புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ரா என பெரும்பாலான நவீன கதையாளர்களின் படைப்புகளில் சுட்டியான, நினைவில் தங்கி நிற்கிற குழந்தைகள் வந்து போகிறார்கள். ஒப்பிடுகையில் தமிழ் நவீன கவிதையில் குழந்தைகள் குறைவே. ஒரு காரணம், நவீன கவிதை தன்னிலையில் நின்று பேசுவது. மேலும் கவிதையில் ஒரு குறிப்பிட்ட பார்வை, பரிமாணம், அதன் குறிப்புத்தன்மை தான் முக்கியம். கதைகளில் ஒன்றோடொன்று முரண்கொண்டு மோதும் பார்வைகள், தரப்புகள் இருக்கும். உதாரணமாய், “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” கதையில் கந்தசாமிப்பிள்ளை, பூமிக்கு வரும் கடவுள் ஆகியோருக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு துடிப்பான, வாழ்க்கையை அதன் முழு வெளிச்சத்தில் காண்கிற தரப்பு கந்தசாமிப்பிள்ளையின் குழந்தையுடையது.