5) வாசிப்பு ஒரு பழக்கம். உடற்பயிற்சி போல. தினமும்
குறிப்பிட்ட மணிநேரங்கள் படித்தால் சிரமம் தெரியாமல் படிக்க முடியும். ஆனால் அப்பழக்கம்
விட்டுப் போனால் திரும்ப உட்கார்ந்து படிக்க முடியாது. கவனம் சிதறும். ஒரு நாளின் ஒரு
குறிப்பிட்ட பகுதியை வாசிப்புக்கென ஒதுக்குங்கள். அப்போது மட்டும் படியுங்கள். அப்போது
படிப்பதை மட்டும் செய்யுங்கள்.
6) வாசிப்புக்கு தனிமை அவசியம். அதாவது தனித்திருப்பதல்ல.
(ரெண்டும் வேறுவேறு) தொடர்ந்து யாரிடமாவது உரையாட வேண்டும் என மனம் தவித்தால் வாசிப்பு
தடைபட்டுப் போகும். பேஸ்புக்கில் தீவிரமாய் இருப்பவர்கள் தம்மால் புத்தகம் வாசிக்க
இயலவில்லை என வருந்துகிறார்கள். இதற்காகவே பேஸ்புக்கை விட்டு வனவாசம் செல்கிறார்கள்.
திரும்ப வந்து தாம் வனவாசத்தின் போது இவ்வளவு நூல்களைப் படித்தோம் என கூறுகிறார்கள்.
நான் நீண்ட காலமாய் பேஸ்புக்கில் இருக்கிறேன். இதுவரை அது எனக்கு தொந்தரவாக இருந்ததில்லை.
ஏனெனில் உறவுகளை உருவாக்கி தொடர, யாரிடமாவது அரட்டை அடிக்க நான் அதை பயன்படுத்துவதில்லை.
பேஸ்புக்கை நான் ஒரு செய்தித்தாளை போல் பயன்படுத்துகிறேன். சமூக வலைதளமாக அல்ல. என்னால்
இப்போதும் மணிக்கணக்காய் தனியாய் இருக்க முடியும். (என்னைச் சுற்றி மனிதர்களும் வேண்டும்.)
இத்தனிமையை நான் ரசிக்கிறேன். இதை மேலும் ரசிக்க நான் புத்தக வாசிப்பை பயன்படுத்துகிறேன்.
பேசிக் கொண்டே இருப்பவர் வாசிக்க முடியாது. மனம் முதலில் ஓய வேண்டும். அதற்கு வாய்
ஓய வேண்டும்.
7) வாசிக்க
வாசிக்க நமக்கென ஒரு ரசனை, தேர்வு, ஆர்வம், ஒருவித பட்டியல் உருவாகும். நமக்கென பிரியப்பட்ட
எழுத்தாளர்கள் தோன்றுவார்கள். இப்போது நீங்கள் உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். புதுப்பிக்க
வேண்டும். (அல்லாவிட்டால் வாசிப்பு தட்டையாகி விடும்.) உங்களுக்கு உவப்பிராது என நம்பும்
ஒரு துறையில் இருந்து ஒரு நூலை வாங்கி படியுங்கள். நீங்கள் ஒரு இடதுசாரியா? அமெரிக்க
ஏகாதிபத்யத்தை நியாயப்படுத்தும் ஒரு நூலை புரட்டிப் பாருங்கள். தத்துவம், இலக்கியம்,
கலைக்கோட்பாடுகள் மட்டும் படிக்கிறவரா? தோட்டக்கலை, சோதிடம், உடற்பயிற்சி, புவியியல்,
அறிவியல் நூல்களை தேடி படியுங்கள். ஆரம்பத்தில் கடுப்படித்தாலும் இந்நூல்களில் ஒன்று
உங்களுக்கு சட்டென அபாரமான ஒரு மனவிரிவைத் தரும்.
8) வாசிப்பு நம் அறிவு, நம்பிக்கைகள், நுண்ணுர்வு
ஆகியவை ஏற்படுத்தின சட்டகங்களை நொறுக்குவதற்கான ஒரு காரியம். இவை உடையும் போது மனம்
விரியும். அப்போது பரவசம் கிடைக்கும். இதுவே வாசிப்பின் இன்பம். ஒரு உதாரணம் தருகிறேன்.
இரண்டு வகையான பெண்ணிய எழுத்து உண்டு. ஒன்றில், பெண்கள் முழுக்க நல்லவர்களாகவும் ஆண்கள்
ஒடுக்குமுறையில் ஈடுபடும் கொடூரர்களாகவும் இருப்பார்கள். அல்லது இப்பெண்களுக்கு உதவும்
நல்லவர்களாகவும் சில சமயம் இருப்பார்கள். இந்த இருமை கொண்ட பெண் எழுத்து அம்பையுடையது.
இதைப் படிக்கையில் ஒரு ஆரம்பநிலை பெண்ணியவாதி புளகாங்கிதம் அடையலாம். ஆனால் நம் கருத்தை
இன்னொருவர் ஆமோதிக்கிறார் என்பதில் உள்ள ஒரு குழு அங்கீகார குதூகலிப்பு மட்டுமே இது.
இன்னொரு வகையான பெண்ணிய எழுத்தில் பெண்ணுக்குள் இருக்கும் முரண்களும் பேசப்படும். சில்வியா
பிளாத்தின் “தி பெல் ஜார்” (The Bell Jar) நாவலை சொல்லலாம். தன் உடல் மீது ஆணாதிக்க
சமூகமும் குடும்பமும் செலுத்தும் அடக்குமுறையை இந்நாவலின் நாயகி எஸ்தர் கிரீன்வுட்
சாடுகிறாள்; தன் தாய் அத்தகைய ஒரு அடக்குமுறையை தன் மீது ஏவுவதை அவள் எதிர்க்கிறாள்.
ஆனால் அதேவேளை உடலை சுதந்திரமாய் வெளிப்படுத்தி பார்ட்டி கொண்டாட்டம் என மகிழ்ச்சியாய்
இருக்கும் மேற்தட்டு பெண்கள் மீது கடும் குரோதத்தையும் அவள் வெளிப்படுத்துகிறாள். அதாவது,
எஸ்தர் தன் தாயிடம் இருந்து தப்பித்துச் செல்லும் அதே வேளை உள்ளுக்குள் தன் தாயாகவும்
இருக்கிறாள். மனித மனம் எப்படி முரண்பாடுகளின் முடிச்சாக இருக்கிறது என்பதை சில்வியா
பிளாத் தன் கவிதைகளில் தொடர்ந்து பேசுவதை இந்நாவலில் இன்னும் உக்கிரமாய் செய்கிறார்.
ஒரு பெண்ணியவாதிக்கு இந்நாவல் ஏற்படுத்தும் அதிர்ச்சிகளும் குழப்பங்களும் முக்கியமானவை.
அம்பை இதை செய்ய மாட்டார். அம்பை உங்கள் பெண்ணிய கழுத்துக்கு மசாஜ் செய்வார். சில்வியா
பிளாத் உங்கள் பெண்ணிய கழுத்தைப் பற்றி சடேரென உங்களை வாகனங்கள் விரையும் சாலை நடுவே
தள்ளி விடுவார்.
நீங்கள் வாசிப்பது ஒரு நல்ல நூலா இல்லையா என அறிய
ஒரே வழி தான்: அது உங்கள் கழுத்தை மசாஜ் செய்தால் நல்ல நூல் இல்லை; கழுத்தை உடைத்தால்
மிக நல்ல நூல்.
அவ்வளவு தான்! இனி வாசியுங்கள்.