முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“தங்கமீன்கள்” மற்றும் “பம்பாய்”: காட்சியும் செய்தியும்



சினிமாவில் ஒரு காட்சி ஒரு செய்தியை சொல்லும் பட்சம் அமைக்கப்படுகிறது. அந்த செய்தி எப்படி சொல்லப்படுகிறது என்பது தான் அக்காட்சியை சுவாரஸ்யமாக அழகாக மாற்றுகிறது. இப்படியான காட்சிகளை உருவாக்கத்தான் பட விவாதங்களின் போது மண்டையை பிய்க்கிறார்கள். இதை “சீன் பிடிப்பது” என்கிறார்கள். ஒரு காட்சி ஒரு செய்தியின் பல்வேறு பரிமாணங்களை காட்டுவதாய், ஆழத்தை நோக்கி பயணிப்பதாய் இருக்கலாம். “தங்கமீன்களில்” குழந்தை செல்லம்மா வெளியூரில் இருக்கும் அப்பாவைத் தேடி வீட்டிற்கு சொல்லிக் கொள்ளாமல் பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்கிறாள். அவளைத் தேடி வீட்டார் பல இடங்களில் அலைகிறார்கள். பிறகு ஒரு கடைக்காரர் அவளை அழைத்துக் கொண்டு வீட்டில் விடுகிறார். இப்படி அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப் போவது அவள் வழக்கம் என்பதால் “சரியான காரணம் சொல்லி விட்டு அவள் உள்ளே வந்தால் போதும்” என்கிறார் பாட்டி. அதுவரை அவளை உள்ளே விட வேண்டாம் என்று செல்லம்மாவின் அம்மாவிடம் கூறுகிறார்.


 தாத்தா பாட்டியின் அதிகாரத்தின் கீழ் வாழ்வதால் அம்மாவுக்கும் வேறு வழியில்லை. அவளை வாசலுக்கு வெளியே நிறுத்தி கோபமாய் விசாரிக்கிறாள். இந்த காட்சியில் மூன்று சட்டங்கள் (frames) இருக்கும். ஒன்று வீட்டின் உள்வாசல். அதில் சாய்ந்து நிற்கும் பாட்டி. அடுத்த வெளிவாசல். அதை ஒண்டி நின்று கேள்வி கேட்கும் அம்மா. அடுத்து வெளி சட்டகம். அதாவது வாசலுக்கு வெளியே நிற்கும் செல்லம்மா. மிக அழகான காட்சி அமைப்பு இது. செல்லம்மா ஏன் தன் அப்பாவைத் தேடி பேருந்து ஏறி தனியாக வெளியூருக்கு போகத் துணிந்தாள் என்பதைக் கூறும் அதே நேரம் இக்காட்சி எப்படி அந்த வீடு எனும் அமைப்புக்குள் மூன்று பெண்களும் மூன்று நிலைகளில் அடைபட்டிருக்கிறார்கள் எனக் காட்டுகிறது. பாட்டி வீட்டின் உள் அடுக்கில் அதிகார உச்சத்தில் இருக்கிறாள். ஆனாலும் அவள் அந்த வீட்டுக்குள் அதன் விதிமுறைகளுக்குள் அடைபட்டிருக்கிறாள். அவள் உருவாக்கும் விதிமுறைகளுக்குள் மருமகள் அடுத்த frameஇல் அடைபட்டிருக்கிறாள். இருவரும் சட்டகத்தின் வெளியே நிற்கும் செல்லம்மாவை ஒழுக்கப்படுத்த முயல்கிறார்கள். செல்லம்மா பற்றிய செய்தியை கூறும் அதேவேளையில் இக்காட்சி குடும்ப அமைப்பின் அதிகாரம், அதனுள் பெண்களே எப்படி பிற பெண்களை ஒடுக்குகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளில் ஒன்று இது. இப்படியான காட்சியை உருவாக்க இயக்குநருக்கு ஒரு தனி பார்வை வேண்டும். அப்பார்வையே கதைகூறும் எளிய நோக்கத்தை கடந்து படக்கருவியின் கோணத்தை தீர்மானிக்கிறது.

