இந்த புத்தகத்தை நான் சிறுகுறிப்புகளாக கடந்த சில ஆண்டுகளாக எழுதி வந்தேன் . ஆனால் ஒரு முழு புத்தகமாக தொகுக்கும் போது ஒரு பயம் எட்டிப்பார்த்தது . அந்த பயம் ஒரு பெரும் அச்சமாக உருவெடுத்தது . நான் இந்நூலை எழுத ஆரம்பித்த போது இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் கண்டிக்கப்படுவதும் மிரட்டப்படுவதுமே நடந்தது , அது பின்னர் விசாரணை , சிறைவாசம் , படுகொலைகள் என பலவிதமான தண்டனைகளின் வடிவெடுத்தது , இப்போது எதிர்க்கிறவர்கள் எல்லா இடங்களில் இருந்தும் முழுமையாக காணாமல் அடிக்கப்படுகிறார்கள் . இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் இன்று தேசத்தை எதிர்க்கிறவர்களாக , ஒரு பொது துரோகியாக கட்டமைக்கப்படுகிறார்கள் ; மக்கள் இந்த கட்டமைத்தலை எந்தளவுக்கு உள்வாங்கி உள்ளார்கள் என்றால் அதைத் தமது இயல்பான சுபாவமாக மாற்றிக்கொண்டுள்ளார்கள் . நான் இப்போது வாழ்ந்து வரும் மாநிலத்தில் இந்த அரசை விமர்சிக்கிறவர்களை முன்பை விட மிக மிகக் குறைவாகவே காண்கிறேன் . முன்பு வெளிப்படையாக சாடியவர்கள் இன்று அமைதி காக்கிறார்கள் . அவர்கள் தம்மை யாரோ கண்காணிப்...