Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இருமல் மருந்தும் சுந்தர ராமசாமியின் பிம்பமும்



ஒரு நபரைப் பற்றி பலர் சொல்லிக் கேட்டு சிறுக சிறுக ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்வது ஒரு அலாதியான அனுபவம். பல சமயங்களில் திரிபுகளும், இடைசெருகல்களும் கொண்டிருந்தாலும் இந்த சித்திரம் தரும் கற்பனையின் கிளர்ச்சி அபாரமானது. ஒருவரை நேரில் தெரிந்து கொள்வது இப்படி பெயிண்டை உதறி சித்திரம் தீட்டுவது போல் பல்வேறு வாய்களில் இருந்து பொறுக்கி அகவய சித்திரத்தை உருவாக்குவதில் இருந்து வேறுபட்டது.

என்னோடு பணிபுரியும் நண்பர் குமார் சுந்தர ராமசாமியை அவரது வீட்டில் சென்று பார்த்திருக்கிறார். சு.ராவின் “புளியமரத்தின் கதை” நாவலில் தன் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த ஒரு பார்வையற்ற ஆய்வாளருக்கு சு.ராவிடம் பேட்டி காண தேவை இருந்ததால் குமார் உடன் சென்றிருக்கிறார். ஆய்வாளர் ஒரு தீப்பொறி இடதுசாரி. “சக்கிலியர்களை இந்த நாவலில் நீங்கள் எப்படி கேவலப்படுத்தலாம்?” என்று துழாவும் கண்களுடன் கேள்விகளை எறிந்திருக்கிறார். சு.ராவின் முகத்தில் தீப்பிழம்பு எழுந்து வந்ததாய் குமார் சொல்கிறார். அவர் தாடியை வருடியவாறே தன் வேலைக்காரியை அழைக்கிறார். வந்தவரிடம் “இருமல் மருந்து கொண்டுவாம்மா” என்கிறார். ஒரு கோப்பையில் ஊற்றி கொண்டு வருகிறார். சு.ரா அதை சுவைத்தபடியே மேற்கொண்டு பேசுகிறார். குமார் அப்போது பொருளாதார சுயசார்பற்ற கல்லூரி இளைஞர். எழுத்தாளர்கள் கல்லூரி இளைஞர்களை நெருடல் தோன்றாத வண்ணம் உபசரிக்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டிருந்தவர். உதாரணமாக, சோபாசக்தி இந்தியா வந்திருந்தபோது பார்க்க சென்றிருந்த குமார் மற்றும் அவர் நண்பர் குழாமை அவர் நன்றாகவே டாஸ்மாக்கில் உபசரித்திருக்கிறார். இரவு வரை குளிப்பாட்டி பின் சட்டை பாக்கெட்டில் 100 ரூபாய் நோட்டுகள் திணித்து, திரும்ப பயணத்திற்கு வாகனம் கூட ஏற்பாடு செய்திருக்கிறார். மிச்சமான காசில் குமார் & கோ பிரியாணி தின்றிருக்கிறார்கள். இப்படியான விருந்தோம்பலில் குளிர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் குறித்த கற்பனாவாத மனக்கிளர்ச்சி கொண்டிருந்த குமாருக்கு சு.ரா தனக்கு தண்ணீர் காட்டியபடி இருமல் மருந்து குடித்ததில் கடும் அதிர்ச்சி. காரணம் அது இருமல் மருந்தல்ல. விஸ்கி. பார்வையற்ற நண்பர் வேறு இடையிடையே “ஏதோ வாசம் வருகிறதே” என்று முணுமுணுக்க அவரை சமாதானம் செய்ய வேண்டி வருகிறது. சு.ரா ஒரு பதிவிசுக்கு கூட “சாப்பிடுறீங்களா” என்று கேட்க மாட்டேன் என்கிறார். தங்களை லாலிபாப் வயதினராக உத்தேசித்து அவர் தன்னை மட்டும் வளர்ந்தவராக காட்டிக் கொள்வதாக குமாருக்கு மேலும் கடுப்பு.

