முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்



அண்மைக் காலங்களில் .பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மற்றும் இஸ்லாமியர் மீது கடுஞ்சொற்களை ஏவுவதை, வன்முறை கொப்புளிக்கும் திராவகப் பேச்சுகளை வீசுவதைப் பார்க்கிறோம். சி..ஏவுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட மக்களும் பெருமளவில் சுடப்பட்டதும் மோசமாய் தாக்கப்பட்டதும் கூட அவர் ஆளும் மாநிலத்தில் தான். தேர்தல் பிரச்சாரத்தில் 48 வினாடிகள் அவர் பேசினால் அதில் 9 தடவை பாகிஸ்தான் எனும் சொல்லை குறிப்பிடுகிறார் என்கிறார்கள். 2005இல் அவர் 1800 கிறித்துவர்களை இந்து மதத்துக்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014இல் அஸாம்கர்ஹில் பேசும் போதுஅவர்கள் ஒரு இந்துப்பெண்ணை கவர்ந்தால் நாம் 100 இஸ்லாமியப் பெண்களைக் கவர்வோம். அவர்கள் ஒரு இந்துவைக் கொன்றால் நாம் நூறு இஸ்லாமியரைக் கொல்வோம்என்றார். உடனே கேட்டு நின்ற கூட்டம்கொல்லுவோம் கொல்லுவோம்என உரக்கக் கத்தியது. 2014இல் அவர் பேசும் போது கௌரி, கணேஷ் மற்றும் நந்தியின் சிலைகளை ஒவ்வொரு மசூதியிலும் நிறுவுவோம் எனச் சொன்னார். சூரிய நமஸ்காரம் பண்ண விரும்பாதவர்கள் கடலில் மூழ்கி சாகட்டும், யோகா பண்ண விரும்பாதவர்கள் இந்துஸ்தானை விட்டு வெளியேறட்டும் என்றார். 2015இல் அவர் நடிகர் ஷாருக்கான் பேசுவதும் தீவிரவாதி ஹபீஸ் சயித் பேசுவதும் ஒரே மொழியே என்றார். அவர் தனது நோக்கமே .பியையும் இந்தியாவையும் ஒரு இந்து ராஷ்டிரமாக்குவது என சூளுரைத்தார். 2010இல் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்த யோகி பெண்கள் ஆண்களின் இயல்பைப் பெற்றால் அவர்கள் அரக்கிகள் ஆகி விடுவார்கள் என்றார்.


வெகு அண்மையில் பேசும் போது அவர் தெருவில் போராடும் மக்களுக்கு சொற்களின் அர்த்தம் புரியாவிட்டால் துப்பாக்கி ரவைகளின் அர்த்தம் புரியும் எனச் சொல்லி உள்ளார். இந்தஅற்புதக்கருத்துக்களை நான் பட்டியலிடக் காரணம் வேறெந்த இந்துத்துவ தலைவர் / முதல்வரையும் விட யோகி தன்னை தனியாக கொடூரமானவராகக் கட்டமைத்து வருவதை சுட்டிக் காட்டவே. அதாவது வேறு காவித் தலைவர்கள் பேசுவதற்கு சற்று தயங்குகிற மொழியில் இவர் புகுந்து விளையாடுகிறார். ஒரு தெலுங்கு பட வில்லன் கூறும் வசனங்களை தான் அணிந்துள்ள காவி உடை குறித்த கூச்சம் இல்லாமல் பேசுகிறார். ஆனால் அவர் சாதாரண வில்லன் அல்ல; மதவாதி வேடம் பூண்ட வில்லன் அல்ல. அவர் துறவாடை அணிந்த வித்தியாசமான வில்லன். நம் அரசியல் வரலாற்றில் இப்படியான ஒரு பாத்திரம் இதுவரை ஏற்பட்டதில்லை.
