முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழித் திணிப்பு 2

இதுவரை இந்தி திணிப்பு பற்றி பேசினோம்.
இனி தமிழுக்கு வருவோம். ஐம்பதுகளுக்குப் பிறகு திராவிட கட்சிகள் தமிழ் தேசிய அலையை பரவலாக்கினார்கள். அதை அரசியல் வெற்றி சூத்திரமாக்கினார்கள். தமிழுணர்வை நம் ரத்தத்தில் கலந்தார்கள். ஆனால் தமிழ்ப்பற்று, தமிழார்வம் எத்தனை பேருக்கு இங்கு உண்டு? உண்மையை சொன்னால், வடக்கத்திய அரசு இந்தியை திணிப்பது போலத் தான் தமிழக அரசு தமிழை நம் மீது திணித்தது.

 நம் திராவிட கட்சிகளுக்கு தமிழ் என்றால் செவ்வியல் தமிழ் மட்டுமே. ஆக அவர்கள் பத்து வயதுக் குழந்தையை திருக்குறள் மனனம் செய்ய வைத்தார்கள். இந்த குழந்தைகளுக்கு இன்று புழக்கத்தில் இல்லாத பல சொற்கள் எப்படி புரியும், பள்ளியில் படிக்கும் தமிழ் அந்நியமாய் இராதா என யோசிக்கவில்லை. உதாரணமாய், பேஸ்புக்கில் புழங்கும் இன்றைய ஒரு 13 வயது பையனுக்கு திருவாசகம் கற்க வேண்டிய தேவை என்ன? அந்த தமிழ் அவனுக்கு சமிஸ்கிருதம் போலத் தோன்றாதா? நான் பள்ளி மாணவனாய் இருக்கையில் திருக்குறளை கடுமையாய் வெறுத்தேன். ஏனென்றால் எனக்கு அந்நியமான “மொழியில்” அது இருந்தது. “துப்பார்க்கு துப்பாய” என குறள் எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஏன் இதையெல்லாம் படிக்க வேண்டும் என புரியவில்லை.
 இன்றும் பல தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கடுமையான ஒரு பாடமாய் உள்ளது. எந்த பெற்றோரிடம் விசாரித்தாலும் இதை புரிந்து கொள்ளலாம். தமிழ்ப் பாடத்தில் மதிப்பெண்கள் அதிகம் பெற நம் மாணவர்கள் திணறுகிறார்கள். ஏனென்றால் இன்று புழக்கத்தில் இல்லாத ஒரு தமிழ் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது.
ஒரு பள்ளி மாணவனாய் நான் துணைப்பாடத்தை மட்டுமே நேசித்தேன். நான் மட்டுமல்ல என் சகமாணவர்களும் தான். ஏனெனில் அதில் சிறுகதைகள் இருந்தன. அன்று நாங்கள் கதைப்புத்தகங்களை ஒளித்து வகுப்புக்கு கொண்டு வந்து படிப்போம். ஆசிரியர்கள் கண்டால் பிரம்பால் அடிப்பார்கள். இது என்ன அநியாயம்? நாம் காமிக்ஸ் மூலம் என் தமிழை கற்கக் கூடாதா? கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல் எனக்கு தமிழை அறிமுகம் செய்யாதா? தேவாரமும், தேம்பாவணியும் மூலம் தான் கற்க வேண்டுமா? இது ஒரு தொல் பண்பாட்டு திணிப்பு ஆகாதா?
பதினைந்து வயதுக்கு மேல் தான் எனக்கு மரபுக் கவிதை எழுதுவதிலும், மரபிலக்கியம் படிப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அந்த ஆர்வம் ஏற்பட்டது கதைப்புத்தக வாசிப்பினால் தான்; தமிழ் ஐயாக்களின் உரைகளால் அல்ல. நான் விதிவிலக்கு. என்னுடன் படித்தவர்கள் தமிழை சமிஸ்கிருதம் போலத் தான் இன்றும் பார்க்கிறார்கள். “துப்பார்க்க துப்பாயவின்” திகிலை அவர்கள் இன்னும் கடக்க வில்லை.
மரபிலக்கிய அறிமுகம் அவசியம் தான். ஆனால் அது மாணவர்கள் வளர்ந்த பின் நிகழ வேண்டும். அல்லது தேவாரமும் திருவாசகமும் ஓதுவதை கேட்டு வளரும் சுழல் இருக்க வேண்டும். இல்லாத ஒன்றை திணித்தல் ஆகாது. மரபுக் கவிதை மொழியை விட நாம் எளிய உரைநடைக்கு 80% இடம் அளிக்க வேண்டும். வகுப்பில் நாடகம் போடுவது, கதை கூறுவது ஆகியவை ஊக்குவிக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழய்யாக்கள் செந்தமிழில் பேசுவதை நிறுத்த வேண்டும். தமிழ் கற்பதை இயல்பாக, சுவாரஸ்யமாக, எளிதாக ஆக்க வேண்டும். அது மட்டுமல்ல தமிழ்த் தேர்வுகளில் மதிப்பெண்களை சற்று தாராளமாய் வழங்க வேண்டும். இன்று கல்லூரியில் படிக்க வரும் மாணவர்களுக்கு தமிழில் ஒரு வரி தவறில்லாமல், எழுத்துப்பிழை இன்றி எழுதத் தெரியாது. ஏனென்றால் பள்ளியில் உரைநடைத் தமிழ் சரியானபடி கற்றுவிக்கப்படுவதில்லை. சொந்தமாய் எழுதும் பயிற்சிகள் இல்லை. புரியாத தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் மனனம் செய்தே அவர்கள் களைத்து விடுகிறார்கள்.
 ஒரு எளிய கேள்வி: ”இயல்வது கரவேல்”. “கரவேல்” என்ற சொல்லை நீங்கள் எங்காவது தமிழகத்தில் பயன்படுத்த முடியுமா? அதை ஒரு முகநூல் பின்னூட்டத்தில் எழுத முடியுமா? டீக்கடைக்கு சென்று “கரவேல்” என சொன்னால் என்ன கிடைக்கும்? தமிழனுக்கே தெரியாத சொல் தமிழனால் பயன்படுத்த முடியாத சொல் ஏன் அவன் தொண்டையில் திணிக்கப்பட வேண்டும்? ஒரு இந்திச் சொல்லுக்கும் ”கரவேலுக்கும்” என்ன பெரிய வித்தியாசம்? ஒரு சின்ன பையனுக்கு ரெண்டும் ஒன்று தான்! மோடி இந்தியை திணித்ததற்கும் நம் திராவிட பிழம்புகள் ”கரவேலை” திணிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
டீக்கடைக்குப் போய் பித்தாகோரஸ் தீரத்தைப் பற்றிக் கேட்டாலும் ஒன்றும் தெரியாது என்ற பதில்தான் வரும். அதனால் கணக்குப் பாடத்தில் முக்கால்வாசிப் பாடங்களை நீக்கிவிடலாமே. (மற்ற எல்லாப் பாடங்களுக்கும்கூட டீக்கடையை அளவுகோலாக வைத்தால் இன்னும் நல்லது)

சிறுபிள்ளைத்தனமான வாதத்தை முன் வைக்கிறீர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...