அஜீத் மாம்பள்ளியின் ” லாட்ஜ்” மறைந்த மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான பி.பத்மராஜனின் ”கோர்ட் விதிக்கு சேஷம்” (நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு) என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டது. இது ஒரு மலையாளப் குறும்படம். இப்படத்தின் கதை ஒரு குறும்படத்துக்கு சிக்கலானது. ஆனால் அஜீத் மாம்பள்ளி மிக சாமர்த்தியமாகவும், திறமையாகவும் கதைசொல்லலை கையாண்டுள்ளார். உதாரணமாக இக்கதை ஆரம்பத்தில் ஒரு ஆசாரியான காதலனை நமக்கு அறிமுகப்படுத்தி அவனை சுற்றியே மையம் கொள்கிறது. எளிய மனம் கொண்ட பத்தாம்பசலி அவன். ஒரு கொலைக் குற்றத்தில் வீணாக மாட்டி சிறைக்கு செல்கிறான். இந்த அநீதியை தான் கதை பேசப் போகிறது என்று நீங்கள் நினைத்தால் கதாநாயகி அறிமுகமாகி கதை ஓட்டத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்கிறாள். அவள் பாலியல் ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாதவள். “உலகின் மாபெரும் உணர்ச்சி பசி எனப்படுகிறது. அது உண்மையல்ல. உலகில் இரு உணர்வுகள் உள்ளன. ஒன்று சுகம். மற்றொன்று துக்கம்.” என்கிறாள். ஏறத்தாழ பத்மராஜனின் பெண் பாத்திரங்கள் இப்படி பாலியல் ஒழுக்கங்களை மீறி எழ எத்தனிப்பவர்களே. அவர்கள் ஆண்மையின் அதிகார தழலுக்குள் விழுந்து விடாமல் இருப்பதில் மிக கவனமானவர்...