ஒரு நபரைப் பற்றி பலர் சொல்லிக் கேட்டு சிறுக சிறுக ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்வது ஒரு அலாதியான அனுபவம். பல சமயங்களில் திரிபுகளும், இடைசெருகல்களும் கொண்டிருந்தாலும் இந்த சித்திரம் தரும் கற்பனையின் கிளர்ச்சி அபாரமானது. ஒருவரை நேரில் தெரிந்து கொள்வது இப்படி பெயிண்டை உதறி சித்திரம் தீட்டுவது போல் பல்வேறு வாய்களில் இருந்து பொறுக்கி அகவய சித்திரத்தை உருவாக்குவதில் இருந்து வேறுபட்டது.
என்னோடு பணிபுரியும் நண்பர் குமார் சுந்தர ராமசாமியை அவரது வீட்டில் சென்று பார்த்திருக்கிறார். சு.ராவின் “புளியமரத்தின் கதை” நாவலில் தன் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த ஒரு பார்வையற்ற ஆய்வாளருக்கு சு.ராவிடம் பேட்டி காண தேவை இருந்ததால் குமார் உடன் சென்றிருக்கிறார். ஆய்வாளர் ஒரு தீப்பொறி இடதுசாரி. “சக்கிலியர்களை இந்த நாவலில் நீங்கள் எப்படி கேவலப்படுத்தலாம்?” என்று துழாவும் கண்களுடன் கேள்விகளை எறிந்திருக்கிறார். சு.ராவின் முகத்தில் தீப்பிழம்பு எழுந்து வந்ததாய் குமார் சொல்கிறார். அவர் தாடியை வருடியவாறே தன் வேலைக்காரியை அழைக்கிறார். வந்தவரிடம் “இருமல் மருந்து கொண்டுவாம்மா” என்கிறார். ஒரு கோப்பையில் ஊற்றி கொண்டு வருகிறார். சு.ரா அதை சுவைத்தபடியே மேற்கொண்டு பேசுகிறார். குமார் அப்போது பொருளாதார சுயசார்பற்ற கல்லூரி இளைஞர். எழுத்தாளர்கள் கல்லூரி இளைஞர்களை நெருடல் தோன்றாத வண்ணம் உபசரிக்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டிருந்தவர். உதாரணமாக, சோபாசக்தி இந்தியா வந்திருந்தபோது பார்க்க சென்றிருந்த குமார் மற்றும் அவர் நண்பர் குழாமை அவர் நன்றாகவே டாஸ்மாக்கில் உபசரித்திருக்கிறார். இரவு வரை குளிப்பாட்டி பின் சட்டை பாக்கெட்டில் 100 ரூபாய் நோட்டுகள் திணித்து, திரும்ப பயணத்திற்கு வாகனம் கூட ஏற்பாடு செய்திருக்கிறார். மிச்சமான காசில் குமார் & கோ பிரியாணி தின்றிருக்கிறார்கள். இப்படியான விருந்தோம்பலில் குளிர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் குறித்த கற்பனாவாத மனக்கிளர்ச்சி கொண்டிருந்த குமாருக்கு சு.ரா தனக்கு தண்ணீர் காட்டியபடி இருமல் மருந்து குடித்ததில் கடும் அதிர்ச்சி. காரணம் அது இருமல் மருந்தல்ல. விஸ்கி. பார்வையற்ற நண்பர் வேறு இடையிடையே “ஏதோ வாசம் வருகிறதே” என்று முணுமுணுக்க அவரை சமாதானம் செய்ய வேண்டி வருகிறது. சு.ரா ஒரு பதிவிசுக்கு கூட “சாப்பிடுறீங்களா” என்று கேட்க மாட்டேன் என்கிறார். தங்களை லாலிபாப் வயதினராக உத்தேசித்து அவர் தன்னை மட்டும் வளர்ந்தவராக காட்டிக் கொள்வதாக குமாருக்கு மேலும் கடுப்பு.
ஜெயமோகனின் “சு.ரா நினைவின் நதியில்” படித்திருக்கிறேன். ஜெ.மோ சு.ரா மது அருந்து பழக்கும் கொண்டிருந்தது தனக்கு மிக ஆச்சரியமான வகையில் எதேச்சையாக தெரிய வந்ததை குறிப்பிடுகிறார். அவரின் சு.ரா வசீகரமானவர்; மனவலிமையும், கூர்மையான அங்கதமும் கொண்டவர். சாமர்த்தியமான உரையாடல்காரர். நான் சு.ராவை தொண்ணூறுகளின் இறுதிகளில் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். நான் நேரடியாக அவதானித்தவை குறித்த மற்றொரு சந்தர்பத்தில் சொல்கிறேன். பிரமிளின் புகார்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன். மொத்தமாக சு.ரா பற்றி கிடைக்கும் சித்திரத்தில் எத்தனை முரண்படும் வண்ணங்கள். அவற்றில் இதுதான் தனிப்பட்டு நிற்பது.
சு.ரா மறைந்த நாள் நான் மாலைமலர் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சேதி அறிந்ததும் நெஞ்சடைத்துப் போய் “சார் சுந்தர ராமசாமி இறந்து போயிட்டாராம்” என்று என் தலைமை ஆசிரியரிடம் ஒரு உள்தூண்டலில் கூவி விட்டேன். அவர் மழுங்கின முகத்துடன், மேலும் வெறுப்பாக, “யாருங்க அவரு” என்றார்.