தனது “ஊழியின் நடனம்” கவிதைக்காக தற்போது எச். ராஜா உள்ளிட்ட
தமிழக இந்துத்துவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது சற்றே
சிக்கலான கவிதை; அதை எச். ராஜா படித்து புரிந்து கண்டித்து மனுஷை கைது செய்ய வேண்டுமென
கோரியிருக்கிறார் என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை எத்தனையோ முறை மனுஷ்
மோடியையும் பாஜகவினரையும் கடுமையாய் தாக்கி எழுதியிருக்கிறார். ஏன் அப்போதெல்லாம் கொதிக்காத
ராஜா இப்போது கொந்தளிக்கிறார்? ஏன் மனுஷின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து, அவரைத் தாக்கும்படி
தன் கட்சியினரை தூண்டி விட்டு, மனுஷை நிலைகுலைய வைக்க முயல்கிறார்?
முகநூலில் ராஜன் குறை குறிப்பிட்டது போல இது ஒரு அரசியல்
வியூகம் மட்டுமே. மனுஷ்யபுத்திரன் ஒரு இஸ்லாமியர், ஒரு இஸ்லாமியர் இந்துக்களை அவமதிக்கிறார்
எனும் சித்திரத்தை உருவாக்குவதே எச். ராஜாவின் நோக்கம். ஆனால் அவர் நிச்சயம் வெல்லப்
போவதில்லை; ஏனெனில் தமிழகத்தில் இஸ்லாமிய வெறுப்பின் சுவடுகள் இருந்ததில்லை; இஸ்லாமியரை
மற்றமையாய் பார்க்கும் மரபோ வரலாறோ நமக்கு இல்லை. இஸ்லாமிய படையெடுப்பினால் நாம் நிலைகுலைந்த
தருணங்கள் நம் வரலாற்றில் இல்லை. ஆனாலும் இது ஒரு சள்ளுபிடித்த பிரச்சனை தான். ஒருவர்
சாக்கடையில் விழுந்து குதித்தால் சாலையில் போகிறவர்களின் மீது தான் சாக்கடை நீர் பட்டு
அழுக்காகும். இந்துத்துவர்கள் அப்படி தம்மையும் சேறாக்கி வழிப்போக்கர்களையும் சேறாக்க
போகிறார்கள்.
என்ன வியப்பென்றால், மனுஷ்யபுத்திரன் இதே போல முன்பு ஜனாய்லுதீன்
தலைமையிலான பிற்போக்காளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார் – அப்போது அவர் (நக்கீரனில்
அவர் எழுதிய ஒரு கட்டுரையில்) இஸ்லாத்தை அவமதித்து விட்டார் என சொன்னார்கள். அப்போது
அவர் இஸ்லாத்தை விமர்சித்த ஒரு இஸ்லாமியர்; இப்போது அவர் இந்து தெய்வத்தை அவமதித்த
இஸ்லாமியர். இஸ்லாத்தை விமர்சிப்பவர் இஸ்லாமியரே அல்ல தானே; அப்படி எனில் இஸ்லாத்தில்
இருந்து வெளியே வந்து விட்ட மனுஷ், இப்போது “ஊழியின் நடனம்” எழுதிய மனுஷ், இஸ்லாமியர்
அல்ல தானே?
இஸ்லாத்தின் உள்ளே இருந்தும் அடி, வெளியே இருந்தும் இடி என்பதே
அவரது அவல நிலை.
ஒரு காரணம் மனுஷ் ஒரு முற்போக்காளர், தன் மதத்தை துறந்த முற்போக்காளர்,
என்பது. ஆனால் இந்தியாவில் நீங்களே மதத்தை துறந்தாலும் மதம் உங்களைத் துறக்காது.
இது மேற்கில் நிகழாது – அங்கே பெர்ட்னெண்ட் ரஸலை யாரும் கிறித்துவர்
எனப் பார்க்க மாட்டார்கள்; அவர் ஒரு நாத்திகர். அவர் ஒருவேளை இஸ்லாத்தை விமர்சித்து
எழுதியிருந்தால் இஸ்லாமிய அமைப்பினர் ஒரு கிறுத்துவர் தம்மை அவமதித்து விட்டார் எனப்
பார்க்க மாட்டார்கள். நம் நாட்டில் மட்டுமே மதம் ஒரு நிழல் போல நம்மைத் தொடர்கிறது.
“ஊழியின் நடனம்” ஒரு அரசியல் கவிதை – ஆக அது நேரடியாகவும்
கூர்மையாகவும் உள்ளது. நகைமுரணே அதன் தொனி.
“தேவி
உன் விடாய்க் குருதி
ஊழிக் காலங்களை
உருவாக்க வல்லதா?”
எனக் கேட்கையில் சபரி மலையில் பெண்கள் நுழைவதற்கு உரிமை கோரும்
போராட்டத்தை, அதன் மீதான தெய்வ சாபமே இப்போதைய கேரள வெள்ளம் எனும் சர்ச்சையை குறிக்கிறார்.
“உன் விடாய்க் குருதியை
அசுத்தம் என்றார்கள்
தீட்டு என்றார்கள்
உன் குருதியின் வெள்ளம்
இந்த நிலத்தின் மீதிருக்கும்
அத்தனையையும்
முழுமையாக கழுவிக் கொண்டிருக்கிறது
இவ்வளவு தூய்மை
எங்களுக்கு வேண்டாம்”
இந்த இடத்தில் நகைமுரண் தோன்றுகிறது. தேவியின் விடாய்க் குருதி
அல்ல, பக்தைகளின் விடாய்க் குருதி அல்ல, இந்துத்துவர்களின் வெறியே அசிங்கம் என சுட்டுகிறது.
இந்த வெள்ளம் அதைக் கழுவுவதற்கான தேவ கோபம் என்கிறது. போதும், கருணை காட்டு என தெய்வத்தை
கோருகிறது.
இது ஒரு எளிய கவிதை தான். ஆனால் இதன் நகைமுரணை புரிந்து கொள்ளும்
திறன் நம் சங்கிகளுக்கு உண்டா எனத் தெரியவில்லை.
சரி, இது போன்ற சர்ச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மனுஷ்
என்ன செய்ய வேண்டும்?
ஒன்றும் செய்ய முடியாது – அவர் எந்த மதத்தையும் சாராதவராய்,
எல்லா மதங்களையும் விமர்சிப்பவராக, அதே நேரம் தன் பிறப்படையாளத்தை அழிக்க முடியாதவராய்
(அது அவர் தவறல்ல என்றாலும்) இருக்கும் வரையில், இது போன்ற தாக்குதல்கள் வந்து கொண்டே
தான் இருக்கும்.