2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதை (“செல்லாத பணம்” நாவலுக்காக) இமையம் பெறுகிறார் என அறிந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அண்ணனுக்கு வாழ்த்துக்களும் பேரன்பும்!
தமிழ் இலக்கிய சூழலில் இமையத்துக்கு என சில தனிச்சிறப்புகள் உண்டு.
1) பேசுபொருளே பிரதானம் எனும் ஒரு நிலைப்பாடு பொதுவாக பல புனைவெழுத்தாளர்களுக்கு உண்டு. நாவல்களின் பின்னட்டையிலும் விமர்சனங்களிலும் யாரும் பயணிக்காத ஒரு புதிய களத்தில் இந்நாவல் புகுந்து புறப்படுகிறது என சிலாகிப்பு இருக்கும். ஆனால் இமையம் அதற்கு ஈடாக புனைவுமொழியின் தொழில்நுட்பம் குறித்த அக்கறைகள் கொண்டவர். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்டு தன் நாவலை திருத்தி கச்சிதமாக உருவாக்குபவர். இது சார்ந்து இளம் எழுத்தாளர்களுக்கு உதவ முன்வருபவர்.
2) இமையத்தின் புனைவுகளில், குறிப்பாக நாவல்களில், பல்குரல் தன்மை உண்டு. இது பலவித பாத்திரங்களை பேச வைப்பதில்லை. மாறாக நாவலுக்குள் இயங்கும் நான்கைந்து முக்கிய பாத்திரங்களின் தனித்துவமான் உலகங்களை அவர்களுடைய உரையாடல்கள், எண்ண ஓட்டங்கள் வழி உருவாக்கி அவை ஒன்றுக்கொன்று சோடை போகாதபடி பார்த்துக் கொள்வது. நாவல் கச்சிதமாக அமையும் போது கதைசொல்லியான பிரதான பாத்திரத்துக்கு ஈடாக ஒரு துணைப்பாத்திரத்தின் நியாயங்களும் உலகமும் இருக்கும். சட்டென ஒரு யு-டர்ன் எடுத்து அவரது பார்வையில் இருந்து மொத்த நாவலையும் திரும்பப் படிக்க முடியும். அவரது மிகப்பிரபலமான படைப்பான “பெத்தவனின்” சிறப்பு இதுதான். ஆங்கிலத்தில் இலக்கிய கோட்பாட்டாளர்கள் இதை dialogism என்கிறார்கள். குறிப்பாக மிகைல் பக்தின் இந்த சமநிலையிலான கதையுலகங்கள் தஸ்தாவஸ்கியின் நாவல்களில் ஒரு படைப்புக்குள் நிகழும் போது அது ஒன்றையொன்று எப்படி மோதி அழிக்கிறது, ஒரு திக்கற்ற நிலையை ஏற்படுத்துகிறது என விரிவாக விவாதித்துள்ளார். நான் வாசித்த வரை இந்த எழுத்துமுறையில் தமிழில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது இமையம் மட்டுமே. மற்ற எழுத்தாளர்களுக்கு வசனம், உரையாடல், எண்ணவோட்டம் போன்றவை ஒரு கருத்தை, உணர்ச்சியை சொல்வதற்கான கருவி. ஆனால் இமையத்துக்கோ அவை ரத்தமும் சதையுமான இருப்புகளை, முன்னுக்குப் பின் முரணான இருப்புகளை உருவாக்குவதற்கான ஒரு ஆயுதம்.
3) நகைமுரண் - நகைமுரண் என்பது ஒன்றை சொல்லி இன்னொன்றை முரணாக உணர்த்துவது மட்டுமல்ல. இலக்கியத்தில் அது மொழியை, கதைசொல்லியின் கோணத்தை மிக நுட்பமாக போகிற போக்கில் தலைகீழாக்குவதும் தான். ஜெயமோகனின் “அறம்”, “பல்லக்கு” போன்ற கதைகளில் இது நேரடியாக இருக்கும். ஆன ல் சு.ரா (“பல்லக்கு தூக்கிகள்”), புதுமைப்பித்தன் போன்றோர் இதில் வித்தகர்கள் என்றாலும் தன் உணர்ச்சிகரமான கதைகளில், நாவல்களில் இமையம் நகைமுரணை தொழில்படுத்தும் விதம் சிலாக்கியமானது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் “பெத்தவன்” குறுநாவல். அதிலுள்ள நகைமுரண் மிக மிக நுணுக்கமாக இருந்ததால், அது புரியாததாலே அது வெளிவந்த சமயம் அவர் பெண்ணியவாதிகளால் விமர்சிக்கப்பட்டார்.
4) இன்று தமிழில் பெரிதாகக் கொண்டாடப்படும் படைப்பாளிகளின் நாவல்களில் உபரியாக பல பக்கங்கள் இருக்கும். ஆனால் இமையத்தின் நாவல்களில் ஒரு சிறிய விவரணை, வசனத்தை கூட சுலபத்தில் நீங்கள் தூக்க முடியாது (அப்படி எடுக்க முடிந்தால் அவரது பிரயத்தனத்துக்குப் பின்பும் அது சரியாக எழுதப்படவில்லை எனப் பொருள்). அவ்வளவு கச்சிதமாக இருக்கும்.
5) இமையம் எந்த குழுவாதத்தையும் மேற்கொள்ளாமல், எந்த இலக்கிய மடாதிபதிகளையும் ஜால்ரா அடிக்காமல் தன் எழுத்து திறன், கலை நேர்த்தி, சமூக அக்கறையை மட்டுமே நம்பி இயங்குபவர். நன்றாக எழுதினால் எழுத்து தான் வாசகனைப் போய் அடையும், அதற்கு யாருடைய பரிந்துரையும், இதழ்களின் ஆதரவும் தேவையில்லை என்பது அவருடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கையே இப்போது வென்றிருக்கிறது.
6) அவரே கோரிக் கொள்ளாத போதும் நாம் அவரை ஒரு ‘தலித்’ எழுத்தாளராக மட்டுமே சுருக்கிக் கொள்வதில் நியாயமில்லை. அவர் ஒரு உன்னதக் கலைஞன். டாட்.