 இப்பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் யோகியின் அறியாமை, முரட்டுத்தனம், தடித்தனத்தின் விளைவானது என நாம் பார்க்கக் கூடாது. ஒரு அரசியல்வாதி தன் ஒவ்வொரு சொல்லையும் தன் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தான் உதிர்ப்பான். அவன் மிக மிக கவனமாகவே தன் பிம்பத்தை கட்டமைப்பான். யோகியின் இந்த அதீத வன்முறை பிம்பம் என்பது அவர் தெள்ளத்தெளிவாக கடந்த இரு பத்தாண்டுகளாக “செங்கல் செங்கல்லாக” வைத்து கட்டி அமைத்தது. அவரது இந்த உக்கிர சொரூபம் என்பது ஒரு சாமியார்-அரசியல்வாதி என்பதாலே கூடுதல் உக்கிரம் பெறுகிறது. இது வினோதமானது, ஆனால் உண்மை.
 ஒரு திரைப்படத்தில் பிம்பங்கள் ஒன்றின் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன - ஒரு ஆண் துப்பாக்கியுடன் நிற்கிறான், பேண்ட் சட்டை அணிந்த ஒரு பெண் துப்பாக்கியுடன் நிற்கிறாள், சேலையில் ஒரு பெண் துப்பாக்கியுடன் நிற்கிறாள், காவி உடையில் ஒரு பெண் துப்பாக்கியுடன் உக்கிரமாக பார்த்து நிற்கிறாள். இந்த கடைசி பிம்பம் தான் ரொம்ப தாக்கம் செலுத்துவதாக இருக்கும்; ஏனென்றால் அதில் ஒரு உள்முரண் உள்ளது - ஒரு பெண் துப்பாக்கி ஏந்துகிறாள் எனும் முரணுக்குள் சேலையணிந்த சாத்விகப் பெண் துப்பாக்கி ஏந்துகிறாள் எனும் கூடுதல் முரண் வந்தமர்கிறது. இதனுள் காவியாடை  அணிந்த துறவி துப்பாக்கி ஏந்துகிறாள் என்பது முரணுக்குள் முரணாக பொதியப்பட்டு தோன்றுகிறது. இப்போது பெண்ணின் இடத்தில் ஆண் துறவியை வையுங்கள். அதே தாக்கம் பலமடங்காக அமையும்.
 அமைதியாக சாத்வீகமாகத் தோன்றக் கூடியவரின் கோபமான பேச்சு நம்மை அதிகமாகத் தாக்கும். மேலும் ஒரு துறவியின் கோபம் எப்போது தனிப்பட்ட நோக்கத்தில் ஆனதாய் பார்க்கப்படாது. சமூகத்துக்காக, பண்பாட்டுக்காக, தான் நம்பும் ஒரு மேம்பட்ட கொள்கைக்காக அவர் கொதிப்பதாகவே மக்கள் பார்ப்பார்கள். மேலும் நமது கீதை சொல்வதென்ன? பற்றற்றவன் கொலை செய்தால் அது கொலை அல்ல, அது உன்னதமானது, அது ஆத்மீகமானது, அது விடுதலை மார்க்கமானது; அப்படித் தான் அர்ஜுனனின் கொலைகளை, உறவுகளைக் கொல்லும் பாதகங்களை கிருஷ்ணர் மகிமைப்படுத்துகிறார். நமது அரசியல் களத்தில் யோகி தான் நவீன அர்ஜுனன். அவரது கோபாவேசம் தூய்மையானதானதாக, அவரது சொற்களில் மினுக்கும் குற்ற மனப்பான்மை யோக்கியமானதாக பெருவாரியான வாக்காளர்களுக்கு தொனிப்பது சுலபம். அவரது கோபாவேசம் கூடுதலான கூர்மையும், தாக்கமும் பொருந்தியதாக, அச்சமூட்டுவதாக தொனிப்பதும் சுலபமே.
