திருமா வை.கோவின் வற்புறுத்தலால்
தான் திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனும் பார்வையில் எனக்கு
நம்பிக்கையில்லை. திருமாவின் நேற்றைய பேட்டி அவரது மனநிலை என்ன என்பதை காட்டி விடுகிறது.
அதில் திமுக மற்றும் அதிமுகவுக்கு தன் கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருப்பதாய் ஒரு
தோற்றத்தை கொடுக்கிறார். அதாவது, அவர் எங்கும் வெளிப்படையாய் அதிமுகவை விமர்சிக்கவில்லை.
திமுகவை பாராட்டவும் இல்லை. மாறாக, அடுத்து நிகழப் போகும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்கள்
பற்றி பேசுகிறார்.
இத்தேர்தல்களில் மூன்றாவது அணியின் சார்பாய் போட்டியிடும் நிலையில்
தன்னால் அதிமுகவை (மக்கள் நலக்கூட்டணியின் சில தலைவர்கள் என அவர் சொல்வதை நாம் ஜெயலலிதா
என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.) பகைத்துக் கொள்ள முடியாது என்கிறார்.
இத்தேர்தல்களில் விசிக பெரும் வெற்றிகளை பெறப்போவதில்லை என்பதை அவர்களது சமீபத்தைய
தேர்தல் சரிவுகளை வைத்து கணிக்க முடியும். ஆனால் ஒரு கட்சி தேர்தல்களில் பங்கேற்க வேண்டும்.
அதற்கு பணம் வேண்டும். இப்பணத்தை ஜெயலலிதா தான் வழங்கப் போகிறார். வெற்றியோ தோல்வியோ
இத்தேர்தல் மூன்றாவது அணியினருக்கு லாபம் தரும் வியாபாரமே. ஆக, காவிரிப் பிரச்சனையை
முன்னிட்டு ஜெயலலிதாவின் எரிச்சலை சம்பாதிக்கக் கூடாது என்றே அவர்கள் கவனமாய் இருப்பார்கள்.
திருமாவும் அப்படியே யோசிப்பார்.
ஆனால் அவர் ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும்
படி வேண்டினார்? ஏன் அதில் பங்கெடுக்கப் போவதாய் தோற்றத்தை ஏற்படுத்தினார்? தனது பேட்டியில்
ஏன் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள ஆதரவு
தெரிவித்ததாய் கூறினார்? ஏன் ஸ்டாலினுக்கு தன் வருத்தத்தை தெரிவித்து கடிதம் எழுதினார்?
இங்கு தான் விசிகவின் நிலைப்பாடு
வருகிறது.
இடது கட்சிகள் ஜெயலலிதா ஆதரவில்
இருந்து விலகும் வாய்ப்பு இல்லை. வை.கோவுக்கும் திமுக பக்கம் ஜென்மத்தில் கரை ஒதுங்க
முடியாது. ஆனால் திருமாவின் நிலை அப்படி அல்ல. விசிக தோன்றியதில் இருந்தே இரு திராவிட
கட்சிகளுடனும் தேர்தல் சீட், அதிகாரம், பணம் ஆகிய தேவைகளுக்காக கூட்டணி வைக்கும் கட்டாயத்தில்
அக்கட்சி இருக்கிறது. இடது கட்சிகள், வை.கோ ஆகியோருக்கு பெரும் அரசியல் கனவுகள் இல்லை.
ஆனால் திருமாவுக்கு உண்டு. அவர் எப்போதும் தன்னை அரசியல் பேரம் செய்யும் ஒரு சாதகமான
புள்ளியில் நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறார். இம்முறையும் அப்படித்தான். விசிக முழுக்க
அதிமுக பக்கம் இல்லை, ஆனால் அடுத்த இரண்டு வருடங்கள் திமுகவுக்கு ஆதரவு நல்க முடியாது
எனும் மறைமுக சேதியை தான் அவர் இரு கட்சிகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறார். அது மட்டுமல்ல,
இந்த பேட்டி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழர் நலனில் தம் கட்சியினரின் உறுதிப்பாட்டை
காட்ட முடியாததன் மொத்த பழியையும் லாவகமாய் வை.கோ மீது சுமத்தி விட்டார்.
