எழுத்தாளர்களை விட வாசகர்கள் அதிக அறிவாளிகள் என்பது என் அனுமானம். எழுத்தாளர்களுக்கு தம் அறிவை இன்னும் புத்திசாலித்தனமாக, தர்க்கபூர்வமாக, கூர்மையாக வெளிப்படுத்த தெரிகிறது. அவர்களிடத்து இந்த மொழி தரும் ஒரு தன்னம்பிக்கை இயல்பாக இயங்குகிறது. ஆயிரமாண்டு அறிவையும் நுண்ணுணர்வையும் தன்னிடத்து கொண்டுள்ள மொழியில் புழங்கும் போது இயல்பாய் அவற்றை கடன் பெறும் எழுத்தாளன், ஒவ்வொரு சொல்லின் பின்னும் தான் எதிர்கொண்ட ஐரோப்பிய கல்வியின் செறிவை கண்டுள்ள எழுத்தாளன் தன் எதிரில் தேரும் கவச குண்டலமும் அற்று நிற்கும் வாசகனை விட மேலானவனாக தன்னை காட்டி விட இயலும். அது உண்மையில் எழுத்தின் வன்மை. எழுத்தாளனின் மேன்மை அல்ல.