எல்லா ரியாலிட்டி ஷோக்களையும் போலத் தான் பிக்பாஸும் – பாதி
உண்மை, பாதி பொய். எல்லாமே பாதி பாதி – பாதி சந்தோஷம், பாதி கண்ணீர், பாதி கோபம், பாதி
அரற்றல், பாதி வெறுப்பு, பாதி பழிவாங்கல். இம்முறை பிக்பாஸில் 2விலும் எல்லாம் பாதிக்கு
பாதி நடிப்பு.
நீங்கள் தாடி பாலாஜி,
அவரது மனைவி நித்யாவின் நடவடிக்கைகளை மகத், டேனியல், வைஷ்ணவி, நித்யா, ரித்விகா, மமதி
ஆகியோரின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால் இது பளிச்சென புரியும். பாலாஜி, நித்யா அளவுக்கு
பிறரால் சிறப்பாய் நடிக்க முடியவில்லை. ஆகையால் அவர்களின் சச்சரவுகள், மோதல்கள் முன்னவர்களின்
பிணக்கு போல எடுபடவில்லை.
பாலாஜியின் நகைச்சுவை நடிப்பு என்றுமே என்னை சினிமாவில் கவர்ந்ததில்லை.
ஆனால் பிக்பாஸில் தன் முன்னாள் மனைவியிடம் எரிச்சல் காட்டுவது, வெறுப்பு கொட்டுவது,
கசப்பில் தளர்வது என நுணுக்கமாய் நல்ல கட்டுப்பாட்டுடன் நடிக்கிறார். நித்யாவும் நல்ல
தேர்ச்சியாய் நடிக்கிறார். அவர்களின் மோதல் ஏன் நிஜமில்லை என்கிறேன்?
முதலில், இது ரியாலிட்டி ஷோ. “நீயா நானாவில்” கூட இயக்குநரின்
ஆதிக்கம் அதிகம். யாரை எந்தளவு உணர்ச்சிவசப்பட வைக்கலாம், ஒரு மோதலை எந்த எல்லை வரை
நீட்டிக்கலாம் என அவரே தீர்மானிக்கிறார் என்பதை நான் அனுபவரீதியாய் கண்டிருக்கிறேன்.
“பிக்பாஸ்” வேறெப்படியும் இருக்கும் என நான் நம்பவில்லை.
அடுத்து, பாலாஜியையும் நித்யாவையும் ஷோவுக்கு கொணர்ந்ததே அவர்களது
நட்சத்திர குடும்ப மோதலை முன்வைத்து தான் – அதைக் கொண்டு மேலும் சிக்கலான உணர்ச்சி
நாடகங்களை அரங்கேற்றி டி.ஆர்.பியை எகிற வைக்க திட்டமிடுகிறார்கள் என்பது உலகத்துக்கே
தெரிந்த ஒன்று. அதை நிரூபிக்கும் வண்ணம் ஷோவில் இப்போது அவர்கள் வேண்டுமென்றே மோதுகிறார்கள்,
உணர்ச்சிவசப்படுகிறார்கள், ஒரு வாரம் நித்யாவை வில்லியாக காட்டினால், அடுத்த வாரம் பாலாஜியை
வில்லனாக்குகிறார்கள். யார் எதை செய்தால் மக்களின் கவனத்தை திருப்பலாம் என்பதில் பிக்பாஸ்
மிகுந்த தெளிவுடன் இருக்கிறார் – இப்போதைக்கு நித்யாவை அழ வைப்பது தான் பெண் பார்வையாளர்களை
கவர சிறந்த வழி. அது மட்டுமல்ல, உலகத் தமிழ் பெண்கள் அத்தனை பேருக்கும் தம் கணவர்கள்
மீதுள்ள வெறுப்புக்கு, கடுப்புக்கு வடிகாலாக பாலாஜியின் ஆணாதிக்க செயல்களை வடிவமைக்கிறார்கள்.
அதை பிக்பாஸ் கமல் கண்டிக்கையில் பார்வையாளர் பலருக்கும் ஒரு பெரிய சமூக அநீதிக்கு
அவர் தீர்வு சொல்லும் திருப்தி ஏற்படுகிறது. தமிழ் சமூகத்தின் அத்தனை நாகரிகமில்லாத,
வன்மமான கணவர்களையும் பிக்பாஸ் செருப்பால் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டதாய் தாய்க்குலங்கள்
மகிழலாம்.
நடிப்புக்கும் இயல்பான நடத்தைக்குமான வித்தியாசம் உடல் மொழி.