ஆனால் தமிழ் சினிமா பொதுவாக மிக வேகமாய் நகர்வது. மேற்சொன்ன வகை காட்சி இங்கு அரிதானது. சுமார் 15 நொடிகளுக்குள் ஒரு செய்தியை முற்றிலும் வித்தியாசமாக காட்ட வேண்டும். இவ்வகையில் ஒரு காட்சியை பாத்திரத்தின் மனநிலையை அல்லது சூழலையும் கூட சேர்த்து சொல்வதாகவும் சித்தரிக்கலாம். மணிரத்னம் இவ்வகையான பல நல்ல காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். ஒரு பெண் தன் “உண்டாகியிருப்பதை” எப்படி சொல்ல? பொதுவாக அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுப்பாள். அதைப் பார்க்கும் நாயகன் வியப்பாக நோக்க அவள் வந்து வெட்கமுடன் ஆமாம் என்பாள். அவன் குதூகலத்தில் அவளை வாரியெடுப்பான். ஒரு பாடல் காட்சி இதைத் தொடரும். இது ஒரு தேய்வழக்கு. “பம்பாயில்” இத்தேய்வழக்கை சற்றே மீறி இருப்பார்கள். மனிஷா பயந்த சுபாவம் கொண்ட பெண். காதலனுடன் ஓடி வந்து பம்பாயில் ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கிறார். பத்திரிகையாள கணவன் அரவிந்த சாமி மிக அவசரமாக ஒரு அறிக்கை எழுதிக் கொண்டிருக்கிறான். தொந்தரவு செய்தால் அவனுக்கு பிடிக்காது. இது ஒரு கச்சிதமான மத்திய வர்க்க சூழல். யாரும் நேரமில்லை. இரைச்சல். அவசரம். இதனிடையே தான் ஒரு பெண் கர்ப்பமாகியிருக்கும் இனிய சேதியும் தெரிவிக்கப்பட வேண்டும். சுமூகமான விசயம் சுமூகமற்ற சூழலில் சொல்லப்பட வேண்டும். மேலும் மனிஷாவுக்கு குடும்ப ஆதரவு இன்றி ஒரு அந்நிய நகரத்தில் எப்படி தனியே குழந்தைப் பெறப் போகும் என நடுக்கம் இருக்கலாம். நெருக்கடி தான் இந்த காட்சியின் mood. கர்ப்ப செய்தியை சொல்வதுடன் இதையும் காட்ட வேண்டும். மனிஷா கணவனிடம் வந்து தனக்கு பத்து வினாடிகள் வேண்டும் என்கிறாள். அவன் அவள் வழக்கம் போது ஏதோ அன்றாட பிரச்சனையை கொண்டு வருகிறாள் என நினைத்து அவளை பிறகு வர சொல்கிறான். அவள் மீண்டும் அவகாசம் கேட்கிறாள். எரிச்சலாய் “சரி சொல்லு” என்கிறான். அவள் சொல்ல எத்தனிக்க வார்த்தைகள் தடுமாறுகின்றன. அப்போது பார்த்து அடுக்களையில் குக்கர் விசில் அடிக்கிறது. பதற்றமாய் அங்கு ஓடுகிறாள். குக்கரை எடுக்க முயன்று கை சுட்டு விட கீழே போடுகிறாள். பதற்றம் அதிகம் ஆக மேலும் சில பாத்திரங்களை கீழே போடுகிறாள். கணவன் அங்கு வருகிறான். “உங்க கிட்ட பத்து நொடி தானே கேட்டேன். அப்பவே கேட்டிருந்தா இப்படி எல்லாம் ஆகியிருக்காதே” என மென்மையாய் கோபிக்கிறாள். கோபத்தை விட சங்கடம் தான் அவளை ஆக்கிரமித்திருக்கிறது. அவன் என்ன விசயம் எனக் கேட்கிறான். அவள் நெருங்கிப் போய் அவன் காதில் சொல்கிறாள். அவன் ஆச்சரியமாய் குழப்பமாய் பார்க்கிறான். இந்த இடத்தில் இக்காட்சியை முடித்திருந்தால் உலகத்தரமாய் இருந்திருக்கும். ஆனால் தமிழ் சினிமா ஆயிற்றே! கணவன் காதில் முணுமுணுத்ததை எப்படி பார்வையாளர்களுக்கு சொல்ல? அதனால் மனிஷா அடுத்து தன் வயிற்றை தடவிக் காட்டுகிறாள். கணவனின் கையை எடுத்து அங்கே வைக்கிறாள். அவள் முகம் பூரிப்பதை நெருக்கமாய் காட்டுகிறார்கள். இப்போதும் இது நல்ல காட்சி தான், கொஞ்சம் தேவையின்றி நீட்டிக்கப்பட்டு விட்டது. வணிக திரைக்கதை காட்சிகளை எப்படி இவ்வாறு தரமாகவும் உருவாக்குவது என்பதில் சுஜாதா ஒரு ஆசான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...