பேட்டியாளர்: சாத்தான்குளம் படுகொலைகளைப் பற்றி ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியாக என்ன நினைக்கிறீர்கள்?
‘சிங்கம்’ அண்ணாமலை: அது வருத்தத்துக்கு உரியது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் டாக்டர்களும் காவலர்களுமே மிக அதிகமாய் - 18 மணிநேரங்கள் - வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இப்படியான கொலைகளுக்கு வழிவகுக்கிறது.
நம் கேள்வி: சரி, ஏன் இந்த டாக்டர்கள் தம்மிடம் வரும் நோயாளிகளை செவியலருடன் சேர்ந்து தப்பான மருந்துகளை அளித்தோ அறுவைசிகிச்சை கத்தியால் கழுத்தை அறுத்தோ கொல்வதில்லை? அவர்களும் தானே கடும் நெருக்கடியில் 18 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.
எத்தனையோ பி.பி.ஓ ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் கடுமையான அழுத்தத்தில் 18 மணிநேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் ஏன் கொல்லுவதில்லை?
எத்தனையே குடும்பப் பெண்கள் விடிகாலையில் எழுந்து சமைத்து வைத்து, டப்பா கட்டி, குளித்து, தயாராகி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி, அவசரமாய் ஓடி பேருந்தைப் பிடித்து அங்கு 8 மணிநேரம், பயணத்தில் 2 மணிநேரம், மாலையில் திரும்பவும் சமையல், வீட்டை ஒழித்து கட்டுவது, பாத்திரம் தேய்ப்பது என மேலும் நான்கு மணிநேரமாவது வேலை செய்கிறார்கள். கணக்குப் போட்டுப் பார்த்தால் எப்படியும் 18 மணிநேரம் வருகிறது. இப்பெண்கள் ஏன் தம் கணவர்களை சித்திரதை செய்து போட்டுத் தள்ளுவதில்லை?
மலம் அள்ளும் தொழிலாளர்கள் போலிசாரை விட மோசமான பணிச்சூழலில் மலக்கிடங்கில் இறங்கி நீண்ட நேரம் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் ஏன் கொலை செய்வதில்லை?
நாங்கள் யாரும் செய்யாத கொலைகளை செய்வதற்கு போலிசாருக்கு மட்டும் எப்படி சிறப்புரிமை, அனுமதி கிடைக்கிறது? அதைத் தருவது யார்? கர்நாடகாவில் போராடும் மக்களை நோக்கி “அடேய், இப்போ இடத்தை காலி பண்ணலேன்னா பல்லை உடைப்பேன், ரேஷன் கார்டுகளை ரத்து செய்வேன்” என மிரட்டிய, போலிசாரிடம் மக்கள் அடங்கிப் போகாவிட்டால் வேலைக்காகாது என வெளிப்படையாகவே ஊடகங்களிடம் சொல்லும் உங்களைப் போன்ற அதிகாரிகளா?
‘சிங்கம்’ அண்ணாமலை: மேலும், போலிசாரின் குடியிருப்புகள் மிகச்சின்னதாக உள்ளன. அவர்களுக்கு பெரிய வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என நானே பல அரசியல் தலைவர்களிடம் வேண்டியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை மதிக்கவில்லை.
நம் கேள்வி: இந்தியாவில் கணிசமான மக்களுக்கு குடியிருக்க இடங்களோ குடிநீர் வசதியோ ஏன் கழிப்பறை கூட இல்லை. எத்தனையோ மக்கள் ஒண்டுக்குடித்தனங்களில், சேரிகளில், குடிசைகளில், நடைபாதைகளில் வசிக்கிறார்கள். அவர்கள் லத்தியுடன் சென்று எளிய வியாபாரிகளிடம் மாமூல் வசூலிக்கிறார்களா? சந்தேகத்தின் பெயரில் பிடித்துப் போய் எளிய மக்களை சித்திரவதை செய்கிறார்களா?
இதை செய்வது ஒரு சில போலிசாரே என சொல்லாதீர்கள் - ஏனென்றால் மாமூலும் கஸ்டடி வதையும் ஒவ்வொரு காவல் நிலையத்தின் நடைமுறையிலும் உள்ளவை. இவை இல்லாத காவல் நிலையங்களே இல்லை.
இந்த காவலர்களை விட கடும் துன்பங்களில் மூழ்கியுள்ள பல கோடி இந்தியர்கள் ஏன் பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் ஈகோவுக்காகவும் மக்களை மிரட்டுவதோ துன்புறுத்துவதோ மாமூல் வாங்குவதோ இல்லை. உடனே ரௌடிகள் இருக்கிறார்களே என வாதிடாதீர்கள் - எந்த ரௌடியும் தான் மனநெருக்கடியில், பதற்றத்தில் ரௌடியானதாய் இதுவரை சொன்னதில்லை.
ஒரு கொடுங்குற்றத்தைப் பற்றி பேச்சு வரும் போது உடனே பாதிக்கப்பட்ட மக்களை விட்டுத் தாவி குற்றமிழைக்கும் தரப்பினரின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச எவ்வளவு திமிர்த்தனம் வேண்டும்! போலீஸ் வேலையை விட்டுவிட்டாலும் மனதளவில் நீங்கள் இப்போதும் பொதுமக்களை விரோதியாக பாவிக்கும் ஒரு போலீஸ்காரர் தான் போல. நீங்கள் ரஜினி என்கிற பாசிஸ்டுடன் கைகோர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. நாங்கள் ஏன் உங்களை எல்லாம் கர்நாடகாவுக்கு துரத்தாமல் விட்டிருக்கிறோம் என்பதில் மட்டுமே எங்களுக்கு ஆச்சரியம்!
