முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மறுபிறவியும் இப்பிறவியும்

இதைப் படிக்கிற உங்களில் பலருக்கும் மறுபிறவியில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய பொதுசமூகம் மறுபிறவியை வலுவாக நம்புகிறது. பாவ, புண்ணியங்களின் தொடர்ச்சியை நம்பியபடியே அந்த சங்கிலியில் பட்டுவிடாமல், பரிகாரம் பண்ணி தப்பித்து விடலாம் என நம்புகிறது. ஆனால் அது பிரச்சனையில்லை. பிரச்சனை ஏன் நமக்கு மறுபிறவி தேவைப்படுகிறது என்பதே. அக்கேள்வியையே இங்கு பரிசீலிக்கப் போகிறோம்: நமக்கு ஏன் இந்த பிறவி போதுமானதாக இல்லை? இந்த பிறவியுடன் வாழ்க்கை முடியும் என்பது நம்மை ஏன் அவ்வளவு பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது?

 நாகார்ஜுனரின் மகாயான பௌத்தம், அவர் தனதுமூலமத்யமகாகாரிகைநூலில் கூறுவது படி, மறுபிறவி மட்டுமல்ல எந்தவொரு சாராம்சமான தொடர்ச்சியையும் ஏற்கவில்லை. ஆகையால் அவர் பல அத்தியாயங்களில் காரண-விளைவு தர்க்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறார். அவர் விதையில் இருந்து செடி முளைப்பதை உதாரணமாக காட்டுவதில் விருப்பம் கொண்டவர். விதை தன்னளவில் செடிக்கு உருவம் கொடுப்பதில்லை என்பதற்கு பல தர்க்க நியாயங்களை தருகிறார். அவர் அவ்வளவு பிரயத்தனப்படுவதற்கு காரணம் நாம் மறுபிறவி குறித்த நியாயங்களை பொதுவாக அன்றாட வாழ்வில் காணும் பொருட்களில் இருந்தே எடுத்துக் கொள்கிறோம், அதனால அன்றாட வாழ்வை சாராம்சமற்றதாக பார்க்க மக்களுக்கு பயிற்சி அளித்தால் அவர்கள் இருப்பு குறித்த, மறுபிறவி குறித்த பெரிய கேள்விகளை இயல்பாகவே எதிர்கொள்வார்கள் என அவர் நம்புகிறார் என்பதே.


மறுபிறவிக்கும் இந்த பிறவிக்குமான உளவியல் தொடர்பு என்ன?

மனிதனின் முதன்மையான பிரச்சனை மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதே. அவனுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவனுக்கு தூக்கத்தில் என்ன நடக்கிறது என்பதும் தான் தெரியாது, ஆனால் தூக்கத்தில் இருந்து தவறாது விழிக்க முடியும் என்பதால் அது அவனை பெரிதாக தொந்தரவு செய்வதில்லை. மரணம் ஒரு புதிரான முடிவு. முயலாவிட்டாலும் கூட அவனுக்குள் அது குறித்த ஒரு பயம் இருந்தபடியே இருக்கிறது. அது பேய் குறித்த பயமாகிறது. பேயை யாருமே பார்த்ததில்லை, நம்புவதும் இல்லை, ஆனால் எல்லாருமே பயப்படுகிறோம். மரணத்தையும் யாரும் பார்த்ததில்லை, நம்புவதும் இல்லை, ஆனால் எல்லாரும் அதைப்பற்றி பயப்படுகிறோம். மறுபிறவி நம்பிக்கைகள் இந்த பயத்தை ஈடுகட்ட ஓரளவுக்கு உதவுகின்றன.


மறுபிறவிக்கும் நமது சாராம்சமான இருப்புக்குமான தொடர்பு என்ன?


