இதுவரை இந்தி திணிப்பு பற்றி பேசினோம்.
இனி தமிழுக்கு வருவோம். ஐம்பதுகளுக்குப்
பிறகு திராவிட கட்சிகள் தமிழ் தேசிய அலையை பரவலாக்கினார்கள். அதை அரசியல் வெற்றி சூத்திரமாக்கினார்கள்.
தமிழுணர்வை நம் ரத்தத்தில் கலந்தார்கள். ஆனால் தமிழ்ப்பற்று, தமிழார்வம் எத்தனை பேருக்கு
இங்கு உண்டு? உண்மையை சொன்னால், வடக்கத்திய அரசு இந்தியை திணிப்பது போலத் தான் தமிழக
அரசு தமிழை நம் மீது திணித்தது.
நம் திராவிட கட்சிகளுக்கு தமிழ் என்றால் செவ்வியல்
தமிழ் மட்டுமே. ஆக அவர்கள் பத்து வயதுக் குழந்தையை திருக்குறள் மனனம் செய்ய வைத்தார்கள்.
இந்த குழந்தைகளுக்கு இன்று புழக்கத்தில் இல்லாத பல சொற்கள் எப்படி புரியும், பள்ளியில்
படிக்கும் தமிழ் அந்நியமாய் இராதா என யோசிக்கவில்லை. உதாரணமாய், பேஸ்புக்கில் புழங்கும்
இன்றைய ஒரு 13 வயது பையனுக்கு திருவாசகம் கற்க வேண்டிய தேவை என்ன? அந்த தமிழ் அவனுக்கு
சமிஸ்கிருதம் போலத் தோன்றாதா? நான் பள்ளி மாணவனாய் இருக்கையில் திருக்குறளை கடுமையாய்
வெறுத்தேன். ஏனென்றால் எனக்கு அந்நியமான “மொழியில்” அது இருந்தது. “துப்பார்க்கு துப்பாய”
என குறள் எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஏன் இதையெல்லாம் படிக்க வேண்டும் என புரியவில்லை.
இன்றும் பல தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கடுமையான ஒரு
பாடமாய் உள்ளது. எந்த பெற்றோரிடம் விசாரித்தாலும் இதை புரிந்து கொள்ளலாம். தமிழ்ப்
பாடத்தில் மதிப்பெண்கள் அதிகம் பெற நம் மாணவர்கள் திணறுகிறார்கள். ஏனென்றால் இன்று
புழக்கத்தில் இல்லாத ஒரு தமிழ் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது.
ஒரு பள்ளி மாணவனாய் நான் துணைப்பாடத்தை
மட்டுமே நேசித்தேன். நான் மட்டுமல்ல என் சகமாணவர்களும் தான். ஏனெனில் அதில் சிறுகதைகள்
இருந்தன. அன்று நாங்கள் கதைப்புத்தகங்களை ஒளித்து வகுப்புக்கு கொண்டு வந்து படிப்போம்.
ஆசிரியர்கள் கண்டால் பிரம்பால் அடிப்பார்கள். இது என்ன அநியாயம்? நாம் காமிக்ஸ் மூலம்
என் தமிழை கற்கக் கூடாதா? கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல் எனக்கு தமிழை அறிமுகம் செய்யாதா?
தேவாரமும், தேம்பாவணியும் மூலம் தான் கற்க வேண்டுமா? இது ஒரு தொல் பண்பாட்டு திணிப்பு
ஆகாதா?
பதினைந்து வயதுக்கு மேல் தான்
எனக்கு மரபுக் கவிதை எழுதுவதிலும், மரபிலக்கியம் படிப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால்
அந்த ஆர்வம் ஏற்பட்டது கதைப்புத்தக வாசிப்பினால் தான்; தமிழ் ஐயாக்களின் உரைகளால் அல்ல.
நான் விதிவிலக்கு. என்னுடன் படித்தவர்கள் தமிழை சமிஸ்கிருதம் போலத் தான் இன்றும் பார்க்கிறார்கள்.
“துப்பார்க்க துப்பாயவின்” திகிலை அவர்கள் இன்னும் கடக்க வில்லை.
மரபிலக்கிய அறிமுகம் அவசியம் தான்.
ஆனால் அது மாணவர்கள் வளர்ந்த பின் நிகழ வேண்டும். அல்லது தேவாரமும் திருவாசகமும் ஓதுவதை
கேட்டு வளரும் சுழல் இருக்க வேண்டும். இல்லாத ஒன்றை திணித்தல் ஆகாது. மரபுக் கவிதை
மொழியை விட நாம் எளிய உரைநடைக்கு 80% இடம் அளிக்க வேண்டும். வகுப்பில் நாடகம் போடுவது,
கதை கூறுவது ஆகியவை ஊக்குவிக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழய்யாக்கள் செந்தமிழில்
பேசுவதை நிறுத்த வேண்டும். தமிழ் கற்பதை இயல்பாக, சுவாரஸ்யமாக, எளிதாக ஆக்க வேண்டும்.
அது மட்டுமல்ல தமிழ்த் தேர்வுகளில் மதிப்பெண்களை சற்று தாராளமாய் வழங்க வேண்டும். இன்று
கல்லூரியில் படிக்க வரும் மாணவர்களுக்கு தமிழில் ஒரு வரி தவறில்லாமல், எழுத்துப்பிழை
இன்றி எழுதத் தெரியாது. ஏனென்றால் பள்ளியில் உரைநடைத் தமிழ் சரியானபடி கற்றுவிக்கப்படுவதில்லை.
சொந்தமாய் எழுதும் பயிற்சிகள் இல்லை. புரியாத தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் மனனம்
செய்தே அவர்கள் களைத்து விடுகிறார்கள்.
ஒரு எளிய கேள்வி: ”இயல்வது கரவேல்”. “கரவேல்” என்ற
சொல்லை நீங்கள் எங்காவது தமிழகத்தில் பயன்படுத்த முடியுமா? அதை ஒரு முகநூல் பின்னூட்டத்தில்
எழுத முடியுமா? டீக்கடைக்கு சென்று “கரவேல்” என சொன்னால் என்ன கிடைக்கும்? தமிழனுக்கே
தெரியாத சொல் தமிழனால் பயன்படுத்த முடியாத சொல் ஏன் அவன் தொண்டையில் திணிக்கப்பட வேண்டும்?
ஒரு இந்திச் சொல்லுக்கும் ”கரவேலுக்கும்” என்ன பெரிய வித்தியாசம்? ஒரு சின்ன பையனுக்கு
ரெண்டும் ஒன்று தான்! மோடி இந்தியை திணித்ததற்கும் நம் திராவிட பிழம்புகள் ”கரவேலை”
திணிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.