 வேறெந்த அரசியல் தலைவரையும் விட யோகியால் எந்த வன்முறைப் பேச்சையும் பேசி விட்டு அதன் பாவக்கறை தன் மேல் படியாமல் தாண்டி சென்றுவிட முடியும். ஏனெனில் அவர் சாதாரண பிரஜையோ சட்டத்துக்கு உட்பட்ட எளிய மனிதனோ அல்ல. அவர் ஒருயோகி”, ஒருதுறவி”, சமூகத்தின் விளிம்பில் இருப்பவர். அவருக்கு சமூகத்தின் நீதிநெறிகள் பொருந்தாது என நமது இந்திய கூட்டு மனம் நம்புகிறது. அதேநேரம் இவர் ஒரு முதல்வராக இருப்பதால் ஒரே சமயம் மதத்தின் தொல்நம்பிக்கைகள் தரும் பாதுகாப்பும், சட்டத்துக்கு அப்பாலான அதிகாரமும், அந்த சட்டத்தை கையில் வைத்து சிலம்பமாடும் தகுதியும் படைத்தவர் ஆகிறார் (இதே தர்க்கம் தான் கார்ப்பரேட் சாமியார்களுக்கும் உதவுகிறது. அவர்கள் கொள்ளையடித்தால் அது கொள்ளை அல்ல. அவர்கள் பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் அல்ல. அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்கள் குற்றவாளிகள் அல்ல).
 யோகி ஒரு சராசரி முதல்வரும் அல்ல, அரசியல் தலைவரும் அல்ல, அவர் ஒரு சராசரி துறவியும் அல்ல. இது தான் யோகி எனும் ஆபத்தான கலவை பிம்பம்
யோகி ஆட்சி செய்யும் பாணியையும் நாம் கவனிக்க வேண்டும். இப்போதைக்கு .பியில் அவர் பின்பற்றுவது மோடியின் பாணி - 36 அமைச்சர்களின் பொறுப்புகளை முதலவராக ஒரே ஆள் அவர் கையில் வைத்திருக்கிறார். அதாவது அங்கு ஒட்டுமொத்த அமைச்சரவையும் முதல்வர் தான். மோடியின் ஒற்றைப்புள்ளி அதிகார மையமாக்கலின் ஒரு கற்பனைக்கப்பாலான வடிவமாக யோகி தன்னைக் காட்டிக் கொள்கிறார். New York Times பத்திரிகையின் கண்ப்புப்படி 2024இல் இந்திய பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்த சாத்தியமுள்ளவர் யோகி. அதாவது அமித் ஷாவின் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ் அதிருப்தியானால் அவரை விட அதிக வெடிமருந்துக் கொள்ளளவு கொண்ட ஆயுதக்கிடங்காக யோகி இருப்பார்.

 அமித் ஷா என்பவர் மோடி 2.0 என்றால் யோஷி 3. 0. மோடி கைத்துப்பாக்கி என்றால் ஷா மெஷின் கன். ஆனால் யோகி ஒரு அணு குண்டு. ஷாவின் பிரசித்தம் (கட்சிக்குள்ளோ மக்களிடையிலோ) குறைவதாக ஆர்.எஸ்.எஸ் நினைத்தால் அவரை விட மோசமான ஆயுதத்தையே அடுத்து கையில் எடுக்கும். அது யோகியாகவே இருக்கும். அந்த தருணத்துக்காகவே யோகி தன்னை இத்தனை ஆண்டுகளாக கூர்தீட்டி வருகிறார். யோகி பிரதமர் ஆகும் நாள் ஒன்று வருமானால் அன்று இந்த தேசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் சென்று விடும். அன்று நாடு முழுக்க பொருளாதாரம், முன்னேற்றம், வளர்ச்சி (சமத்துவம், மதசார்பின்மை ஆகியவற்றை எல்லாம் நான் கணக்கில் கொள்ளவே இல்லை) ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டு விதவைகளை சிதையில் இட்டு எரிக்கு சதி போன்ற பிற்போக்கு வழமைகள் முன்னெடுக்கப்பட்டாலும் நாம் ஆச்சரியப்பட தேவையிருக்காது. ஆர்.எஸ்.எஸ் மையத்தின் ஒரு பிரச்சனை அது - நாம் அவர்களின் தேர்வுகளில் ஒவ்வொருவரையாய் நிராகரிக்கையில் அவர்கள் மேலும் மேலும் மோசமான வதைக்கருவிகளை நம் முன் நீட்டுவார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தியலை மொத்தமாய் நிராகரிப்பதே இப்போது மக்கள் முன்புள்ள ஒரே வழி

நன்றி: உயிர்மை.காம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.