முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஸ்லாமிய வெறுப்பு என ஒன்று ஏன் இல்லை?

என்னுடைய நண்பர் ஒருவர் பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பரசியலைப் பற்றி பேசும் போது “இவர்களுக்கு இஸ்லாமியர்களிடம் என்னதான் பிரச்சினை?” என உணர்ச்சிவசப்பட்டு கேட்பார். நான் சொல்வேன், “தேர்தல் பரப்புரையில் வெறுப்பரசியல் பேசும் மோடிக்கோ அதையே கொள்கையாக கொண்டுள்ள பாஜகவிடமோ முஸ்லீம் வெறுப்பு துளியும் இல்லை.” “ஏன் அப்படி சொல்கிறாய்?”

நான் விளக்கினேன்.
பாஜகவினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் இஸ்லாமியருடன் கூட்டு சேர்வது, அவர்களுக்கு பல உதவிகளை அளிப்பதை பார்த்திருக்கிறேன். பாஜக கட்சி அரசியலிலும் இஸ்லாமியர் இருக்கிறார்கள். இது அதர்க்கமானது அல்லவா? இதை சந்தர்ப்பவாதம் என்றும் பார்க்க முடியாது. இஸ்லாமிய வாக்குகள் இன்றி ஜெயிக்க முடியும் எனும் போது, இஸ்லாமியரே பாஜகவுக்கு தேவையில்லை எனும் போது என்ன சந்தர்ப்பவாதம்? பல இடங்களில் பாஜக இந்துக்களையே ‘மற்றமையாக’ வைத்துள்ளது. கவனித்துப் பாருங்கள் மோடி அதிகமாக விமர்சித்து தூற்றியுள்ளது இந்துக்களையே. மோடியின் கணிசமான எதிரிகள் இந்துக்களே. அவர்களை கடுமையாக பழித்து சிறையிலும் தள்ளி உள்ளார். இஸ்லாமியர் அரிதாகத் தான் மோடியை எதிர்த்து போராடியிருக்கிறார்கள். இது அவர்கள் சிறுபான்மை என்பதால் அல்ல, பாஜகவின் செயல்திட்டம் எல்லா மதத்தினரையும் மாற்றுவதே. மாறத் தலைப்படாதவர்களை மோடியும் அவரது பக்தர்களும் வெறுக்கிறார்கள்.
இந்துக்கள் அனைவரும் தம்மவர், இஸ்லாமியர் மற்றமை என பாஜக எங்கும் கூறியதில்லை. அவர்கள் இந்துக்களையும் இஸ்லாமியரையும் பார்க்கும் விதமே வித்தியாசமானது - கடவுளை நம்பும், மதத்தை பின்பற்றும் ஒரு இந்து முதலில் தன் மதமாக பாஜகவை, தன் கொள்கையாக இந்துத்துவாவை பார்க்க வேண்டும். அடுத்து அவர் தன் தேசத்தை பாஜக சித்தரித்துக்கும் தேசமாக பார்க்க வேண்டும். இத்தேசத்தை கடவுளாகப் பார்க்க வேண்டும். அடுத்து, அவர் மோடியை தேசமாக பார்க்க வேண்டும். கடைசியில் மோடியை தெய்வமாக பார்க்க வேண்டும். கடவுளுக்காக ஊர்வலம் போவது, வழிபாடு நடத்துவது, சடங்குகள் செய்வது, விரதம் அனுஷ்டிப்பது, படையல் செய்வது எல்லாவற்றையும் பிரம்மாண்டமான அளவில் மோடிக்காக செய்ய வேண்டும். எங்கு போனாலும் எதிலும் தெய்வத்தை காண்பதைப் போல மோடியைக் காண வேண்டும். பக்தியில் உள்ள முழுமையான சராணகதியை மோடி மீதான பற்றிலும் காட்ட வேண்டும். அதாவது உணரத் தேவையில்லை, இதையெல்லாம் காட்டினால் போதும். அதாவது, இந்து மதத்தில் அந்தரங்கமாகவே பக்தி வெளிப்படும். கோயிலுக்குப் போவது கட்டாயம் அல்ல. ஆனால் கிறித்துவத்திலும் இஸ்லாத்திலும் அது நிறுவனப்படுத்தப்பட்டு வெளிமுகமாக்கப்படும். மோடி இந்து மதத்தை கிறித்துவம், இஸ்லாம் போன்று மாற்றவும் விரும்புகிறார். அவர் நம்மைப் பார்த்து என் மீது பக்தி கொள்ளுங்கள் எனக் கேட்க மாட்டார், உங்கள் பக்தியை அனுதினமும் பட்டவர்த்தமாக காட்டுங்கள் என்பார். இதைக் கேட்க அப்படியே கிறித்துவப் பிரச்சாரம் போன்றே இல்லை?
