முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாதி இனக்குழுக்களில் இருந்து வந்ததா?

"எனக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. மனிதர்களில் உயர்வு, தாழ்வு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஆணவப்படுகொலை தவறானது. ஆரம்பத்தில் நாம் இனக்குழுக்களாக இருந்தோம். அதன் நீட்சிதான் சாதி சங்கங்கள்." - மாலன், ஆனந்த விகடன் பேட்டி

# எனக்கு இந்த பார்வையுடன் உடன்பாடில்லை. இனக்குழுக்கள் ஐரோப்பா, அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்காவிலும் இருந்தன. ஆனால் அங்கே ஏன் சாதியமைப்பு இல்லை? சாதியமைப்பு ஒரு பிரத்யேகமான கருத்தியல் அமைப்பு. அது மொழியை சார்ந்திருக்கும் ஒரு குறியீட்டு அமைப்பு. அது இயற்கையில் இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக அதைக் குறித்த விதிமுறைகளை நாம் ஸ்கிருதிகளில் காண்கிறோம், தொன்மக் கதைகளை இதிகாசங்களில் காண்கிறோம். அம்பேத்கர் இதன் வேர்களை வேதங்களில் கண்டடைகிறார்.

 இங்கு தான் இனக்குழுவுக்கும் சாதிக்கும் சுவாரஸ்யமான வேறுபாடு வருகிறது - ஒரு சூத்திரனும், தலித்தும், பிராமணனும் இருந்ததாக அகழ்வாராய்ச்சியில் கண்டறிய முடியாது, ஆனால் எழுத்தில் ஆதாரங்களைப் பார்க்க முடியும். அதுவும் வைதீக மதம் சார்ந்தே இவ்விதிமுறைகள் தோன்றுகின்றன. 

அடுத்து, ஒரு இனக்குழு மற்றொன்றாக மாற முடியாது. இன்றும் கூட. ஆனால் சாதிகள் மேல் கீழாக உருமாறுகின்றன - தலித்துகளைத் தவிர (அதற்கான காரணம் அவர்களை இந்து மதம் ஏற்பதில்லை, அவர்கள் பூர்வபௌத்தர்கள் என்பது.)

அடுத்து, இதை வைதீகத்தின் பிரச்சினை என்று மட்டும் கூற முடியாது. சாஸ்வதத்தை, சாராம்சத்தை ஏற்கும் எந்த மதம் இந்தியாவுக்கு வந்தாலும் அதற்குள் சாதி புகுந்து கொள்கிறது. அதனாலே இதை வைணவம், பிராமணர் என்று பார்க்காமல் சாராம்சப்படுத்தப்படும் எல்லா கருத்தியல்களுக்கும் இடமளிக்கும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு என நினைக்கிறேன். கிறித்துவம் சாதியை முழுமையாக உள்வாங்கியது, இஸ்லாம், சீக்கியத்தில் கூச ஓரளவு சாதி புகுந்திருப்பது இதைக் காட்டுகிறது.  அதாவது இது மதமாக மட்டுமன்றி ஒரு பண்பாடாக, சிந்தனையாக நம் செயல்களில், சிந்தனைகளில் உயிர்க்கிறது. நினைவுபடுத்தலுக்காக மட்டும் மனு ஸ்மிருதிகளும் கோயில்களும் இருக்கின்றன. நீங்க எந்த மத்தை இங்கு கொண்டு வந்தாலும் அது இந்துவயப்படுகிறது, அடுத்து உடனே சாதிவயப்படவும் செய்கிறது. கொரோனா கிருமி உருத்திரிவதைப் போல்.

இதனாலே அம்பேத்கர் இதை ஒரு gradation சார்ந்த அமைப்பு என்கிறார். சாராம்சவாதத்தை, கடவுளை, படிநிலையை ஏற்கும் எந்த மனிதனும் சாதியை உள்வாங்கவே செய்வான். ஐரோப்பாவை சேர்ந்த இந்தியவியலாளர்கள் (மாக்ஸ் முல்லரில் இருந்து இன்றைய ஐரோப்பிய சமஸ்கிருத ஆய்வாளர்கள் வரை) சமஸ்கிருதம், வேதம் ஆகியவற்றில் இருந்தே இந்திய பண்பாட்டின் தோன்றுகிறது என நம்புகிறார்கள். தம்மை அறியாமலே பிராமணியத்தை ஆதரித்து, இஸ்லாமிய வந்தேறிகள் கோட்பாட்டை முன்னெடுக்கிறார்கள். இவர்கள் ஒருவித கிறித்தவ வைதீக இந்துக்களாக இருக்கிறார்கள்.

