இத்தேர்தல் பற்றி ஒரு மாதத்திற்கு
முன்பு என்னிடம் கேட்டிருந்தால் போட்டி கடுமையாக இருக்கும். அதிமுக சராசரியான வெற்றி
பெறும். திமுக போதுமான இடங்கள் பெற்று எதிர்க்கட்சியாக மாறும் என கூறியிருப்பேன். ஆனால்
ஒரு வாரத்துக்கு முன்பு சட்டென ஒரு எதிர்-அதிமுக அலை கிளம்புவதை கவனித்தேன். எல்லா
பத்திரிகை நண்பர்களும் திமுக தான் வெல்லும் என்றார்கள். Exit poll முடிவுகளும் அதையே
உறுதிப்படுத்தின. ஆனால் நேற்று எனக்கு சற்று குழப்பமாய் இருந்தது. என் ஊகம் தவறாகுமோ
என பட்டது. காரணம் அதிமுகவின் மௌனம். தேர்தலுக்கு முன்பாக இருநாட்களில் அவர்கள் நடத்திய
பெரும் பணப்பட்டுவாடா. நேற்றிரவு ஒரு ஊடக நண்பரிடம் பேசினேன். (அவர் ஒரு செய்தி சேனலில்
முக்கிய பொறுப்பில் இருப்பவர்.) ”என்ன நினைக்கிறீர்கள்?” அவர் சொன்னார் “அதிமுக வெற்றி
பெறும். தேர்தலுக்கு சற்றும் முன்பு அவர்கள் விநியோகித்த பெருமள்வு பணம் மக்களின் முடிவை
திசைதிருப்பி இருக்க கூடும். ஆனால் திமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாய் வெளிவரும்.”
அதன் பிறகு அவர் மற்றொரு விசயத்தை ஊகித்தார். அது பா.ம.க ஒரு சிறிய வெற்றியை அடையும்
என்பது. அன்புமணி நிறைய இளம் வாக்காளர்களை வசீகரிக்கிறார் என்றார். எனக்கு இது கொஞ்சம்
அதிர்ச்சியாய் இருந்தது. ஆனால் இப்போது வரைக்கும் பா.ம.க ஐந்து இடங்களில் முன்னிலை
வகிப்பது இதை உறுதிப்படுத்துகிறது. அந்த நண்பர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தான்.
நேற்று கோட்டூர்புரத்தில் ஒரு
ஓட்டலில் உணவருந்தி விட்டு கிளம்பும் போது அதன் உரிமையாளரிடம் தேர்தல் பற்றி பேசிக்
கொண்டிருந்தேன். “திரும்பவும் அதிமுக வந்தால் அவங்க ரொம்ப ஆட்டம் போடுவாங்க. தட்டிக்
கேட்க யாரும் இல்லேன்னு நினைப்பாங்க. அதனாலே அவங்க வரக் கூடாது. மத்தபடி நான் எந்த
கட்சி ஆளும் இல்லை” என்றார். நானும் எந்த கட்சியின் அனுதாபியும் அல்ல. அதிமுக மீண்டும்
வரக் கூடாது என வெளியில் நின்று விரும்பியவன் நான். அதனால் இத்தேர்தல் முடிவுகள் எனக்கும்
ஏமாற்றமே. ஆனாலும் தனிப்பெரும் வெற்றியை மக்கள் அளிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
திமுகவை ஒரு வலுவான எதிர்க்கட்சியாய் முன்னிறுத்தி இருக்கிறார்கள். கடந்த இரு வருடங்களில்
இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மக்கள் பா.ஜ.கவுக்கு விடுத்த
செய்தி போலத் தான் இதையும் பார்க்க வேண்டும். ”நாங்கள் உங்கள் ஆட்சியில் அதிருப்தியாய்
இருக்கிறோம். அதனால் ஒரு சிறிய அளவில் தோற்கடிக்கிறோம். ஆனாலும் மற்றொரு வாய்ப்பு தருகிறோம்”
என்பதே மக்கள் இப்போது அதிமுகவுக்கு விடுக்கும் எச்சரிக்கை.
மிகப்பெரிய அடி மக்கள் நலக் கூட்டணிக்கு
தான். அதிமுகவே இருக்கும் போது அதன் பி அணிக்கு எதற்கு தனியாய் வாக்களிக்க வேண்டும்
என மக்கள் நினைத்து விட்டார்கள் போல. மநகூ திமுகவை தாக்கும் முனைப்பை குறைத்து தம்மை
உண்மையிலேயே ”மாற்றாய்” முன்வைத்திருக்க வேண்டும். அடுத்தமுறை வை.கோ போன்று காழ்ப்புணர்வு
மிக்க ஒரு குழப்பவாதியுடன் கட்சிகள் இணையக் கூடாது. அவர் இக்கூட்டணியின் தொனியையே தவறாக
மாற்றி விட்டார். அவர் திமுக தெமுதிகவுக்கு பணம் கொடுத்து இழுக்கப் பார்த்தது என பேசியிராவிட்டால்
அவருக்கு அதிமுகவால் கொடுக்கப்பட்ட கோடிகளின் கதை வெளியே வந்திருக்காது.
விஜயகாந்தின் பொழுதுபோக்கு பேச்சை
மக்கள் பெருமளவில் ரசித்தார்கள். ஆனால் அவருடைய உடல்நலம், அவர் பேச்சில் உள்ள தடுமாற்றம்,
குழறல், மேலும் கட்சிக்குள் அவரது நிர்வாகிகள் இடையில் உள்ள் அதிருப்தி என பலவிசயங்கள்
மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தி இருக்கலாம். வி.சி.க அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.
விஜயகாந்துடன் திருமா கைகோர்த்தது அவரது கட்சியினருக்கே அதிருப்தி ஏற்படுத்தி இருந்ததை
கவனித்தோம். வி.சி.க இப்போதைக்கு தன்னை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக முன்வைக்காமல்
வேர்களுக்கு திரும்புவதும், மக்களோடு தோள்கொடுத்து பணியாற்றுகிற தலைவர்களை உருவாக்குவதும்
முக்கியம்.
அடுத்த தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு
இவ்வளவு கருணை காட்ட மாட்டார்கள்!