லஷ்மி மணிவண்ணன் கவிதைகளை உணர்வெழுச்சிகளால், உருவகங்கள், உவமைகள், குறியீடுகளால், தர்க்கத்தால், எளிய சித்தரிப்புகளால் சீராக கட்டி எழுப்புவதில்லை. ஒட்டுமொத்தமான ஒரு தரிசனத்தை, புதிய கண்ணோட்டத்தை, கண்டுபிடிப்பை தர அவை முனைவதில்லை. லஷ்மியின் கவிதைகளில் நாம் காண்பது கூர்மையான அவதானிப்புகள், குறிப்பாய் அதிகாரம், கலாச்சார அரசியல், பிம்பங்கள் நம் மனப்பரப்பில் ஏற்படுத்தும் குழப்பம், விழுமியங்களும், அறமும் அதிகாரக் கருவிகளாதல் பற்றியவை.