அடுத்து, சாதி ஒரு வர்க்கரீதியான, உற்பத்தி உறவினால் தோன்றிய அமைப்பும் அல்ல.

கடைசியாக, வரலாற்றுக்கும் சாதிக்கும் ஒரு இறுக்கமான நெடிய தொடர்பு உள்ளது. சாரம்ச எதிர்ப்பு மரபு தோற்கடிக்கப்பட்டு சாராம்சவாத வைதீக மரபு சாம்ராஜ்ஜியங்களின் தோற்றத்துடன் நிலைகொண்டதே சாதியமைப்பின் வெற்றி வரலாறு என்கிறார் அம்பேத்கர். இந்த வரலாறு இல்லாமல் சாதி இல்லை. இதனாலே ஒவ்வொரு கதையிலும் இதிகாசத்திலும் சடங்கிலும், "தாசி", " மயிராண்டி" போன்ற சொற் பயன்பாடுகளிலும் வரலாறு மீள மீள நினைவுபடுத்தப்படுகிறது. இதனாலே சாதி இழிவில் இருந்து வெளியேற விரும்புவோர் தம் வரலாற்றை மட்டும் வைதீக பெருவரலாற்றுக்குள் திருத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள் - அப்படி சூத்திர சாதிகள் தம்மை சத்திரியர்களாக மறுவரையறை செய்கிறார்கள். அல்லது முழுக்க இவ்வரலாற்றில் இருந்து வெளியேறி மாற்றுவரலாற்றை உருவாக்குகிறார்கள் - அம்பேத்கர், அயோத்திதாசர் போன்றோர் இதற்கு உதாரணங்கள்.

ஆக, எப்படி மனிதன் செய்யும் குற்றங்களுக்கு குரங்கை பொறுப்பாக்க முடியாதோ, அதைப் போல் இனக்குழுவை வைத்து சாதியை நியாயப்படுத்த முடியாது. இரண்டுக்கும் தோற்ற ஒற்றுமை இருக்கலாம். ஆனால் இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் உள்ளன. 

சுருக்கமாக, சாதி என்பது ஒரு மதப்பிரச்சனை, வெறும் குழுவாதம் அல்ல. சாதி இந்திய வைதீக, சாராம்சவாத மரபின் குழந்தை. அது  பௌத்தர்களை ஒடுக்க வைதீகர்கள் எடுத்த ஆயுதம். இன்று சர்க்கஸ் சிங்கங்களைப் போல நாம் அதன் சாட்டைக்கு பணிந்து கொண்டிருக்கிறோம். சாராம்சவாதத்தை ஒழிக்காமல் சாதியை வீழ்த்த முடியாது. புத்தரே நமக்கான ஒரே ஒளி!

- ஆர். அபிலாஷ்

கருத்துகள்

silviamary.blogspot.in இவ்வாறு கூறியுள்ளார்…
அற்புதமான அலசல்; நிதர்சனமான உண்மையும் கூட.சாதி என்பது இந்திய நோய்க்கூறு மனநிலை பெற்றெடுத்த குழந்தை என்றால் அது மிகை இல்லை. அதுவும் கட்டுரையின் கடைசி வரிகள் கச்சிதமானவை /சாதி என்பது ஒரு மதப்பிரச்சனை, வெறும் குழுவாதம் அல்ல. சாதி இந்திய வைதீக, சாராம்சவாத மரபின் குழந்தை. அது பௌத்தர்களை ஒடுக்க வைதீகர்கள் எடுத்த ஆயுதம். இன்று சர்க்கஸ் சிங்கங்களைப் போல நாம் அதன் சாட்டைக்கு பணிந்து கொண்டிருக்கிறோம். சாராம்சவாதத்தை ஒழிக்காமல் சாதியை வீழ்த்த முடியாது. புத்தரே நமக்கான ஒரே ஒளி!/என்னுடைய முகநூல் பக்கத்தில் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.