சாராம்சமான இருப்பு என்றால் அதுநான் இப்போது என்னளவில் நானாக சிந்தித்த கருத்துக்களை உங்களிடம் பகிற்கிறேன், இவை என்னுடைய எழுத்துக்கள்’ என நம்புவதில் இருந்து ஒரு டீயும் வடையும் சாப்பிடும் போதுஇது என்னளவில் சுவையாக இருக்கிறது’ என நினைப்பது வரை இருக்கிறது. அடுத்து, டீயை அருந்தியதும் வயிறு இளகி எனக்கு கழிப்பறை செல்லும் விழைவு ஏற்படுகிறது. ஏன் இந்த விழைவு என்று கேட்டால் நான் டீ அருந்தியதால் என்று பதில் அளிப்பேன். அது மட்டும் தானா என்று கேட்டால் நான் உணவு உண்டதால், என் உடல் அதை செரித்ததால், நான் ஆரோக்கியமாக இருப்பதால், அது இயற்கை என்பதால் என பல காரணங்களை அளிப்பேன். இப்படி நான் சிந்திக்கிறேன் என்பதில் இருந்து நான் மலம் கழிக்கிறேன் என்பது வரை பல சாராம்சமான கருத்துருக்கள் உள்ளன. (இவை சாராம்சமற்றவை என்பதை நாகார்ஜுனர் தர்க்கம் வழியாக நமக்கு கட்டுடைத்து காட்டுகிறார்.) இப்போது மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது எனக் கேட்போம்.


 எனக்கோ உங்களுக்கோ அதற்கு பதில் தெரியாது. சாராம்சமற்ற இருப்பற்ற ஒன்று மரணத்திற்குப் பின்பு இருக்கிறது என நாம் அதனால் நாம் கருதுவோம். இங்கு மற்றொரு சிக்கல் வருகிறது. நான் நிறைய படித்து, யோசித்த பின்னர் அது என் சிந்தனையாகி என் எழுத்து வழி உங்களிடம் வந்து சேர்கிறது. நாம் வயிறு முட்ட சாப்பிட்ட பின் அது நம் இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல் வழியாக சென்று, பல்வேறு உருமாற்றங்களுக்கு உள்ளாகி நம் ஆசனவாய் வழி வெளியாகிறது. ஒவ்வொரு நிலையையும் ஒரு செயல் சாத்தியமாக்குகிறது. இதை நாம் வலுவாக நம்புகிறோம். இப்போதுஒரு கருத்தோ உணவோ முழுக்க காணாமல் போவதில்லை, அது எப்படியோ ஏதோ ஒரு வடிவை எடுத்து இந்த உலகில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதே போல நாம் செய்யும் நன்மை, தீமையும் இப்படியே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது, நமது இருப்பும் இவ்வாறே அழியாமல் நிலைக்கிறது’ என நம்புகிறோம். ஒன்றின் காரணமும் விளைவும் இப்படித்தான் நமது இருப்பின் அடித்தளமாக விளங்குகிறது. ஒருவர் எந்த அடிப்படை படிப்பறிவும் அற்றவர் என்றாலும், அவர் சாலையில் போகும் போது ஒருவர் திடீரென குறுக்கே வந்துநான் ஆகாயத்தில் இருந்து சற்றும் முன்னர் தான் கீழே விழுந்து இந்த உலகுக்கு வந்தேன் ஐயா, இது என்ன ஊர், நீங்கள் எல்லாம் யார்?” என்று சொன்னால்போய்யா லூசுஎன்றே அதற்கு பதில் சொல்லுவார் அல்லவா. ஏனென்றால் காரண, விளைவு சிந்தனை பாணி நமது சமூகத்தின் எல்லா தளங்களிலும் ஆழமாக பரவி உள்ளது. (அதை வைத்து தான் சாதி, மரபான உரிமைகள், அதிகாரம் பற்றின நம்பிக்கைகள் தோன்றுகின்றன.)


இந்த காரண-விளைவு தர்க்கத்துக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குவது மரணம் மட்டுமே. விதையில்லாமல் ஒரு சிறு கல்லில் இருந்து செடி முளைக்காது தானே. தோற்றக் காரணத்துக்கும் விளைவுக்கும் ஒரு பொதுவான அம்சம் இருந்தே ஆக வேண்டும் என்பது நாம் நம்பும் விதி. நான் எழுதும் இந்த எழுத்துக்கள் அவற்றை சேர்த்து படிக்கும் உங்கள் மனத்துக்குள் ஒரு சொல்லாக திரண்டு, அச்சொற்கள் சேர்ந்து ஒரு வாக்கியமாகி, அது ஒரு கருத்தாகவோ உணர்வாகவோ மாறும், ஆனால் ஒருபோதும் இந்த எழுத்துக்கள் பட்டாம்பூச்சிகளாகி இந்த கணினித்திரையில் இருந்து பறந்து போகாது. தண்ணீரை கொதிக்க வைத்தால் அது பாலாகாது. பாலை கொதிக்க வைத்தால் அது கல்லாகாது. கல்லை உடைத்தால் அது ஒரு பூவாகாது. இதை நாம் ஏற்கும்பட்சத்தில் வாழ்தல் எப்படி மரணமாகிறது, இருப்பு எப்படி இருப்பின்மை ஆகிறது? இது முரண் அல்லவா? காரண விளைவு தர்க்கப்படி வாழ்வுக்கு பின்னும் வாழ்வு போல ஒன்று இருந்தாகத் தானே வேண்டும்? அது இல்லை என்பது காரண விளைவு தர்க்கத்தின் மீது காறித் துப்பும் செயலாகிறது. இது நமது இருப்பு குறித்த அடியாதாரமான நம்பிக்கையை சீர்குலைத்து விடுகிறது. எப்படி?


