Lagya balai - லக்யா பலாய் - உன் வலி வேதனைகளை எனக்குத் தந்துவிடு ! என் தங்கையின் ( கஷ்மீரி ) மாமியார் அவளைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் உரையாடத் துவங்குமுன் சொல்லும் உளப்பூர்வமான முகமன் இது . கேட்கும் போதெல்லாம் நடைமுறைப்படுத்த இயலாதே என்ற ஆதங்கம் கொள்ளச் செய்யும் , இதை விடவும் அதி உன்னதமான வாழ்த்து உலகில் இருக்குமா என்று உருக வைக்கும் சொற்கள் . வலி எத்தனை உக்கிரமான உணர்வாக , வாழ்வை , அதன் தரத்தை நிர்ணயிக்கும் , மாற்றிப் போடும் விசையாக இருக்கிறது என்பதைத் தன் ஆங்கில இலக்கியப் புலமை , அங்கதச்சரளம் , கவிதைமொழி எல்லாமும் இழைந்த நடையில் அபிலாஷ்சந்திரன் பேசும் நாவல் கால்கள் . தொடர்ந்து வலியும் வாதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி மதுக்ஷரா . அவள் குடும்பம் , கல்வி , நட்பு , சமூகத்தில் அவளுடைய நிலை இவற்றோடு வலியை , உடற்குறைப்பாட்டை , நோயை மையமாகக் கொண்ட நாவலானாலும் பாத்திரங்களின் அசல்தன்மையும் , வெளிப்பாட்டின் கலைத்தன்மையும் , 552 பக்கங்களை களைப்பின்றி பின்தொடர வற்புறுத்துக...