யாக்கோபு 2 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்
“ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.”
இஸ்லாமியருக்கு என்ன பிரச்சினை என்றால் அவர்களால் மோடியை ‘அல்லாவாக’ கருத முடியாது. (கிறித்துவர்களாலும் தான் முடியாது.) அதை அவர்களுடைய மார்க்கம் ஏற்காது. இந்து மதம் அந்தளவுக்கு கராறானது இல்லையென்பதால் ஓரளவுக்கு இந்துக்களால் அவ்வாறு ஏற்க முடிகிறது.
இஸ்லாமியர் தினமும் மோடியின் பெயரால் வழிபட்டு பாங்கு விளித்து
“மோடி, அவன் ஏகன்.
மோடி (எவரிடத்தும்) தேவையற்றவன்.
மோடி (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், மோடிக்கு நிகராக எவரும் இல்லை.” என்று தினமும் சத்தமாக சொன்னால் போதும் மோடி பக்தர்கள், பாஜகவினர், மோடி இஸ்லாமியரை அணைத்து முத்தமிடுவார்கள். இஸ்லாமிய வெறுப்பு பேச்சே அதற்கு மேல் இராது. எல்லா இந்துக்களும், கிறித்துவர்களும் இதை செய்தால் இந்துத்துவாவின் செயல்திட்டம் நிறைவேறி விடும்.
உள்ளுக்குள் மோடியும் அவரைப் போன்ற இந்துத்துவர்களும் கடவுளை ஏற்காதவர்கள். மோடி கோயிலுக்குப் போவது எல்லாம் வெறும் நாடகமே. எந்த பிரச்சினை வந்தாலும் இவர்கள் கடவுளை அழைக்கவோ சரணடையவோ மாட்டார்கள். இவர்களுடைய பேட்டிகளை கவனியுங்கள், இவர்களுடன் நேரில் உரையாடிப் பாருங்கள். எளிய பக்தியே இவர்களிடம் இராது. என் தேவையை என்னால் மட்டுமே முயன்று அடைய முடியும், என்னைக் கடந்த ஒரு சக்தியால் தர முடியாது என நம்புகிறார்கள். இவர்கள் கடவுளை தேசமாகவும், தேசத் தலைவரை கடவுளாகவும் காண விரும்புகிறார்கள். பக்தி வேறு, நம்பிக்கை வேறு. தமிழிலும் கணிசமான இந்துத்துவர்களுக்கு பக்தி இல்லை, ஆனால் தீவிர மத நம்பிக்கை உள்ளது.
ஹிட்லரும் இப்படித்தான் - அவர் தீவிரமான நாத்திகவாதி. மெல்ல மெல்ல ஆட்சியைக் கைப்பற்றியதுடன் அவர் தன்னையே தேசத்தின் கடவுளாக மாற்றிக்கொண்டார். அந்த பக்தியை தன் மக்கள் வெளிப்படுத்தி பிரகடனப்படுத்த வேண்டும் என விரும்பினார்.
இஸ்லாமியரை ஒழிப்பதோ வெளியேற்றுவதோ மோடியின், ஆர்.எஸ்எஸ்ஸின் நோக்கமல்ல. அவர்களுடைய பிரச்சினை மக்களின் கடவுள் பக்தி தான். அவர்களுடைய இலக்கு இந்து மதத்தை இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் போல மாற்றி, அவற்றில் இருந்து அல்லாவையும் ஏசுவையும் எல்லா இந்துக் கடவுள்களையும் வெளியேற்றி மோடியை அங்கு வைப்பதுதான். உ.தா., நீங்கள் ஜக்கி எழுப்பிய ஆதியோகி சிலையில் ஜக்கியின் சாயலைப் பார்க்க முடியும். அடுத்த சில தேர்தல்களையும் பெரும்பான்மையுடன் மோடி வென்றுவிட்டால் ராமர் சிலையில் மோடியின் சாயல் வந்துவிடும்.
இந்துத்துவர்கள் தேசத்தை கடவுளாக ஏற்காதவர்களை வெறுக்கிறார்கள். மோடி தன்னைக் கடவுளாக ஏற்காதவர்களை வெறுக்கிறார். பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸுக்குள் மோடியை கடவுளாக பார்க்காதவர்கள் இரு தரப்புகளையும் வெறுக்கிறார்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...