ஜெயமோகனின் “சு.ரா நினைவின் நதியில்” படித்திருக்கிறேன். ஜெ.மோ சு.ரா மது அருந்து பழக்கும் கொண்டிருந்தது தனக்கு மிக ஆச்சரியமான வகையில் எதேச்சையாக தெரிய வந்ததை குறிப்பிடுகிறார். அவரின் சு.ரா வசீகரமானவர்; மனவலிமையும், கூர்மையான அங்கதமும் கொண்டவர். சாமர்த்தியமான உரையாடல்காரர். நான் சு.ராவை தொண்ணூறுகளின் இறுதிகளில் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். நான் நேரடியாக அவதானித்தவை குறித்த மற்றொரு சந்தர்பத்தில் சொல்கிறேன். பிரமிளின் புகார்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன். மொத்தமாக சு.ரா பற்றி கிடைக்கும் சித்திரத்தில் எத்தனை முரண்படும் வண்ணங்கள். அவற்றில் இதுதான் தனிப்பட்டு நிற்பது.

சு.ரா மறைந்த நாள் நான் மாலைமலர் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சேதி அறிந்ததும் நெஞ்சடைத்துப் போய் “சார் சுந்தர ராமசாமி இறந்து போயிட்டாராம்” என்று என் தலைமை ஆசிரியரிடம் ஒரு உள்தூண்டலில் கூவி விட்டேன். அவர் மழுங்கின முகத்துடன், மேலும் வெறுப்பாக, “யாருங்க அவரு” என்றார்.

Comments

virutcham said…
அவர் குடித்தது பிரச்சனையா உங்கள் நண்பருக்கு தரவில்லை என்பது பிரச்சனையா ?
எழுத்தாளர்கள் ஒருவரை விருந்தோம்பல் செய்ய மகிழ்விக்க குடிக்க வைக்க வைக்க வேண்டுமா என்ன ?

//மிச்சமான காசில் குமார் & கோ பிரியாணி தின்றிருக்கிறார்கள். இப்படியான விருந்தோம்பலில் குளிர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் குறித்த கற்பனாவாத மனக்கிளர்ச்சி கொண்டிருந்த குமாருக்கு சு.ரா தனக்கு தண்ணீர் காட்டியபடி இருமல் மருந்து குடித்ததில் கடும் அதிர்ச்சி.//
இப்படியான விஷயங்கள் தான் சரியான பிம்பமோ ?
http://www.virutcham.com
விருந்தோம்பல் ஒரு பொதுவான மனித மாண்பு தான். மதுவானாலும், உணவானாலும் சரி. சு.ரா என் நண்பருக்கும் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்திருக்க வேண்டும். அதுவே நாகரிகம். ஆனால் கட்டாயம் அல்ல. ஒருவர் விருந்தோம்பல் பண்ணாமலும் இருக்கலாம். தனிப்பட்ட சுதந்திரம் அது.
virutcham said…
தனிப்பட்ட சுதந்திரத்தை உடைபட்ட பிம்பமாக சித்தரித்து எழுதியது ஏன்?
மது அருந்துபவர்களில் சிலர் பிறருக்கு அதை தருவதில்லை என்ற கொள்கையை கடைபிடிப்பது உண்டு. இவர் அவ்வாறு நினைத்திருக்கலாம் அல்லவா? ஒருவிதத்தில் நல்லது தானே.
உங்கள் எழுத்தில் விருந்தினருக்கு ஒன்றுமே தந்து உபசரிக்கவில்லை என்று எழுதப் பட்டு இருந்தால் ஒரு நியாயம் இருப்பதாக சொல்லலாம். உங்கள் எழுத்தின் நோக்கத்தில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை

ஒரு சிறந்த எழுத்தாளர் வீட்டுக்கு சென்று அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைக்கப் பெரும் ஒருவர் மதுவை தனக்குத் தரவில்லை என்று சொல்லுவதும் ( எதை எதிர்பார்த்து ஒரு எழுத்தாளன் வீட்டிற்கு சென்றார்கள்?) அதை நீங்கள் அந்த எழுத்தாளரின் பிம்பத்தின் நீங்கள் கண்டுவிட்ட முரண்பாடாக எழுதுவதும், இதை என்னவென்று சொல்லுவது?

http://www.virutcham.com
Athisha said…
அபிலாஷ் இந்த பதிவை ஏனோ நான் கீழிருந்து மேல் நோக்கி வாசித்தேன்.
Madumitha said…
சு.ரா வின்
எழுத்துதானெ
அவரது பிம்பம்?
வித்யா
சு.ரா உருவாக்கின பிம்பம் உடைபட்டதாக நான் கருதவில்லை. அவர் ச்ந்தித்த எத்தனையோ பேரில் பல்வேறு பட்ட சலனங்களை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதே நான் சாராம்சமாக் சொல்வது. என் நண்பரின் நோக்கம் மிக எளிய ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனாலும் சு.ரா இன்னும் மனம் விட்டு நடந்து கொண்டிருக்கலாம் என்றே நம்புகிறேன். நான் கவனித்தது வரை சு.ரா அவ்வளவு சீக்கிரம் தன்னை நாடி வருகிறவர்களிடம் தன்னை திறக்க மாட்டார்.ஆரம்பத்தில் சற்று விலகலோடே கவனிப்பார். பல சந்திப்புகளுக்கு பிறகு அவர் நம்மை ஒரு வகைமைக்குள் அடைத்து விட்ட பின், நம்மை எப்படி நடத்துவது என்று தீர்மானிப்பார். இந்த அணுகுமுறை மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஒரு எளிய மட்டத்தில் என் நண்பர் மது எதிர்பார்த்ததிலும் தவறில்லை. தராததனால் சு.ராவின் ஆளுமை சிறிதும் கறைபட இல்லை என்பதும் உண்மையே. சு.ராவை தாக்குவது என் நோக்கமல்ல வித்யா. அவருடன் எனக்கு மிக இனிய உறவு இருந்தது. இன்றும் மிகுந்த நெகிழ்ச்சியுடனே அவரை நினைத்துக் கொள்கிறேன்.
மதுமிதா
சுராவின் எழுத்து ஒரு பிம்பம்
ஆளுமை மற்றொரு பிம்பம்
அது கூட ஒரு சுவாரஸ்ய முறை தான் அதிஷா!
virutcham said…
உங்கள் பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் இடையிலான முரணை கொஞ்சம் கவனியுங்கள்.
சு.ரா வின் அமைதியான, மற்றவர்களோடு சட்டென்று பழகாத சுபாவம் தெரிந்து தானே உங்கள் நண்பர் அங்கு சென்று இருப்பார்.
இத்தகைய சுபாவம் உள்ள ஒருவரின் வீட்டில் அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்த ஒருவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இது என்ன மனதில் எழும் அல்ப்ப எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அவர் இறப்புக்கு பின்னரும் சொல்லிக் கொண்டு
தவறு எதிர்பார்ப்பில் இருக்கிறதா என்றும் கொஞ்சம் யோசியுங்கள்

http://www.virutcham.com
வித்யா
இதற்கும் பதில் என் முந்தின பின்னூட்டத்தில் உள்ளது. சுருக்கமாக, சு.ராவை மாபெரும் எழுத்தாளுமையாக, எளிய மனிதராக இருவகையில் அணுகலாம். இரண்டிலும் தவறில்லை. நண்பர் இரண்டாவது வகைப்படி அணுகியிருக்கலாம். நான் நாளைக்கு உங்கள் வீட்டுக்கு வந்தால் இரண்டாவது வகை மனிதராக அணுகி விருந்தோம்பல் (டீ, பிஸ்கெட்)எதிர்பார்க்கலாமே!

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...