இப்படி இலையும் கீறாமல் முள்ளுக்கும்
வலிக்காமல் பேசும் திறனை நான் கலைஞரிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
திருமாவின் நிலைப்பாட்டில் வேறுபல
எதிர்கால கணக்குகூட்டல்களும் உண்டு. அவர் ஏன் மோடியை திடீரென பாராட்டுகிறார்? ஏன் பா.ஜ.கவுடன் நெருங்க முயல்கிறார்? தமிழகத்தில்
ஒரு தலித்-மத்திய சாதி இந்துக்கள் கூட்டணியிலான ஒரு இந்துத்துவா எழுச்சியை பா.ஜ.க திட்டமிடுகிறதென்றால்
அது மிக புத்திசாலித்தனமான நகர்வு. அது வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் மதக்கலவரங்கள்
ஏற்படுத்தி இங்கே இந்துத்துவாவை வளர்க்க முடியாது. இதை பா.ஜ.க தாமதமாக புரிந்து கொள்ள
துவங்கி இருக்கிறது. இங்கே பெரியாரிய பகுத்தறிவுவாதம் எப்போதோ வீழ்ந்து விட்டது. இஸ்லாமியரை
விரோதிகளாய் பார்க்கும் வெறுப்பு மனநிலையும் தமிழர்களிடம் வெகுவாக இல்லை. ஆக பா.ஜ.கவின்
முன்னுள்ள அடுத்த வியூகம் மதவாதத்தை (இந்துத்துவா) இந்திய தேசியவாதத்தின் சாயலில் தமிழர்களுக்கு கொண்டு சேர்ப்பது.
ஏற்கனவே இந்தியா முழுக்க தலித்துகள் இந்துத்துவா சாய்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
தமிழகத்திலும் அம்பேத்கரிய அரசியல் விழிப்பற்ற கணிசமான இந்துக்களும் அவ்வாறே இருக்கிறார்கள்.
என் சொந்த ஊரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதுகெலும்பே தலித்துகள் தாம். வடக்கு இந்தியாவை இந்த
வியூகம் மூலம் வென்ற பிறகு இப்போது பா.ஜ.க தமிழகத்தில் இதை பிரயோகிக்க போகிறது. எதிர்காலத்தில்
பா.ஜ.கவும் விசிகவும் கைகோர்த்து மற்றொரு அணி உருவாக வாய்ப்புகள் உண்டு. (கொள்கைரீதியாய்
இதை மக்களுக்கு விளக்கும் சிக்கல் திருமாவுக்கு உண்டு. ஆனால் அவர் அதை சாமர்த்தியமாய்
சமாளிப்பார் என்றே நினைக்கிறேன்.)
இதே சூழலில் தான் ஜெயலலிதாவின்
உடல்நலமின்மை, நீண்ட கால ஆஸ்பத்திரி முடக்கம் நிகழ்கிறது. ஒருவேளை ஜெயலலிதா அற்ற ஒரு
அரசியல் களம் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஏற்பட்டால்? அப்போது பா.ஜ.கவுடன் வை.கோவும்
திருமாவும் இணைந்து போட்டியிடலாம். இந்த பேரம் சரிவராவிட்டால் திருமா திமுகவுடன் இணையவும்
செய்யலாம். ஏனென்றால் ஜெயலலிதா ஒருவேளை தீவிரமாய் எதிர்காலத்தில் செயல்பட முடியாமல்
போனால், ஸ்டாலின் தான் ஒரே அரசியல் மையம். ஆக, திருமா ஸ்டாலின் பக்கமும் ஒரு துண்டு
போட்டு வைத்திருக்கிறார்.