"காகித மலர்களில்" எனக்கு மிகவும் பிடித்த இடம் இது. விசுவம் - அனேகமாக எல்லா ஆய்வாளர்கள், எழுத்தாளர்களையும் போல - அறிவுச் செயல்பாடு, சிந்தனை, அரூபமான படைப்பாக்கம் மீது அவநம்பிக்கை கொள்கிறான். ஏனென்றால் அவை புலனுலகில் இடமற்றவை. அறிவைப் பார்க்க, தீண்ட, நுகர, சுவைக்க முடியாது. எழுத்தை, கற்பனையை ஒரு காற்றைப் போல, ஒரு பெண்ணின் வாசனையைப் போல உணர முடியாது. அவனுக்கு அப்போது தான் சமைக்கும் உப்புமாவே தனது ஆய்வுக் கட்டுரையை விட உண்மையானது, நிச்சயமானது எனத் தோன்றுகிறது. நான் இதை உடற்பயிற்சியின் போது, குத்துச்சண்டை பயிற்சியின் போது உணர்ந்திருக்கிறேன். எழுதும் போது நமக்கு இப்படி வியர்ப்பதில்லை. சூழலுடன், எந்திரங்களுடன், சகமனிதர்களுடன் உறவாடுவதில்லை. அவர்களின் உடல் சூட்டை, வியர்வை நெடியை, வியர்வையில் மினுங்கும் சருமத்தைக் காண்பதில்லை. எழுதும் போதும், சிந்திக்கும் போதும் இந்த உலகிடம் இருந்து வெகுவாக விலகி வேறெங்கோ சஞ்சரிக்கிறோம். முகமற்ற, கைகால்கள் அற்ற, எடையோ, ஸ்பரிசமோ இல்லாத உலகம். அந்த உடலற்ற உலகில் தான் 9-5 வேலையிலும், உரையாடல்களிலும் இருக்கிறோம். நேற்று நான் குத்துப...