந்தியாவுக்காக ஆடினார். அஷ்வின் எவ்வளவு தாமதமாய் தன் கலையை பழகி அதில் சாதனைகள் படைக்க துவங்கினார் பாருங்கள்.
ஹர்பஜனுக்கும் அஷ்வினுக்குமான ஒப்பீடுகள் வேறு சுவாரஸ்யமான விசயங்களையும் சொல்கின்றன. ஹர்பஜன் பந்து வீச துவங்கிய போதே அவர் கிட்டத்தட்ட முழுமையான பவுலராக இருந்தார். அவரது சுழல் பந்துகளில் drift, loop, பவுன்ஸ் ஆகிய அம்சங்கள் 18 வயதிலேயே இருந்தன. அது மட்டுமல்ல தூஸ்ராவையும் அப்போதே வீசினார். ஆனால் அஷ்வின் தமிழகத்துக்கு வீச துவங்கிய போது அவரது off spinner அதிகமாய் திரும்பாது. அவர் இந்தியாவுக்காக ஆடிய போது கூட (இலங்கையின் அஜந்தா மெண்டிஸின் தாக்கத்தால் உருவாக்கிய) சுண்டு விரலால் நிமிண்டி வீசப்படும் சொடுக்குப் பந்துக்காக தான் அறியப்பட்டார். அதனுடன் arm ball எனப்படும் நேராக செல்லும் பந்தும் அவருக்கு உதவியது. கேப்டன் தோனியே இவ்வாறு அஷ்வினை மதிப்பிட்டார்: ”அஷ்வினை பார்க்கும் போது உடனே வாவ் என சொல்லத் தோன்றாது. அவர் பந்தை காற்றில் சுழற்றி மிதக்க விட மாட்டார். நேராய் தட்டையாய் வீசுபவர் போல் தோன்றும். ஆனால் உண்மையில் அவர் நுணுக்கமான சாமர்த்தியமான street smart (நடைமுறை விவேகம் மிக்க) பவுலர்”.
உள்ளூர் ஆட்டங்களில் சுழல் ஆடுதளங்களில் அவர் மலர் கொய்வது போல் விக்கெட்டுகளை கொத்துகொத்தாய் வீழ்த்தினாலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய தேசங்களில் பந்து வீசிய போது தன் போதாமைகளை அஷ்வின் உணர்ந்து கொண்டார். அப்போது மே.இ சுழலர் சுனில் நரைனின் பாணியில் கூட அஷ்வின் வீச துவங்கி இருந்தார். பலவித வெரைட்டி பந்துகளை முயன்று அவரது பவுலிங் ஆக்‌ஷன் கோளாறாகி போயிருந்தது. அஷ்வின் இப்போது கடுமையாய் பயிற்சி செய்து தன் ஆதார பந்தான பேட்ஸ்மேனை நோக்கி உள்திரும்பும் off spinnerஐ நன்றாய் வீச துவங்கினார். பந்தை வீசும் போது தோள் மட்டும் அல்லாமல் மொத்த உடலையும் பயன்படுத்த கற்றார். இது அவரது பந்துகளுக்கு drifஐ கொண்டு வந்தது.
Drift என்றால் பந்து பேட்ஸ்மேனுக்கு வெளியே சுழன்று போவதாய் மாயம் காட்டும். ஆனால் இறுதி நொடியில் சட்டென அது வெளியே செல்லாமல் உள்ளே வரும். இந்த பந்தைக் கொண்டு பல இடதுகை பேட்ஸ்மேன்களை அஷ்வின் LBW செய்தார். இதே பந்தை உள்ளே வருவதாய் காட்டி வெளியே திருப்பவும் அவரால் முடியும். கடந்த இலங்கை பயணத் தொடரில் அவர் தொடர்ந்து இலங்கை பேட்டிங் மேதையான சங்கக்காராவை இவ்வாறு தான் வெளியேற்றினார்.
பந்து வீச்சை இவ்வாறு மெருகேற்றியபின் அஷ்வினுக்கு இப்போது ஆடுதளத்தின் உதவி பெருமளவில் தேவைப்படுவதில்லை. தன் சூட்சுமங்கள், flight, drift மூலம் மட்டுமே அவரால் இன்று விக்கெட்டுகள் வீழ்த்த முடியும்.
அஷ்வின் ஒரு நடைமுறைவாத பவுலர். எதிரணி பேட்ஸ்மேன் எப்படி ஆடுகிறார், ஆடுதளத்தின் நிலை என்ன, அந்த நேரத்தில் எதை செய்தால் விக்கெட் விழும் ஆகிய விசயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குவார். தொடர்ந்து பந்தை சுழற்றி ஒரே இடத்தில் விழ வைத்தால் விக்கெட்டுகள் தானே விழும் என முனைபவர் அல்ல அவர். உதாரணமாய், சமீபமாய் நடந்து முடிந்த நியுசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சன் அஷ்வினின் பந்துகளை பின்னங்காலுக்கு சென்று சுலபத்தில் அடித்துக் கொண்டிருந்தார். அஷ்வின் இதை தடுக்க முனையவில்லை. தொடர்ந்து off stumpக்கு வெளியே வீசி அவரை உள்ளே வரும் பந்தை வெட்ட தூண்டினார். வில்லியம்சனும் தொடர்ந்து வெட்டி ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்ஸில் அப்படியான பந்து ஒன்று உள்ளே வெகுவாய் திரும்பி வந்து வில்லியம்சனை பவுல்ட் ஆக்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் வில்லியம்சன் அஷ்வினின் இதே பந்தில் LBW ஆகி வெளியேறினார். இரு பந்துகளும் drift மூலம் வெளியே செல்வதாய் பாவனை காட்டி பேட்ஸ்மேனை முறியடித்தது. இதுதான் எதிராளியின் கையை வாங்கி அவரையே அறையும் ஸ்டைல்.

இதே ஆட்டத்தில் பந்து குறைவாகவே திரும்பியது. பந்தை திருப்பி பேட்ஸ்மேனை வெளியேற்றுவது சிரமம். Rough எனப்படும் ஆடுதளத்தின் தளர்வான மண் கொண்ட பகுதி off stumpக்கு வைடாக வெளியிலோ பேட்ஸ்மேனுக்கு வெளியிலும் இருந்தது. அங்கு விழுந்தால் மட்டுமே பந்து அதிகமாய் திரும்பியது. இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் நியுசிலாந்தின் இஷ் சோதிக்கு ஒரு பந்தை off stumpக்கு வைடாக வீசி பெருமளவு திரும்ப வைத்தார். அதுவரை அழகாய் தடுத்தாடி வந்த சோதி சற்று பயந்து போனார். உள்ளே திரும்பும் பந்துக்கு அவுட் ஆகக் கூடாது என அதைத் தடுக்க ஸ்டம்புக்கு குறுக்கே வந்தார். அஷ்வின் இப்போது நேராக செல்லும் ஆர்ம் பந்தை வீசி பேட்ஸ்மேனை பவுல்ட் ஆக்கி வெளியேற்றினார். ஆடுதள சூழலை நன்கு உணர்ந்து கொண்டு அதை தனக்கு சாதகமாய் பயன்படுத்துவதில் அஷ்வின் ஒரு நிபுணர் எனலாம்.
நன்றி: கல்கி

Comments

Unknown said…
Ashwin is an intelligent bowler
he is never tired of producing unplayable balls.
he learns the batsmans defects very early...
he will create a world record definetely..

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...