மீண்டும் காரண-விளைவு தர்க்கத்துக்கே வருவோம். நீரை கொதிக்க வைத்தால் ஆவியாகிறது. ஆவியை குளிர வைத்தால் நீராக திரும்ப மாறுகிறது. கல்லை உடைத்தால் கற்துகள்கள் ஆகி விடும். நான் தேர்தலில் அளிக்கும் வாக்குக்கு தேர்தல் விதிமுறைப்படி, மக்களாட்சி நடைமுறைப்படி ஏதோ ஒரு சிறிய விளைவோ இருந்தாக வேண்டும். அதனாலே நான் வாக்களித்து ஆட்சிக்கு வந்ததாக நான் நம்பும் ஒரு எம்.எல்.ஏவோ அமைச்சரோ ஏமாற்றமளித்தால் எனக்கு வருத்தமோ கோபமோ வருகிறது. அவர் வெறும் எம்.எல்.ஏவோ அமைச்சரோ அல்ல அவர் என் வாக்கும் அல்லவா? எனக்கு ஒரு பெண்ணுக்கும் உடல் உறவு ஏற்பட்டு அப்பெண் கருத்தரிக்கிறாள். என் குழந்தையை சுமக்கிறாள். நான் காரணம், அக்குழந்தை, என்னுடைய செயலின் விளைவு. என் கடைசிக்காலம் வரை அந்த தொடர்பை யாரும் மறுக்க முடியாது. சரி இப்படி எல்லாமே கோவையாக செல்லும் போது மரணத்தில் இருந்து இதே போல வாழ்தலை திரும்ப பார்க்க முடியுமா?  ‘என் வாக்கே நீ’ என ஒரு பிரதிநிதியை நோக்கி சொல்வதைப் போல, ‘என் உடம்பின் பகுதியே நீ’ என என் குழந்தையை நோக்கி கோருவதைப் போலஎன் இருப்பின், வாழ்தலின் விளைவே நீ’ என மரணத்தை நோக்கி என்னால் சொல்ல முடியுமா? சொன்னோம் என்றால் மரணமும் வாழ்தலும் ஒன்றாகி விடும். ஒன்றாகி விட்டால் இருப்பும் இருப்பின்மையும் ஒன்றாகி, இந்த வாழ்க்கைக்கு சாராம்சமான எந்த மதிப்பும் இல்லை என்றாகி விடும். நம்மில் பெரும்பாலானோருக்கு அந்த எண்ணமே செருப்பால் அடித்தது போன்ற உணர்வளிக்கும். அதனால் நாம் மறுபிறவியை கெட்டியாக பிடித்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த உடல் ஒரு எந்திரம், அதன் இயக்கம் முடிந்ததும் நாம் செத்து விடுவோம் என அறிவியல்பூர்வமாக பதிலளிப்பவர்கள் கூட அதை ஆழமாக நம்புவதில்லை. நம்பினால் இந்த வாழ்க்கையை கடவுள், சாதி, குடும்பம், வம்சாவளி, மரபு போன்ற வலுவான நம்பிக்கைகளுடன், காரண-விளைவு தர்க்கத்துடன் அவர்களால் வாழ முடியாது.


அதனாலே சொல்கிறேன், மறுபிறவி, மரணம் ஆகியவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாகாது. ஒன்று காரண-விளைவு தர்க்கத்தை உதறி விட வேண்டும், அல்லது மரணத்தைக் கொண்டு விளைவில் இருந்து காரணத்திற்கு சென்று இந்த வாழ்க்கையை சாராம்சமற்றதாக, மரணத்திற்கு இணையானதாக கருதி பரிசீலிக்க வேண்டும். இரண்டுமே இந்த வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து நம்மை விடுவிக்க உதவும்.

கருத்துகள்

STEPHEN இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை தோழர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...