Skip to main content

அந்த டீ எங்கே கிடைக்கும் பாஸ்?

(பேஸ்புக்கில் நண்பர் லஷ்மி சரவணகுமார் எழுதியதற்கு ஒரு பதில்) 

அன்புள்ள லஷ்மி சரவணகுமார்,

14 வருடங்களாக எழுதி வருகிறேன். எனக்கு யாராவது என்றாவது ஒருநாள் ‘ராயல்டி’ கொடுக்கும் போது உங்களுக்கும் அந்த ‘டீயை’ வாங்கித் தருகிறேன். அதுவரைப் பொறுக்கவும்!

உங்களுக்கு ஏற்கனவே அந்த டீ கிடைக்கிறதெனில் எனக்கும் கொஞ்சம் ஊற்றித் தரவும். 


தமிழில் மிக மிகச்சிலர் மட்டுமே ராயல்டி வாங்குகிறார்கள். மிக மிகப் பெரும்பாலானோர் எதுவுமே வாங்காமல் நீண்ட காலமாய் எழுதுகிறார்கள். நீங்கள் இப்படி பதிவிட்டு அசிங்கப்படுத்தாதீங்க. இந்த பிரச்சனை எழும் போதெல்லாம் தமிழ் எழுத்தாளன் ஒரு பிச்சைக்காரன் எனும் எண்ணம் வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் எழுகிறது; அவர்களில் ஒரு பகுதியினர் இதை உள்ளூர ரசிக்கிறார்கள் வேறு எனத் தோன்றுகிறது. அதனாலே இந்த ‘ஒப்பாரியில்’ நான் கலந்து கொள்வதில்லை. எத்தனையோ இளம் இயக்குநர்கள் நம்மிடம் ஓசியில் திரைக்கதையை எழுதி வாங்கிக் கொண்டு அப்பீட் ஆவதில்லையா? ஏனென்றால் பணமில்லை, படத்தை துவங்க வழியில்லை என்பார்கள். என்ன செய்ய முடியும், அப்படியே விட்டு விடுவதைத் தவிர? எப்போதுமே வறிய பகுதிகளில் இப்படி நீதி, அநீதி பேசுவதில் அர்த்தமிருக்காது.


மூன்று விசயங்கள்:


1) உயிர்மை பஞ்சாயத்தில் என்னை இழுக்காதீர்கள். அது என் வேலையல்ல.


2) பல பதிப்பகங்கள் மோசமான நிலையில் உள்ளன. புத்தகங்களை பாதுகாத்து வைக்க இடமில்லாமல் தவிக்கிறார்கள். வருகிற லாபம் பராமரிப்பு, அன்றாட செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது என அவர்கள் புலம்புவது உங்களுக்கும் தெரிந்திருக்கும். (இன்றுள்ள நிலையில், உயிர்மை மட்டுமல்ல ராயல்டி தராதது.)

 நூலக ஆர்டர் வாங்கும் பதிப்பகத்தார் மட்டுமே செழிக்கிறார்கள். ஆனால் அதற்கு பல லட்சம் லஞ்சம் கொடுக்க திராணி வேண்டும். புத்தகத்தை விற்று ஊரை அடித்து கொழித்திருக்கிறார்கள் என நீங்கள் சொல்வது மிகை. நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

என்னுடைய ஒரே அதிர்ஷ்டம் இதுவரை பணத்தைக் கொடுத்து பதிப்பிக்க நேர்ந்ததில்லை என்பதே. ஆனால் பெரும்பாலான இளைய எழுத்தாளர்களின் நிலை அதுவே - அவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

தமிழில் தொடர்ந்து இப்படி எழுதுவதன் ஒரே அனுகூலம் பதிப்பாளர்களே நம்மிடம் புத்தகம் போடக் கோரும் சிறிய திருப்தி மட்டுமே.

இப்போதைக்கு இந்த பிரச்சனை உள்ளோர் கிண்டிலில் தாராளமாய் பதிப்பிக்கலாம் - பணம் கேட்காமலே வந்து கணக்குக்கு விடும். இல்லாவிட்டால், பதிப்பாளரிடம் பிரதியைக் கொடுக்குமுன்பே முன் தொகையாக வாங்கிக் கொள்ளலாம் - இதை உங்களுக்கு சொல்லவில்லை. இதைப் படிக்கிற இளம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமே சொல்கிறேன். 

‘புத்தகம் விற்கவில்லை, நீ எனக்குப் பணத்தைக் கொடு’ என எழுத்தாளனிடம் பதிப்பாளன் அடித்துப் பிடுங்கும் நிலை எதிர்காலத்தில் வரக் கூடாது என பிரார்த்திக்கிறேன். 

3) உங்கள் வருத்தம் புரிகிறது. அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Comments