நண்பனுக்கு – இது ஒரு திறந்த கடிதம். நீ சட்டென்று பேங்களூர் சென்று விட்டது அறிந்தது வருத்தம். மிக சுய நலமான வருத்தம். இங்கே இருந்த போதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில்லை தான். ஆனால் உன் அண்மை இருப்பு ஒரு ஆசுவாசம் தருகிறது. இதோ இப்போதே நான் குறும்பேசியில் பேச முடியலாம். வெளி அத்தனை சுருங்கியதாக இருக்கட்டும். ஆனால் தொலைதொடர்பின் வெளி அத்தனை காத்திரமாக இல்லை. இது இரண்டாம் அல்லது மூன்றாம் முறை. நாம் சந்தித்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தின பின் உடனே வேறு ஊருக்கு சென்று விடுகிறாய். கல்லூரியில், நாம் ஒன்றரை வருடங்கள் சந்தித்து பழகியும் இறுதி கட்டத்தில் தான் நண்பர்கள் ஆனோம். ஒரே விடுதியில் இருந்தும் நாம் ஒரு உரையாடலுக்கு சந்திக்க திட்டமிட்டு அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. உனக்கு முடிந்தும் என் தேர்வுகள் தொடர்ந்தன. எனக்காக சில வாரங்கள் ஊருக்கு போவதை தள்ளிப் போட்டு விடுதியில் காத்திருந்தாய். இறுதியில் நாம் மைதானப் புல்வெளியில் சந்தித்து என்ன உரையாடினோம் என்று நினைவில்லை. பேச்சின் சுவை பொருளில் இல்லைதானே. மற்றொரு முறை தண்ணி அடித்தபடி என்னுடன் பேச விரும்பியதால் பாருக்கு போனோம். இரவு பதினோ...