நாம் நமது உணர்ச்சிகளை குரலாலும் கைகளை உயர்த்தி சைகைகளாலும் காட்டுகிறோம். அதை விட
அதிகமாய் நாம் மொழியை நம்பி இருக்கிறோம். ஆனால் ஒரு தேர்ந்த நடிகன் உடல்மொழியை நேர்த்தியாய்
நுணுக்கமாய் பயன்படுத்துவான். கோபமாய் நடக்கையில் தன் தோள்களை எப்படி வைத்துக் கொள்ள
வேண்டும், தன் நடையின் பாணியில் எப்படி மன உணர்வை காட்ட வேண்டும் என அவன் அறிந்திருப்பான்.
பாலாஜியிடம் இந்த தேர்ச்சி மட்டுமல்ல, கேமரா பிரக்ஞையும் நிச்சயம் இருக்கிறது. ஆச்சரியமாய்,
நடிப்பு அனுபவம் அற்ற நித்யாவும் இந்த ஷோவில் நன்றாய் நடிக்கிறார்.
இவர்களைப் போல மஹத்தோ டேனியோ கோபப்பட்டு புலம்புகையில் இந்த
அளவுக்கு அது ஆற்றல் மிக்கதாய் இல்லை. அவர்களிடம் பிரயத்தனம் தெரிகிறது. ஏனெனில் அவர்கள்
தேர்ந்த நடிகர்கள் அல்ல.
இன்னொரு விசயம் பாலாஜி கெட்டவார்த்தை சொல்வதாய் நித்யா வைக்கும்
குற்றச்சாட்டு. இது தன் பெயரைக் கெடுக்கும், மக்கள் மத்தியில் தன் பிம்பம் சரியும்,
இதனால் தான் வெளியேற்றப்படலாம் என பாலாஜி அறிய மட்டாரா? பிற பங்கேற்பாளர்கள் மிக மிக
கவனமாய் வார்த்தைகளை வெளி விடுகையில் இவர் மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை கொட்டுகிறார்?
இயக்குநரின் அறிவுறுத்தலின் படியே இந்த கெட்டவார்த்தை சமாச்சாரம் அரங்கேறுகிறது என்பது
வெளிப்படை.
முதல் வாரத்தில்
நித்யா மீது எல்லாரும் புகார் கூறியும், பாலாஜியின் இழிவான பேச்சு பற்றி கமலே கண்டிக்கும்
நிலை வந்த பின்னரும் அவர்கள் வெளியேற்றப்படும் நிலை கூட ஏற்படவில்லை. இதுவும் நான்
மேலே குறிப்பிட்ட விசயத்துக்கு ஒரு சான்று.
ஆனால் இது தொலைக்காட்சி நாடகம் அல்ல – யாரும் வசனத்தை மனனம்
செய்து மிகை உணர்ச்சியுடன் இதில் நடிப்பதில்லை. ஒருவிதத்தில் இந்த ஷோவின் வெற்றியே
இப்படி எதார்த்தமாகவும் எதார்த்தமற்றதாகவும் ஒரே சமயம் அது இருப்பதில் உள்ளது.
ஒருவித நடுவாந்தரமான உண்மைத்தன்மை கொண்ட நிகழ்ச்சி இது. பார்க்கிற
அத்தனை பேரும் இதை உணர்கிறார்கள். ஆனால் தமக்கு தரப்பட்ட ஒற்றை வரிக் கதையைக் கொண்டு
இந்த பங்கேற்பாளர்கள் எப்படி எல்லாம் தம் கற்பனையாலும் சில நேரம் நிஜமாகவே லயித்து
போயும் நடிப்பும் உண்மையுமாய் வெளிப்படுகிறார்கள் என காண்பதில் ஒரு தனி சுவாரஸ்யம்
உள்ளது. சொல்லப் போனால் நிஜ நடிப்பை விட இந்த ரியாலிட்டி நடிப்பு இன்னும் உண்மையாய்
தெரிகிறது.
உதாரணமாய், நித்யாவின் வேதனை நடிப்பென்றால் அதில் அவரது நிஜவாழ்வின்
நினைவுகளும் தாம் உள்ளோடுகின்றன. பாலாஜியின் எரிச்சலும் அப்படியே நமக்குத் தெரிகிறது.
எது திட்டமிட்டது எது நிஜமாய் இதயபூர்வமாய் வெளிப்படுவது எனும் குழப்பத்தை பிக்பாஸ்
ஏற்படுத்துகிறது. இதுவே இந்நிகழ்ச்சியின் வெற்றி!