குரசேவாவின் " Seven Samurai" யைத் தழுவி லோகிததாஸ் திரைக்கதை எழுதி , ஐ . வி . சசி இயக்கி , மம்முட்டி நடித்து உருவான , ‘ மிருகயா ’ ஒரு பழமையான தொண்ணூறுகளின் மலையாள கலை - ஜனரஞ்சகப் படம் . பொற்கால மலையாளப் படங்களை போல மிருகயாவும் ஒரு கிராமத்தின் பல்வேறு பட்ட மனிதர்களை , அவர்களின் பலவீனங்கள் , அசட்டுத்தனங்கள் , துயரங்கள் ஆகியவற்றை எதார்த்தமாக கதைப் பின்னணியாகக் கொண்டுள்ளது . மனிதக்கொல்லியான புலி ஒன்றின் வேட்டையை சித்தரிக்கும் இந்த சாகசப் படம் முரண்பாடாக லோகிததாஸின் பழமையான பாணியில் மிக மெதுவாக ஒரு காபிக் கடையில் " ஆமைவடை " வக்கீலொருவர் பலகாரம் புசித்துக் கடன் சொல்லும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது . அக்காலத்தைய முக்கியப் படங்களைப் போல மிருகயாவும் மந்தமான ஒளிப்பதிவையும் , கைநடுக்க காட்சித்தொகுப்பையும் , செவிட்டுத்தனமான பின்னணி இசையையும் , நாடகீயமான கதைகூறலையும் கொண்டுள்ளது . இத்தனையும் மீறி ஒரு மேதையின் மொழியாக்கப்பட்ட வரிகளைப் போல் அதன் ஆன்மா புத்தொளியுடன் துலங்கி நிற்கிறது .