இன்று (7-3-15) நடந்த தென்னாப்பிரிக்கா-பாகிஸ்தான்
லீக் போட்டி இந்த உலகக்கோப்பையின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்று. பாகிஸ்தான் முதலில்
மட்டையாடி 222 அடித்தார்கள். தடுக்கி தடுமாறி கூட அடிந்து விடக்கூடிய எளிய ஸ்கோர்.
ஆனால் தென்னாப்பிரிக்கா தடுமாறிக் கொண்டே இருந்தார்கள். எழவே இல்லை. அதற்கு இரண்டு
காரணங்கள்.
ஒன்று ஏழடி உயரமுள்ள முகமது இர்பான், இடதுகை வீச்சாளர்கள்
ரகத் அலி, வஹாப் ரியாஸ் ஆகிய மந்திரப் பந்து வீச்சாளர்கள். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின்
தனித்தன்மை அவர்களால் மிகுந்த வேகத்தில் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்பது. அவர்கள்
நன்றாக வீசத் தொடங்கினால் பாலைவனச் சூறாவளி அடிப்பது போலத் தான். எதிர்த்து நிற்க நீங்கள்
திராவிடாகவோ காலிஸாகவோ இருக்க வேண்டும். இன்று தென்னாப்பிரிக்காவை அந்த புயல் அடித்து
தூக்கி சென்றது. டிவில்லியர்ஸ் மற்றுமே சற்று நேரம் எதிர்த்து நின்று சுடர்ந்து விட்டு
அணைந்து விட்டார்.
தென்னாப்பிரிக்கா ஒவ்வொரு நான்கு
ஓட்டங்கள் அடிக்கும் போது பாகிஸ்தான் வேகவீச்சாளர்கள் அஞ்சாமல் தொடர்ந்து விக்கெட்டுக்காக
முயன்று கொண்டே இருந்தார்கள். இது ஒரு கண்காணா காட்சி. சன்னதம் வந்தது போன்ற கவனத்துடன்,
மன ஒழுங்குடன் ஆவேசத்துடன் வீசினார்கள்.
இரண்டாவது காரணம் தென்னாப்பிரிக்காவின்
பதற்றம். தோற்று விடுவோமோ என்கிற பயம். ஒரு இலக்கை விரட்டும் போது இரண்டு ஓவர்கள் அவர்களுக்கு
எதிராக நன்றாக ஆடினால் சுணங்கி விடுவார்கள். பதற்றத்தில் தடுமாறியபடி ஆடுவார்கள். பிறகு
அவர்களுடையது தற்கொலை ஆட்டமாகத் தான் இருக்கும். ஆங்கிலத்தில் choking என்கிறார்கள்.
இந்த பிரச்சனை தென்னாபிரிக்காவுக்கு முன்னர் முக்கியமான ஆட்டங்களில் மட்டும் இருந்தது.
இப்போது லீக் போட்டிகளில் கூட அவர்கள் தம் மீது போடும் கொள்ளும் அழுத்தத்தினால் சோக்
ஆக ஆரம்பித்து விட்டார்கள். ஒரே விதிவிலக்கு ஹஷிம் ஆம்லா தான். அவர் பந்தை சொடுக்கி
விரட்டும் போது அசருதீன் நினைவுக்கு வருகிறார். பந்து மட்டையில் படும் போது ஒரு தனித்துவமான
சத்தம் வரும். இது மணிக்கட்டை சுழற்றி அடிக்கும் மட்டையாளர்களுக்கே உரித்தானது. ஆம்லாவைத்
தவிர பிற தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஒரு ஜென் மனநிலையுடன் ஆட வரவில்லை. டிவில்லியர்ஸுக்கு
கூட. அவரும் பதற்றமானால் அடிக்க ஆரம்பித்து விடுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவரிடத்தில்
தோனி இருந்திருந்தால் ஒற்றை, ரெட்டை ஓட்டங்கள் எடுத்தே வென்றிருப்பார். ஆனால் அவர்
நான்காவது கியரில் ஆடி ஆட்டம் இழந்தார்.
டிவில்லியர்ஸ் ஆம்லாவுக்கு இன்னொரு
துருவம். ஆம்லாவுக்கு மணிக்கட்டும் டைமிங்கும் பலம் என்றால் இவருக்கு சமநிலையும் அடிக்கும்
வலுவும் தனிச்சிறப்பு. முன்பெல்லாம் கால் பக்கமாய் விலகி நின்று பந்தை எங்கு வேண்டுமானாலும்
அடித்துக் கொண்டிருந்தார். குச்சியை சுற்றி வந்து round the wicket வீசி அவரை கட்டுப்படுத்த
முடிந்தது. இப்போது அம்முறையில் வீசினாலும் அதற்கும் ஒரு உபாயம் வைத்திருக்கிறார்.
Off குச்சிக்கு வெளியே வெகுவாக தள்ளி நின்று பந்து கால் பக்கமாய் அனாயசமாய் அடிக்கிறார்.
எப்படி நின்றாலும் அவரது சமநிலை குலைவதில்லை. அதனாலே அவரால் இஷ்டத்துக்கு ஆறு ஓட்டங்கள்
அடிக்க முடிகிறது. அவரை இப்போது பார்க்க தொண்ணூறுகளில் சச்சினைப் பார்த்தது போல் இருக்கிறது.
டிவில்லியர்ஸ் இவ்வாறு அங்கும்
இங்குமாய் தள்ளி நின்று அடிக்கையில் முழுநீளமோ யார்க்கரோ குட் லெங்தோ உதவாது. Short
of the length தான் சரியான உபாயமாக இருக்கும். இன்று சொகைல் கான் அவரை அப்படித் தான்
வீழ்த்தினார்.
இன்றைய ஆட்டம் பார்த்த பின்னர்
தென்னாப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையை வெல்லும் எனும் நம்பிக்கை முழுமையாக போய் விட்டது.
லீக் ஆட்டத்திலேயே இவ்வளவு கைநடுக்கம் என்றால் கால், அரை இறுதிகளில் அவர்களுக்கு பதற்றத்தில்
ஜன்னியே வந்து விடும். தென்னாப்பிரிக்கா ஆடும் போது இரண்டு அணிகளுக்கு எதிராக போராட
வேண்டும். ஒன்று எதிரணிக்கு எதிராக. அடுத்து தனக்கு எதிராக.
இம்முறையும் South Africa
chokes again எனும் தலைப்பு செய்தி வரும் பாருங்கள்.